(எஸ்ஐஓ தமிழ்நாடு சார்பாக 29 ஜூன் 2024 அன்று நடைபெற்ற தஃவா பயிற்சி வகுப்பில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

(முதல் பகுதியை வாசிக்க)

பைபிள்

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் என்பது யூத மற்றும் கிறிஸ்தவ மத நூல்களின் தொகுப்பாகும். இது பழைய ஏற்பாடு எனும் 39 புத்தகங்களையும் புதிய ஏற்பாடு எனும் 27 புத்தகங்கள் உள்ளடக்கியது. இதில் மதப்பிரிவுகள், கையெழுத்து பிரதிகள் மற்றும் மொழியியல் சார்ந்து பல முரண்பாடுகளும் காணப்படுகின்றன. அவை,

  • ஹீப்ரு பைபிள் – கிறிஸ்தவ பழைய ஏற்பாடு: பெரும்பாலும் ஒத்திருந்தாலும், வரிசை மற்றும் உள்ளடக்கத்தில் சில வேறுபாடுகள் உள்ளன.
  • புராட்டஸ்டன்ட் – கத்தோலிக்க பைபிள்கள்: பெரும்பாலும் ஒத்திருந்தாலும், கத்தோலிக்க பைபிளில் யூத மதத்தின் கிரேக்க மொழிபெயர்ப்பு வரிசையில் (Septuagint) இடம்பெற்றுள்ள டியூட்டெரோகெனோனிக்கல் எனும் கூடுதல் நூல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை ஹீப்ரு பைபிளில் இடம்பெறவில்லை.
  • பாரம்பரிய கையெழுத்துப் பிரதிகள்: பைபிளின் உரைகள் பல நூற்றாண்டுகளாக கையால் நகலெடுக்கப்பட்டுள்ளன. அப்படி நகலெடுக்கும் எழுத்தாளர்கள் தவறுகளை அதில் உண்டாக்கினர். இறையியல் கருத்துகளுக்கு தங்களது நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விளக்கங்களை எழுதினர். இதனால், கையெழுத்துப் பிரதிகளுக்கு இடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக, திரித்துவத்தை நிரூபிக்கும் “1 யோவான் 5:7 (KJV Bible)” என்ற வசனம் RSV மற்றும் அதற்குப் பிந்தைய மொழிபெயர்ப்புகளில் இடம்பெறவில்லை.
  • மொழியியல் வேறுபாடுகள்: பைபிளின் மூல மொழிகளாக ஹீப்ரு, அராமைக் மற்றும் கிரேக்க மொழிகள் உள்ளன. இவற்றிலிருந்து பல மொழிபெயர்ப்புகள் உருவாகின. அதனுடன் சேர்த்து மாறுபட்ட விளக்கங்களும் தோற்றின.

கிறிஸ்தவ வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள்

ஆரம்பகால தேவாலயம்: இயேசுவும் அவருடைய சீடர்கள் அனைவரும் யூதர்களாக இருந்தனர். எனவே, முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் உள்ளூர் யூத ஜெப ஆலயங்களையே பயன்படுத்தினர். அதனால், ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயம் ஜெருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள யூத பாரம்பரியத்திலிருந்து வளர்ந்தது.

புனித பவுல் ஆரம்பகால தேவாலயத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இயேசுவின் நற்செய்தி யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமானது என்று அவர் நம்பினார். இந்த நம்பிக்கையே ஐரோப்பா, ஆப்பிரிக்கா உட்பட ரோமானியப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களை அமைக்க பவுலை வழிநடத்தியது.

துன்புறுத்தல் தொடக்கம்: ரோமானிய பேரரசில் அரசரை கடவுளாக வணங்கும் நம்பிக்கை இருந்தது. பேரரசரின் சிலையின் முன் நின்று, “சீசர் தான் இறைவன்” என்று கூறி பேரரசுக்கு விசுவாசத்தைக் காட்டினர். மேலும் சில வழிமுறைகளிலும் அரசரை வழிபட்டனர். ஆனால், யூதர்கள் இதுபோன்ற செயல்களில் தங்களை ஈடுபடுதிக்கொள்ளவில்லை.

முதலில் ரோமானியர்கள் கிறிஸ்தவர்களை யூதர்களைப் போன்றவர்கள் என்றே நினைத்தனர். ஆனால், யூதர்கள் அல்லாதவர்கள் மேலும் மேலும் கிறிஸ்தவர்களாக மாறியதை கண்ட ரோமானியர்கள் கிறிஸ்தவர்களை தங்களுக்கான அச்சுறுத்தலாக பார்த்தனர். அதன் காரணமாகவும், அவர்களின் நம்பிக்கையின் காரணமாகவும் ரோமானிய அதிகாரிகளால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தவும் பட்டார்கள்.

ரோமானியர்களின் துன்புறுத்தல்கள் தொடர்ந்தபோதிலும், கிபி 2,3ஆம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவம் சீராக விரிவடைந்தது. இந்த காலகட்டத்தில் தான் கிறிஸ்தவத்தின் இறையியல், சமய கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள் ஆகியவை வரையறை செய்யப்பட்டு முக்கிய வடிவத்தை அடைந்தன.

கிபி 4ஆம் நூற்றாண்டு: இந்த காலகட்டத்தில் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைனின் மதமாற்றம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. மிலன் அரசாணை அதிகாரப்பூர்வ துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கிறிஸ்தவத்திற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியது. நைசியா கவுன்சிலால் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தை தன்மை போன்ற முக்கிய கோட்பாடுகளும் முடிவுகளும் இந்த காலகட்டத்தில் தான் வரையறுக்கப்பட்டன.

கிபி 5 முதல் 10ஆம் நூற்றாண்டு வரை: கிபி 1054ஆம் ஆண்டு பிரம்மாண்டப் பிளவு (Great Schism) எனும் முக்கிய நிகழ்வு கிறிஸ்தவ வரலாற்றில் ஏற்பட்டது. இதன் மூலம் கிழக்கு ஆர்த்தடாக்ஸ் மற்றும் மேற்கத்திய கத்தோலிக்கம் எனும் இருபெரும் பிரிவுகள் உண்டாயின.

மடாலயங்கள் செழித்து வளர்ந்தன. மேலும், அவை கற்றல் மற்றும் ஆன்மிக மையங்களாகவும் மாற்றம் அடைந்தன. ஐரோப்பாவை தாண்டியும் கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்தது.

கிபி 11 முதல் 15ஆம் நூற்றாண்டு வரை: ஜெருசலேமை மீட்டெடுத்தல் என்கிற பெயரில் ஐரோப்பிய கிறிஸ்தவர்களால் சிலுவைப் போர்கள் நடைபெற்றன. இக்காலகட்டத்தில்தான் ஐரோப்பாவில் உள்ள தேவாலயங்கள் மிகப்பெரிய செல்வாக்கை அடைந்தன.

கிபி 16ஆம் நூற்றாண்டு: புராட்டஸ்டன்ட் எனும் சீர்திருத்த இயக்கம் மார்டின் லுதரின் கொள்கைகளை முன்னிறுத்தி உருவானது. இந்த இயக்கம் திருச்சபையின் அதிகாரத்தை எதிர்த்து கேள்விகளை முன்வைத்தது.

கிபி 17 முதல் 19ஆம் நூற்றாண்டு வரை: கத்தோலிக்க திருச்சபையால், புராட்டஸ்டன்ட் இயக்கத்திற்கு எதிர்வினை ஆற்றும் பொருட்டு எதிர் சீர்திருத்த இயக்கம் (Counter-Reformation) உருவாக்கப்பட்டது. திருச்சபையின் அதிகாரத்தை நிலைநிறுத்துதல், கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் போன்ற பணிகளை இவை மேற்கொண்டன. ஐரோப்பிய காலனித்துவமும், அதன் பலத்தினாலும் உலகளாவிய அளவில் கிறிஸ்தவத்தின் பரவல் அதிகரித்தது.

சமூக நற்செய்தி இயக்கம் போன்ற புதிய இயக்கங்கள் சமூக நீதி மற்றும் விசுவாசத்தின் தனிப்பட்ட அனுபவத்தை வலியுறுத்தும் இயக்கங்களாக கிறிஸ்தவத்திற்குள் உருவாகின.

19ஆம் நூற்றாண்டுக்குப் பின்: உலகப் போர்களும் மதச்சார்பின்மையும் சில பகுதிகளில் மத செல்வாக்குகளை குறைத்தன. உலகமயமாக்கலுக்குப்பின், புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் கிறிஸ்தவத்திற்கு உண்டாயிற்று.

முக்கிய கிறிஸ்தவ கோட்பாடுகளின் மீது இஸ்லாமிய நிலைப்பாடு

இறைவனின் கடைசி வேதமான அல்குர்ஆன், பைபிளில் உள்ள ஆதி பாவம், திரித்துவம், பிராயச்சித்தம் போன்ற கிறிஸ்தவ கோட்பாடுகளை குறித்து நேரடியாக பேசாவிட்டாலும் அவை தொடர்புடைய கருப்பொருள்களைத் தொடும் குர்ஆனிய வசனங்களை உள்ளடக்கயுள்ளது. அவை,

  • குர்ஆன் ஆதாம் மற்றும் ஏவாளின் கதையை குறிப்பிடுகிறது (குர்ஆன் 2:35-39 & 7:19-24). இவ்வசனங்களின் வழி கடவுளின் கருணை மற்றும் மன்னிப்பை குர்ஆன் முன்னிறுத்துகிறது. பாவம் என்பது தலைமுறைகளுக்கு கடத்தப்படாது என்றும் அவரவர்களே தங்களின் செயல்களுக்கு பொறுப்பு என்றும் கூறுகிறது. (குர்ஆன் 6:164)
  • கடவுளின் இருப்பை ஏகத்துவம் (ஒரே கடவுள்) என்னும் பண்பின் மூலம் குர்ஆன் நிறுவுகிறது. குர்ஆனின் 112ஆவது அத்தியாயம் (சூரா அல் இக்லாஸ்) இதை குறித்து இன்னும் தெளிவாக பேசுகிறது. இது திரித்துவம் எனும் கிறிஸ்தவ கருத்தாக்கத்துடன் முரண்படுகிறது. (குர்ஆன் 5:73,116)
  • இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்றும், நேரடியாக அவர் சொர்க்கத்திற்கு உயர்த்தப்பட்டார் என்றும் குர்ஆன் கூறுகிறது. (குர்ஆன் 4:157-158)
  • இயேசுவின் தியாகம் மனிதகுலத்தின் பாவத்தை மீட்டெடுக்கும் பிராயச்சித்தம் எனும் கருத்து குர்ஆனில் இல்லை. இஸ்லாத்தில் மன்னிப்பு என்பது உண்மையான மனந்திருந்துதல் மற்றும் கடவுளின் கருணை மூலம் மட்டுமே கிடைக்கும். (குர்ஆன் 39:53)
  • பைபிளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து குர்ஆன் வெளிப்படையாக கூறுகிறது. முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதாகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது. (குர்ஆன் 2:75, 3:78)