பாலஸ்தீன்- இஸ்ரேல் பிரச்சனை விவாதத்திற்குள்ளாகும் ஒவ்வொரு முறையும் பாலஸ்தீன தரப்பில் கேள்விப்படும் இரு பிராதனக் குழுக்கள் ஹமாஸ் மற்றும் ஃபத்தாஹ்.
யார் இவர்கள்? இவர்களுக்கு மத்தியிலான உடன்பாடுகள் மற்றும் வேறுபாடுகள் என்னென்ன என்று அலசுகிறது இக்கட்டுரை.

ஹமாஸ்-ஃபத்தாஹ் எவ்விதத்தில் வேறுபடுகின்றன?

பாலஸ்தீனின் அரசியல் தளத்தில் ஹமாஸ் மற்றும் பாத்தாஹ் ஆகிய இரண்டுமே பெரும் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளாக உள்ளன.

கடந்த 2007 ஆம் ஆண்டில் இவ்விரு அமைப்புகளிடையே ஆயுதப் போரால் ஏற்பட்ட பிளவை ஒரு முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை அமைத்துள்ளதாக வியாழக்கிழமை அன்று அறிவித்துள்ளார்கள்.

பாராளுமன்றத் தேர்தல்களில் நீண்டகாலமாக ஆட்சி செய்துவந்த ஃபத்தாஹ் கட்சியின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவர்களைத் தோற்கடித்த பின்னர், 2007 ஆம் ஆண்டிலிருந்து ஹமாஸ்தான் காஸா பகுதியில் நிலையாகவும் வலிமையாகவும் ஆட்சி செய்து வருகின்றது. அதேநேரம் மேற்குக்கரை பகுதி தொடர்ந்து ஃபத்தாஹின் ஆளுகையின் கீழே நீடித்து வருகின்றது.

ஹமாஸ் மற்றும் ஃபாத்தாஹ் ஆகியவற்றுக்கிடையே இருக்கும் முதன்மை வித்தியாசங்களை பார்க்கலாம்:

சித்தாந்தம்:
ஹமாஸ் – இஸ்லாம்
ஃபத்தாஹ் – மதச்சார்பின்மை

இஸ்ரேலை கையாளும் முறை:
ஹமாஸ். -ஆயுத எதிர்ப்பு
ஃபத்தாஹ் – பேச்சுவார்த்தைகள்

குறிக்கோள்கள்:
ஹமாஸ் – இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை. ஆனால் 1967 போருக்கு முந்தைய நிலபரப்பு எல்லைக்கோட்டின்படி பாலஸ்தீனத்தை ஏற்றுக்கொள்கிறது.
ஃபத்தாஹ் – இஸ்ரேலை அங்கீகரிக்கிறது. 1967-ஆம் ஆண்டு நடந்த போருக்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன தேசத்தை உருவாக்க விரும்புகிறது.

ஹமாஸ் மற்றும் ஃபத்தாஹ் கட்சிகள் முறையே பாலஸ்தீன பிராந்தியங்களான காஸா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக்கரையை ஆட்சி செய்து வருகின்றன. 2006-ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாலஸ்தீன் பாரளுமன்ற தேர்தலில் ஹமாஸ் வெற்றிப்பெற்றது. ஆனால் தேர்தல் முடிவை ஃபத்தாஹ் ஏற்றுக்கொள்ள மறுத்த போது, வெற்றிப்பெற்ற ஹமாஸ் காஸாவை விட்டு ஃபத்தாஹை வெளியேற நிர்பந்தித்தது. இதனால் இருகட்சிகளுக்கும் மோதல் வெடித்தாலும், சில ஆண்டுகளுக்கு பின்னர் அவை ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டன.

வழிமுறைகளில் முற்றிலும் வேறுபாடுகள் நிலவினலும் இருகட்சிகளின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது. 1967 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற ஆறு நாட்கள் போரில் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு சொந்தமான பெரும் நிலபரப்பை அபகரித்தது. அபகரிக்கப்பட்ட இந்த நிலபரப்புகளுடன் தற்போதைய
கிழக்கு ஜெருசேலம், காஸா பகுதி மற்றும் மேற்குக்கரை ஆகியவற்றை உள்ளடக்கிய பாலஸ்தீன தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே இரு கட்சிகளின் நோக்கமாகும். ஆறு நாட்கள் போருக்கு முந்தைய எல்லைக்கோட்டின் அடிப்படையிலேயே பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இருக்க வேண்டும் என்று இவை இரு கட்சிகளும் கருதுகின்றன.

ஃபத்தாஹ்:

ஃபத்தாஹ்(Fatah) என்பது ஹரகத் அல் தஹ்ரீர் அல் பிலிஸ்டீன்யா(Haraqat altahrir al Falestiniya). ஆங்கிலத்தில் இப்பெயரின் பின்னிருந்து சுருக்கம்(Reverse Acronym) தான் Fatah. ஃபாத்தாஹ் என்ற அரபுச்சொல்லுக்கு வெற்றி என்றும் பொருள்.

யூத தேசத்தை உருவாக்கம் தீவிரத்தில் ஸியோனிச வெறியர்களால் 1947ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனசுத்திகரிப்பு -நக்பா-விற்கு பின்னர் 1950களின் பிற்பகுதியில் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களால் குவைத்தில் உருவாக்கப்பட்டது மதசார்பற்ற ஃபத்தாஹ்.
ஃபத்தாஹ் பல முக்கிய பிரமுகர்களால் நிறுவப்பட்டது. பாலஸ்தீன ஆணையத்தின் மறைந்த தலைவர் – யாசர் அராஃபத், அவரது உதவியாளர்கள் கலீல் அல் வஜீர் மற்றும் சலாஹ் கலஃப் மற்றும் தற்போதைய பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.
வரலாற்று சிறப்புமிக்க பாலஸ்தீனத்தை ஆயுதப் போராட்டத்தின் மூலம்
இஸ்ரேலிடமிருந்து விடுவிப்பதே இந்த இயக்கம் இலக்காக முன்வைக்கப்பட்டது.

இக்குழுவின் முக்கிய ராணுவ பிரிவு அல் அசிஃபா(புயல்). அல் அசிஃபாவின் போராளிகள், பல்வேறு அரபு நாடுகளை சார்ந்தவர்களாக மட்டுமின்றி மேற்க்குக்கரை மற்றும் காசாவை சார்ந்தவர்களாகவும் இருந்தனர்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான இக்குழுவின் ஆயுதப்போராட்டம் 1965-ல் துவங்கியது. இப்போராட்டங்கள் பெரும்பாலும் ஜோர்டான் மற்றும் லெபனானில் இருந்து நடத்தப்பட்டன.

1964 ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தை விடுவிக்கும் நோக்கத்தில் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO)
உருவாக்கப்பட்டது. இன்றும் கூட ஐக்கிய நாடுகளின் சபையில் பலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறது PLO. 1967-ம் ஆண்டு நடைப்பெற்ற அரபு இஸ்ரேலிய போருக்குப் பிறகு பல ஃபலஸ்தீனிய கட்சிகளை உள்ளடக்கிய பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (Palestinian liberation organisation – PLO) யாசர் அராஃபத்தின் கீழ் இயங்கிய ஃபத்தாஹ் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பாக மாறியது.

1970 மற்றும் 1980 களில் ஜோர்டான் மற்றும் லெபனானிலிருந்து வெளியேற்றப்பட்ட இவ்வியக்கம் ஆயுதப்போராட்டத்தின் வீரியத்தை குறைத்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் பாதையை நோக்கி நகர்ந்தது. அரபியர்கள் கொடுத்த அழுத்தமே ஃபத்தாஹின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்று குறிப்பிடுகிறார் மேற்குக்கரையின் அரசியல் விமர்சகர் நஷாத் அல் அக்தஷ்.

1990-களில், ஃபத்தாஹ் தலைமையிலான பி.எல்.ஓ அதிகாரப்பூர்வமாக ஆயுத எதிர்ப்பை கைவிட்டுவிட்டு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 242-ஐ ஆதரித்தது. இது ஆறு நாள் போருக்கு முந்தைய எல்லைகளின்(மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காசா) அடிப்படையில் பாலஸ்தீன் சுதந்திர நாடாக அமைக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தது.

பின்னர், PLO ஒஸ்லோ உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இது பாலஸ்தீனிய தேசிய ஆணையம் (Palestinian National Authority) அல்லது பாலஸ்தீனிய ஆணையத்தை உருவாக்க வழிவகுத்தது. இது ஒரு இடைக்கால சுய நிர்வாக அமைப்பாக இயங்கி ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசாங்கம் உருவாக வழிவகுத்தது.

ஹமாஸ்:-

ஹமாஸ் – ஹரகத் அல் முகவ்வமா அல் இஸ்லாமியா அல்லது இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் என்பதன் சுருக்கமாகும். ஹமாஸ் என்ற சொல்லுக்கு வைராக்கியம் என்று பொருள்.

1987 ஆம் ஆண்டு பாலஸ்தீனிய பிரதேசங்களை இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்ததை எதிர்த்து பாலஸ்தீனர்களின் முதல் இன்திஃபாதா(எழுச்சி) நடைப்பெற்றது. அதற்கு பின்னர் ஒரு சில நாட்களில், ஹமாஸ் இயக்கம் இமாம் ஷேக் அகமது யாசின் மற்றும் அவரது உதவியாளர் அப்துல் அஜீஸ் அல் ரண்டிசி ஆகியோரால் காசாவில் துவங்கப்பட்டது.

இந்த இயக்கம் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவத்தின் பிரிவாக தொடங்கப்பட்டது. மேலும், பாலஸ்தீனத்தை விடுவிக்கும் நோக்கத்துடன் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை தொடர இஜ்ஜத்தீன் அல் கஸ்ஸாம் என்ற படைப்பிரிவை உருவாக்கியது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு சமூக நலத்திட்டங்களை செய்வதில் முன்னனியில் இருந்து வருகிறது.

ஹமாஸ் தம்மை இவ்வாறு வரையறுக்கின்றது. “இஸ்லாத்தை அளவுகோளாக கொண்ட பாலஸ்தீனிய இஸ்லாமிய விடுதலை மற்றும் எதிர்ப்பு இயக்கம்”.

2017ஆம் ஆண்டில் முஸ்லிம் சகோதரத்துவத்துடனான உறவை முறித்துக்கொள்வதாகக் கூறியது. மேலுமது வெளியிட்ட அரசியல் ஆவணத்தில் பாலஸ்தீனிய அகதிகள் திரும்பி வரும் உரிமையுடன் 1967 ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைக்கோடு அடிப்படையில் பாலஸ்தீனை ஏற்பதாக அறிவிப்பு செய்தது. இஸ்ரேல் இல்லாத பாலஸ்தீனை நிர்மாணிப்பதையே விரும்பி ஹமாஸின் பின்னால் நின்ற பலருக்கும் இது அதிர்ச்சியை அளித்தது. உடனடியாக தமது நிலைநிலைபாட்டை தெளிவுப்படுத்திய ஹமாஸ் (ஜோர்டான்) நதியிலிருந்து (மத்தியத்தரை)கடல் வரையிலான நிலப்பரப்புடன் கூடிய பாலஸ்தீனை உருவாக்குவதிலிருந்து எந்தவொரு விட்டுக்கொடுப்பும் சமரசமும் செய்யவில்லை என்றும், ஒட்டுமொத்த மக்களின் ஒருமித்த கருத்து என்ற வகையில் மட்டுமே 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைக்கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன அரசை ஏற்பதாக கூறியாகவும் விளக்கம் அளித்தது.

இஸ்ரேலை நிறுவப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என்று ஹமாஸ் நம்புகிறது. இது ஃபத்தாஹ்விடமிருந்து ஹமாஸ் வேறுபடும் முக்கிய அம்சமாகும். PLO-வில் உறுப்பினராகக்கூட ஹமாஸ் இணையவில்லை என்பது ஹமாஸ் தனது நிலைபாட்டில் உறுதியாக இருப்பதை காட்டுகிறது.

2005ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஓர் அரசியல் கட்சியாக பாலஸ்தீனிய அரசியலில் நுழைந்த ஹமாஸ், 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஃபத்தாஹை வீழ்த்தி மகத்தான வெற்றியைக் கண்டது.

2007- ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஹமாஸ் மற்றும் காஸாவிற்கு எதிராக மூன்று முறை போர் தொடுத்தது. அந்த வருட தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்ற பிறகு இஸ்ரேல் காற்றுப்புகாத அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை(Air Tight Blockade) விதித்தது.

காசாவின் பொதுமக்கள் கடுமையான சண்டையின் சுமைகளை சகித்துக் கொண்டனர்.ஐம்பது நாட்கள் நடைபெற்ற இஸ்ரேலிய தாக்குதலில் 500 குழந்தைகள் உட்பட 2200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களது குறிக்கோள்கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

2017ஆம் ஆண்டில் ஹமாஸ் வெளியிட்ட அரசியல் ஆவணத்தை வைத்துப் பார்க்கும்போது இவ்விரு கட்சிகளின் குறிக்கோளும் 1967 எல்லைகளில் ஒரு பாலஸ்தீனிய அரசை உருவாக்க வேண்டும் என்ற புள்ளியில் இணைகின்றன.

“ஹமாஸ், ஒரு அரசியல் சமரசத்தை ஏற்றுக் கொண்ட பின் அதிலிருந்து பின்வாங்க முடியாது. என்னதான் அது தமது இலக்கு வரலாற்று ரீதியான முழு பாலஸ்தீனம் என கூறினாலும் அதை நோக்கி நகர இயலாது.
அனைத்து பாலஸ்தீனர்களின் கனவும் பாலஸ்தீனத்தை விடுவிக்கவேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் இன்று எதார்த்தமான தீர்வை நோக்கி செயல்படுகிறார்கள். அவர்கள் எதை அடையவேண்டும் என்று நம்பினார்களோ அதற்கு மாறாக, தற்போது எதை அடைய முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்” என்பதாக விளக்குகிறார் அல் அக்தாஷ்.

இரு கட்சிகளின் யுக்திகள் என்னென்ன?

இன்று இவ்விரு இயக்கங்களுக்கு இடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு அவர்கள் எவ்வாறு இஸ்ரேலை அணுகுகிறார்கள் என்பதே.

ஹமாஸ் ஆயுத எதிர்ப்பை பற்றிக்கொண்டு இஸ்ரேலை கையாளுகிறது. ஆனால் ஃபத்தாஹ் முற்றிலுமாக தாக்குதல்களை தவிர்த்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நம்பிக்கை கொள்கிறது.

ஒஸ்லோ உடன்படிக்கைகள் மேற்குக்கரையின் 60 சதவீதத்திற்கும் மேலான பாலஸ்தீனிய பொருளாதாரம், சிவில் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இஸ்ரேலுக்கு முழு கட்டுப்பாட்டை கொடுத்தது.

ஓஸ்லோ ஒப்பந்தத்தின் படி அடிப்படையில் இஸ்ரேலிகளுக்கு எதிராக திட்டமிடப்படும் பாதுகாப்பு மற்றும் ஆயுதத்தாக்குதல்களை முறியடிப்பதில் Palestinian Authority (அதாவது மேற்கு கரையிலிருந்து செயல்படும் ஃபத்தாஹ் தலைமையிலான பாலஸ்தீன அரசு) ஆக்கிரமிப்பு இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட வேண்டும். இது மிகவும் சர்ச்சைக்குரியதாகவும், இஸ்ரேலுக்கு துணைப்போகக் கூடியதாகவும் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதப்போராட்டங்கள் நடைப்பெறும் போதெல்லாம் பாலஸ்தீன அதிபர் முஹம்மது
அப்பாஸ் பகிரங்கமாக கண்டிக்கிறார்.

ஆயுதப்போராட்டத்திற்கு ஹமாஸ் வழங்கும் நியாயத்தை மேற்கு கரையில் இயங்கும் Palestinian Authority ஏற்பதில்லை. இதன் பொருள் PA காசாவில் ஆயுதஎதிர்ப்பை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது. மேலும் ஹமாஸ் அதை மறுக்கிறது. இவ்வளவு வேறுபாடுகள் இருந்தும், இருகட்சிகளும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை சில ஆண்டுகள் நடத்தின. இருப்பினும் 2015 ஆம் ஆண்டு காஸாவில் முழு அளவில்செயல்பட முடியாததால், தமது அரசை மேற்குக்கரையில் மட்டுமே சுருக்கிக் கொள்வதாக அறிவித்தார் முஹம்மது அப்பாஸ்.

எவ்வாறு ஆதரவை திரட்டுகின்றன?

ஹமாஸ் மீதான ஈர்ப்பு அதன் சித்தாந்த பலத்தில் உள்ளது. ஆனால், ஃபத்தாஹ் பொருளாதார பாதுகாப்புடனும் சர்வதேச ஆதரவுடனும் செயல்படுகிறது.

மக்கள் ஆதரவுதளத்தை அதிகரிப்பதில் இவ்விரு இயக்கமும் வேறுபட்ட வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தைப் போலவே ஹமாஸ் பள்ளிவாசல் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களை தங்களின் சித்தாந்தங்களை பரப்பும் இடங்களாக கொண்டிருக்கிறது.

ஃபத்தாஹ் இப்படிப்பட்ட செயல்முறைகளை பெரிய அளவில் செய்வதில்லை. பொருளாதார அடிப்படையிலான உதவிகளை செய்வதன் மூலம் தமது ஆதரவு வட்டத்தை அது பெருக்கிக் கொள்கின்றது.

ஃபத்தாஹின் விசுவாசிகளில் பாதி நபர்கள் அரசிடமிருந்து பொருளாதார ரீதியாக சலுகைகள் பெறுவதோடு ,சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்ற வெகுமதிகளை தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் பெற்றுக் கொள்கின்றனர் என்று அல்அக்தஷ் கூறுகிறார்.
அவர்களின் வாழ்வாதாரம் அரசின் இருப்புடன் இணைந்துள்ளது.

யாசர் அரஃபாத் தான் இப்போதும் ஃபத்தாஹின் பாலஸ்தீனிய தலைவராக பலராலும் பார்க்கப்படுகின்றார். அவரது காலத்தில் ஒஸ்லோ உடன்படிக்கைகளை கையொப்பமிடும் முன் அக்கட்சி ஆயுத எதிர்ப்பையே ஆதரித்தது.
இன்று ஃபத்தாஹின் ஆதரவாளர்கள் பலரும் இவ்வியக்கத்தின் தற்போதைய நிலைபாடுகளை புரிந்து கொள்ளாமல், அவ்வியக்கத்தின் பழைய கோஷங்களை வீதிகளில் எழுப்பி உணர்ச்சிப்பூர்வமாக முழுங்குகின்றனர் என்கிறார் அல் அக்தஷ்.

மறுபுறம் ஹமாஸ் ஒரு முற்றிலும் வேறுபட்ட ஆதாரவாளர்களை கொண்டுள்ளது.
ஹமாஸ் ஒரு தனித்துவமான சித்தாந்தத்தை மக்கள் முன் வைக்குன்றது. இதற்கு நேர்மாறாக ஃபத்தாஹ் பணத்தை உபயோகித்து அதன் ஆதரவாளர்களை பாதுகாத்துக் கொள்கிறது என்று கூறுகிறார் ரமல்லாவை சார்ந்த பத்திரிக்கையாளர் அபுஹெலல்.

(2017ஆம் ஆண்டு அல்ஜசீரா ஆங்கில இணையதளத்தில் வெளியான ஸெனா தஹ்ஹான் என்ற பெண் பத்திரிக்கையாளரின் கட்டுரையை தழுவி எழுதப்பட்டுள்ளது)

ரஸியுத்தீன் சலாமி

முஹம்மது அலி சலாமி

முஹம்மது அஸ்லம்.