தலித்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சிறிய சச்சரவு வந்தாலும் இந்துத்துவர்கள் அதைக் கொண்டாடவும் ஊதிப் பெருக்கவும் தவறுவதில்லை. கெடுநோக்கு கொண்ட இவர்களுக்கு தற்போது பெரும் தீனியாக அமைந்திருப்பது இம்மாதம் 11ம் தேதி கிழக்கு பெங்களூருவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம்.
கர்நாடகாவில் கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பாஜக அரசு 2000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக சமீபத்தில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டினார். அது சம்பந்தமான ஆவணங்களும் விவரங்களும் தன்னிடம் இருப்பதாகக் கூறி, நீதி விசாரணை கேட்டார். அந்த விவகாரமெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு தற்போது பெங்களூரு வன்முறைதான் அம்மாநிலத்தில் ஒரே பேசுபொருள் என்றாகிவிட்டது.
பெங்களூருவில் தலித் தொகுதியான புலிகேசி நகரின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அகந்த சீனிவாச மூர்த்தியின் உறவினர் பி. நவீன் குமார் தன் சமூக ஊடகப் பக்கத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் கார்டூன் வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த வன்முறை அரங்கேறியுள்ளது. தொடக்கத்தில் அவ்வாறு பதிவிட்டது, தான் இல்லை என்றும் தனது கணக்கை ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் கூறிவந்த நவீன், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதனிடையே பஷீர் எனும் முஸ்லிம் கிருஷ்ண ஜெயந்தி அன்று இந்துக் கடவுளர்களைக் கொச்சைப்படுத்தி பதிவிட்டதாகவும் அதற்கு எதிர்வினையாகவே நவீன் தன் பக்கத்தில் கார்டூனைப் பகிர்ந்தார் என்றும் இந்துத்துவர்கள் போலிச் செய்தியை உருவாக்கி பரப்புரை மேற்கொண்டு வந்தனர். அதன் உண்மைத் தன்மையை ஆய்ந்தறிந்து ஆல்ட் நியூஸ் தளம் வெளிக்கொண்டு வந்துள்ளது. (பார்க்க: Was the derogatory post that triggered Bangalore riots a reaction to an ‘anti Hindu’ post?)
கண்டிக்கத்தக்க வகையில் கார்டூன் பதிவேற்றம் செய்த நவீன் ஒரு பாஜக ஆதரவாளராகவும் தொடர்ச்சியாக முஸ்லிம்களை சீண்டும் வகையில் முகநூலில் பதிவிட்டும் வந்துள்ளார். அதையொட்டி வாட்ஸ்அப், அலைபேசியில் விவாதங்கள் செய்வது, முகநூலில் முஸ்லிம் பதிவர்களிடம் வம்பிழுப்பது என அவரது போக்கு இருந்திருக்கிறது. சமீபத்தில் ராமர் கோவில் பூமி பூஜை நடந்தபோது கூட சர்ச்சைக்குரிய விதத்தில் பாபர் மஸ்ஜித் பற்றியெல்லாம் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு வன்முறைக்கான காரணத்தை நவீனின் ஒரு பேஸ்புக் பதிவோடு நாம் சுருக்கிப் பார்க்க முடியவில்லை. இந்துத்துவர்கள் இந்தியாவெங்கும் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தும் வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவுகளாக நவீன் போன்ற இளைஞர்கள் பலர் உருவாக்கப்படுவதை நாம் அடையாளம் காண வேண்டியிருக்கிறது. இப்படி சமூகத்தில் குழப்பத்தையும் குரோத மனப்பான்மையையும் விதைத்து அரசியல் செய்யும் சங்கி வகையறாக்களே அதன் மூலம் ஏற்படும் இதுபோன்ற அத்தனை பிரச்னைகளுக்கும் மூலக் காரணியாக உள்ளார்கள்.
பெங்களூரு சம்பவத்துக்கு மறுநாள் ஒரு பதற்றமான சூழல் கர்நாடகாவில் நிலவியபோது கூட அதை இன்னும் பற்றி எரிய வைக்கும் தீய நோக்குடன் சங்கிகள் இன்னொரு பிரச்சினையை சிருங்கேரியில் உருவாக்க முயன்று பின் அம்பலப் பட்டதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
கடந்த 12ம் தேதி கர்நாடக மாநிலம் சிருங்கேரியில் சங்கராச்சாரியார் சிலையில் பச்சை நிற பேனரை ஒருவன் வீசிவிட்டுச் சென்றது அந்தப் பகுதியில் மத ரீதியிலான பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவர் தாக்கப்பட்டார். காவல்நிலையத்தின் முன்பு பாஜக முன்னாள் அமைச்சர் டி.என்.ஜீவராஜ் தலைமையில் சங்கிகள் ஆர்ப்பரித்தனர். அப்போது அங்கு நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி பெங்களூரு நவீன் பதிவிட்டதை நியாயப்படுத்தி ஜீவராஜ் பேசினார். சங்கராச்சாரியார் சிலையில் பேனரை வீட்சியவர் என அப்பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் கூட போலீஸ் பிடித்து வைத்திருந்தது. இன்னும் சற்று காலம் கடந்திருந்தால் முஸ்லிம் சமூகத்தை அதிகார வர்க்கமும் சங் பரிவார் கும்பலும் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும்.
நல்லவேளையாக இந்த நேரத்தில் சங்கிகளின் சதித் திட்டம் எதிர்பாராத விதமாக வெளிச்சத்துக்கு வந்தது. சங் பரிவாருடன் தொடர்புடைய, குற்றப் பின்னணி கொண்ட மிலிந்த் பூஜாரி என்பவன் பள்ளிவாசலில் நுழைந்து அங்கு இருந்த பச்சை பேனரைத் திருடிச் சென்று சங்கராச்சாரியார் சிலையில் போட்டிருக்கிறான். பிறகு, பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அவன் அடையாளம் காட்டப்பட்டதும், அவன் ஏதோ குடித்துவிட்டு இப்படி தவறிழைத்துவிட்டதாகக் கூறி போலீஸ் அவனைக் ’காப்பாற்றியது’. ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த சங்கி கும்பல் தன் திட்டம் அம்பலமானதால் பம்மிப் பதுங்கிவிட்டது. பதற்றத்தை உருவாக்கி அதையொரு வாய்ப்பாகக் கொண்டு முஸ்லிம்கள் மீதும் SDPI மீதும் பாய்ந்து பிராண்ட காத்திருந்த அவர்களுக்கு இதுவொரு சிறு ஏமாற்றமே.
பொதுவாக பார்ப்பன, பனியா கும்பலைப் பொறுத்தவரை மதக் கலவரம் என்பது தங்க முட்டை இடும் வாத்து போன்றது. அவ்வப்போது கலவரத்தை ஆயுதமாக்கி அதன் மூலம் அரசியல், பொருளியல் பலாபலன்களை அவர்கள்தான் அடைந்திருக்கிறார்கள். கலவர சமயங்களில் காவல்துறை, அதிகார வர்க்கம், ஊடகம் என்பனவற்றின் அணுகுமுறை அவர்களுக்குச் சார்பாகவே இருந்து வந்திருப்பதை கடந்த காலங்களில் நாம் காண இயலும்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இவை முஸ்லிம்களை அணுகும் என்பதையும், கலவரம் முஸ்லிம்களின் வாழ்வில் படுமோசமான விளைவுகளை உண்டாக்குவதோடு அவர்களின் அரசியல், வணிகம், சமூகப் பாதுகாப்பு எல்லாவற்றுக்கும் உலை வைக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போதுதான் முஸ்லிம் வெகுமக்களோ அவர்களிலிருந்து தோன்றும் அமைப்புகளோ இயக்கங்களோ தன்னியல்பாகவே கலவரங்களைத் திட்டமிடவோ உருவாக்கவோ முயற்சிக்காது எனும் தர்க்கம் நமக்குப் புரியும்.
அன்று இரவு பெங்களூருவில் என்னதான் நடந்தது?
கடந்த 11ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் பெங்களூரு தேவராஜீவன ஹள்ளி (DJ ஹள்ளி) காவல் நிலையத்தில் நபிகள் நாயகத்தை இழிவு செய்து கார்டூன் போட்ட நவீன் மீது புகாரளிப்பதற்கு முஸ்லிம்களுள் சிலர் சென்றுள்ளனர். பிரச்னையின் தன்மையை சரியாகப் புரிந்துகொண்டு குற்றமிழைத்த நவீன் மீது காவல்துறை உடனுக்குடன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அலட்சியப்படுத்தி காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது (இந்தக் கருத்தை போலீஸ் தரப்பு எதிர்பார்த்ததுபோலவே மறுத்துள்ளது).
சரியாக 7:45 மணிக்கு SDPI தலைவர்களில் ஒருவரான முஸ்ஸம்மில் பாஷா காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதனிடையேதான் அந்த காவல் நிலையத்தைச் சுற்றி கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட கட்சியினர் என இல்லாமல் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ளோர் பலரும் அங்கே கூடியுள்ளனர். சிறிது நேரம் கழித்து முஸம்மில் பாஷா உள்ளிட்ட உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு கோரியுள்ளனர் (அந்த வீடியோக்கள் சமூக ஊடகத்தில் பரவலாக வலம் வருகிறது). அப்போது அங்கு இருந்தோர் எண்ணிக்கை 200 பேர் மட்டுமே.
போலீசார் நவீன் மீதான புகாரை ஏற்க மறுப்பதாகக் கூறி, எல்லோரும் DJ ஹள்ளி காவல் நிலையத்துக்கு வாருங்கள் என அங்கு இருந்தவர்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய தகவல் வைரலாகியதையடுத்து கூட்டம் மேலும் பெருகத் தொடங்கியிருக்கிறது. ‘தி இந்தி’ ஏடு அளித்த தகவலின்படி போலீசார் நவீனை அழைத்து வர அனுப்பி வைத்த காவல்துறையின் வேன் இரவு 9:30 மணிக்கு காலியாக திரும்பி வந்திருப்பது தெரிகிறது. இது கூட்டத்தில் இருந்தவர்களை மேலும் ஆவேசமடையச் செய்ததாக களத்துக்குச் சென்ற செய்தியாளர் கூறுகிறார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாகவே வன்முறைக்கான சூழல் அங்கே உருவாகி கட்டுக்கடங்காமல் போயுள்ளது. இதன் பிறகு ஆயுதப் படையை வரவழைத்து அதைக் கட்டுப்படுத்த முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.
சற்றேறக்குறைய 9 – 9:30 மணி அளவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்த சீனிவாச மூர்த்தியின் வீட்டின் முன்பு சுமார் 1000 பேரும், நவீன் வீட்டில் சுமார் 500 பேரும் ஒன்றுதிரண்டு வன்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஊடகங்கள் ஒவ்வொன்றும் கூட்டத்தின் எண்ணிக்கையை ஒவ்வொரு மாதிரி தந்தாலும், அடிப்படையில் இப்படியான அத்துமீறலும் வன்முறையும் நடந்திருப்பது தெளிவாகிறது. நவீன் அவரது வீட்டிலும் இல்லாத சூழலில், ஒரு வதந்தி பரவுகிறது. DJ ஹள்ளி காவல் நிலையத்துக்கு 1.5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காடுகொண்டன ஹள்ளி (KG ஹள்ளி) காவல் நிலையத்தில் காவலர்கள் நவீனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று. பிறகு இரவு 11:15 மணி அளவில் அங்கும் சென்று வாகனத்தை எரிப்பது, கல்லெரிவது என வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள்.
நள்ளிரவு 1 மணி வரை, அதாவது சுமார் 6 மணி நேரம் தொடர்ந்த இந்த களேபரத்தில் போலீசார் மூன்று முஸ்லிம் இளைஞர்களைச் சுட்டுக்கொன்றுள்ளனர். ஏராளமானோர் தாக்கப்பட்டனர். போலீசாரால் இரு பத்திரிகையாளர்களும், வன்முறையில் ஈடுபட்டோரால் ஒரு பத்திரிகையாளரும் காயமுற்றார்கள். போலீசார் தரும் தகவலின்படி, 60 காவலர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர், 250 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு இதற்கெல்லாம் மூலக் காரணமான நவீனை அன்று இரவு 2 மணிக்கு கைது செய்ததாகக் காவல்துறை அறிவித்தது.
தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. காவல்துறையின் அத்துமீறல், மூவர் சுடப்பட்டது, அப்பாவிகளைக் கைது செய்வது உள்ளிட்டவற்றுக்கு போலீஸ் பொறுப்பேற்கப் போவதில்லை!
பெங்களூரு வன்முறையை எப்படி புரிந்துகொள்வது?
முகநூலில் தொடர்ந்து முஸ்லிம் எதிர்ப்பை வெளிப்படுத்திய பெங்களூரு நவீன் குமார் ஒரு சீரியசான ஆளில்லை என்பதை அவரின் சமூக வலைத்தளச் செயல்பாடுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. ‘இந்தியா டுடே’ அதைக் கேலி செய்யும் வகையில் அவரின் பதிவுகளின் screenshots உடன் ஒரு ஆக்கத்தை வெளியிட்டுள்ளது. மேலும், அவர் காங்கிரஸில் உள்ள முஸ்லிம்களையும் கூட சீண்டித்தான் வந்துள்ளார். இந்துத்துவ கயவர்களின் தொடர் துவேஷப் பிரச்சாரத்துக்கு பலியாகும் ஏராளமானோரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த நவீன் குமாரும் ஒருவர். சங்கிகள் தலித்கள் மீது மேற்கொள்ளும் முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது நமக்கு உணர்த்துகிறது.
பெங்களூரு வன்முறையை ஒரு தனித்த நிகழ்வாகக் காண்பது தவறு. அதைப் புரிந்துகொள்வதற்கு இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு பற்றியும் அறிந்திருப்பது அவசியம். வெறுப்பு, சந்தேகப் பார்வை போன்றவற்றை முஸ்லிம்கள் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டிய நிலை இந்நாட்டில் இருந்துவருவதை உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பகடைக்காயாக முஸ்லிம்களை வைத்துக்கொண்டு, அவர்களின் உரிமைகளைப் பறிப்பது, அவர்களுக்கு அநீதி இழைப்பது, அதிகாரத்திலிருந்து அவர்களை விலக்கி வைப்பது என தம் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் மற்றும் ஊடகங்களின் அணுகுமுறையும் நீதியாக இல்லை. நீதியாக இருக்கும் சுயாதீன ஊடகங்களும் இன்று மிரட்டிப் பணியவைக்கப் படுகின்றன.
இச்சூழலில் முஸ்லிம்கள் காவல்துறை, நீதிமன்றம் உட்பட எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இவற்றின் தொடர்ச்சியாக இப்போது அவர்கள் தம் உயிரினும் மேலாகக் கருதும், தம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாக நினைக்கும் நபிகள் நாயகத்தையும் கொச்சைப்படுத்துவதும் கேலி செய்வதும் அரங்கேறுகிறது. காவல்துறை அதைக் கட்டுப்படுத்தாத சூழலில் அது வன்முறைக்குத் தூண்டுகோலாக அமைகிறது.
பெங்களூருவில் உள்ள என் நண்பரொருவரைத் தொடர்புகொண்டு இந்த வன்முறைக்கான பின்னணி குறித்து கேட்டேன். ”காவல்துறை நினைத்திருந்தால் உறுதியாக இந்த அளவுக்குப் பிரச்னை வளர்ந்திருக்காது. பலரும் சுட்டிக்காட்டுவது போல இது காவல்துறை மற்றும் உளவுத்துறையின் படுதோல்வி என்பதில் சந்தேகமே இல்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”வன்முறை நடைபெற்ற பகுதியில் முஸ்லிம்களும் தலித்களுமே செறிவாக வசிக்கின்றனர். அடித்தட்டு, உழைக்கும் மக்கள் வாழும் அப்பகுதியில் கல்வியறிவின்மை, வறுமை போன்ற சமூகப் பிரச்னைகள் நிலவுகின்றன.
“இன்னொரு பக்கம் குற்ற விகிதம் (crime rate) அங்கு மிக அதிகம். சம்பவம் நடந்த அன்று பெரிய அளவுக்கு அங்கு கூட்டம் கூடும்போது அதுவொரு கும்பல் மனநிலையையும் (mob mentality) ஏற்படுத்தியிருக்கும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. போதாக்குறைக்கு தொகுதியில் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தி மீது நிலவும் அதிருப்தி. இவையெல்லாம் கணக்கிலெடுக்க வேண்டிய விஷயங்கள். சற்று ஆழமாகப் பார்க்க வேண்டிய சிக்கலான பிரச்னை இது” என்று கடகடவென சொல்லி முடித்தார். குற்ற விகிதம் குறித்த இவரது கருத்தை பெங்களூருவில் உள்ள ஓய்வுபெற்ற துணை ஆணையர் லோகேஷ்வரன் என்பவரும் ஒரு விவாத நிகழ்ச்சியில் பதிவு செய்தார்.
எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து SDPI தான் கலவரம் செய்தது என்கிறார்களே என அந்த நண்பரிடம் கேட்டேன். “இதுவொரு ஊகம் தான். திட்டமிட்டு கலவரம் நடத்தப்பட்டதாக நான் நினைக்கவில்லை. தற்போதுவரை போலீஸ் தரும் இதுபோன்ற தகவல்கள் மட்டுமே நமக்கு எளிதில் கிடைக்கின்றன. உண்மை அறியும் குழு அமைத்து சில முக்கியமான சமூகச் செயல்பாட்டாளர்கள் அங்கு செல்ல உள்ளார்கள். அவர்கள் வெளியிடும் அறிக்கையில் நமக்கு ஏதேனும் தெளிவு கிடைக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
கலவரத்தைத் தூண்டியவர் எனக் குற்றம் சாட்டப்படும் முஸ்ஸம்மில் பாஷா பற்றி கர்நாடக SDPI தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே கூறும்போது, ”உண்மையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறைக்கு உதவியவர் முஸ்ஸம்மில். போலீஸ் தனது தோல்வியை மூடிமறைக்க SDPI மீது பழிபோடுகிறது” என்றார்.
ஏற்கனவே பெங்களூரு வன்முறையால் மூன்று இளம் உயிர்கள் பறிபோயுள்ளன. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறை மேற்கொள்ளும் அதிகப்படியான கைது நடவடிக்கைகள், தீவிரவாத சதித் திட்டமாக சித்தரிக்க முயற்சித்தல், கொடூரமான ‘உபா’ (UAPA) சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறுவது, வன்முறையால் ஏற்பட்ட இழப்பீட்டை கலவரக்காரர்களிடம் வசூலிப்போம் என யோகி ஆதித்யநாத் பாணியில் எடியூரப்பா சூளுரைப்பது முதலானவை புதிய புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடிய முனைவுகளாக உள்ளன. பிரச்னைகளை சரிசெய்கிறேன் எனக் கிளம்பும் இவர்களே பிரச்னையின் ஒரு பகுதியாகவோ ஊற்றுக்கண்ணாகவோ இருப்பதுதான் இங்கு ஆகப்பெரிய பிரச்னை!