சோம்தீப் சென் எழுதிய “டிகாலனைஜிங் ஃபாலஸ்தீன்: ஹமாஸ் பிட்வீன் தி அன்டிகலோனியல் அண்ட் தி போஸ்ட்கலோனியல்” (ஃபாலஸ்தீன விடுதலை: காலனியாதிக்க எதிர்ப்பு மற்றும் பின்காலனித்துவ காலத்துக்கு இடையிலான ஹமாஸ்) எனும் நூல் தற்போது வெளியாகியுள்ளது. ஜதலியா இணைய இதழுக்கு நூலாசிரியர் அளித்த பிரத்யேக நேர்காணல்:

ஜதலியா: இந்தப் புத்தகத்தை எழுத உங்களைத் தூண்டியது எது?

சோம்தீப் சென்: விடுதலைப் போராட்டங்களின் பரிணாமம் மீதான எனது ஆர்வத்தை இந்தப் புத்தகம் தூண்டியது. இந்த ஆர்வத்தின் வேர்கள் ஃபாலஸ்தீன விடுதலை இயக்கத்திலிருந்து விருட்சமாகியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்நூலில் ‘விடுதலையடைதல்’ மற்றும் ‘அடிமைப்பட்டிருத்தல்’ ஆகியவற்றைச் சுற்றியுள்ள பரந்த கேள்விகளை விவாதிப்பதற்கான அடிப்படையாக ஃபாலஸ்தீனப் போராட்டம் உள்ளது. அதில் ஒரு பகுதியாக, குடியேறிகளின் காலனியாதிக்க ஆட்சியின் கீழ் தங்களது விடுதலையின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் விடாமுயற்சியை விவரிக்கும் அம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து நான் கவனம் செலுத்தியுள்ளேன். இதுதான் ஹமாஸ் ஆட்சிப் புரியும் காஸா பகுதியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றிய எனது விவாதங்களின் மையக்கருவாகும். பொதுவான மற்ற விடுதலைப் போராட்டங்களையும் அவற்றின் பரிணாமத்தையும் உள்ளடக்கி எனது விவாதத்தை விரிவுபடுத்துகிறேன். காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தாலும், எவ்வாறு காலனியாதிக்க ஆட்சியின் நீடித்த தாக்கம் அந்த மக்களுடைய சுதந்திர அடையாளத்தைக் கட்டமைக்கும் முயற்சிகளை வடிவமைக்கிறது என்பதை நான் விவரித்துள்ளேன்.

ஜதலியா: இந்தப் புத்தகம் எந்தெந்த தலைப்புகள், பிரச்னைகள் மற்றும் ஆக்கங்களைக் குறித்து பேசுகிறது?

சோம்தீப் சென்: ஹமாஸின் நடத்தையைக் குறித்து இழிவாகக் கருதப்படும் கண்ணோட்டம் அதிகமாக உள்ளது. இஸ்ரேல் ஃபாலஸ்தீன பொது அரசியலின் எல்லைக்கு வெளியே காஸாவை வைக்கும் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் ஹமாஸ் மற்றும் காஸாவை இந்தப் புத்தகத்தில் நான் பொதுவான தளத்தில் காட்டுகிறேன். வரலாற்று ரீதியாக இஸ்ரேல் உருவானதால் ஏற்பட்ட அழிவுகரமான தாக்கமுள்ள இடத்தின் உதாரணமாக காஸா இருந்துள்ளதாக நான் வாதாடுகிறேன். அதனால் ஃபாலஸ்தீன அகதிகள் பெரும்பான்மையாக வாழும் இடமாக காஸா மாற்றப்பட்டது.

இஸ்ரேலின் குடியேற்ற காலனியாதிக்கத்திற்கு எதிரான உரத்த குரல் இந்த கடலோரப் பகுதியில் மிகவும் சத்தமாக ஒலித்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில் சில முக்கிய ஃபாலஸ்தீன புரட்சிகரத் தலைவர்களின் தாயகமாக அப்பகுதி உள்ளது. மேலும் இப்பகுதிதான் இன்திஃபாதாவை துவங்கி வைத்தது.
வட அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறிகளின் காலனியாதிக்கம் பற்றிய ஆக்கங்களை இந்நூல் பேசுகிறது. அதன் மூலம் காஸாவிற்கு எதிரான இஸ்ரேல் முற்றுகையும்,
தொடர் இராணுவ நடவடிக்கைகளும் விதிவிலக்கானதல்ல என்றும் நான் வாதிடுகிறேன்.
மாறாக, ஒரு குடியேற்ற காலனியாதிக்க அரசு நாட்டின் பூர்வ குடிமக்கள் மீதும் அடக்குமுறைகளையும், இராணுவ ஒடுக்குமுறைகளையும் விதியாக பின்பற்றுகிறது. ஆனால் ஃபாலஸ்தீன தேசத்தின்
இறையாண்மையை வலியுறுத்துவதில், விடுதலைக்கான குறிக்கோளின் நேர்மையை நிரூபிப்பதில், காலனியாதிக்க எதிர்ப்பு உணர்வை காட்டுவதில் சளைக்காத உறுதியுடன் அம்மக்கள் இருந்து வருகின்றனர்.

ஃபாலஸ்தீனத்தைத் தவிர மற்ற விடுதலை இயக்கங்கள், பின்காலனித்துவ சூழல்கள் பற்றிய படைப்புகளைப் பயன்படுத்தி ஹமாஸின் அரசியலை நான் கோட்பாடு செய்கிறேன். உதாரணமாக, ஃபானனின் (Fanon) எழுத்துகளைக் குறிப்பிட்டுள்ளேன். அவற்றைக் கொண்டு உலகம் முழுவதும் விடுதலை மற்றும் புரட்சிகரக் குழுக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலனியாதிக்க எதிர்ப்பு போராட்ட வடிவத்திலிருந்து ஹமாஸின் ஆயுதமேந்திய எதிர்ப்பு போராட்டம் வேறுபட்டதல்ல என்பதை நான் நிறுவுகிறேன். அதேபோன்று, காஸா பகுதியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஹமாஸின் அரசு போன்ற செயல்பாடுகளை இனப் பண்பாட்டின் அடிப்படையில் பார்த்தால், மற்ற பின்காலனித்துவ அரசுகளை விட ஹமாஸ் வேறுபட்டது அல்ல. ஓர் அரசின் வழக்கமான கடமைகளில், பொருளாதார செயல்பாடுகளில் ஹமாஸ் ஈடுபடுகிறது என்பதை நான் நிரூபிக்கிறேன். இந்த புரிதலில் உலகளாவிய காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள், பின்காலனித்துவ அரசுகளின் அனுபவம், ‘விடுதலையடைதல்’ மற்றும் ‘அடிமைப்பட்டிருத்தல்’ என்பதன் கருத்தாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஃபாலஸ்தீன அரசியலை விவாதித்துள்ளேன். இதன் மூலம் ஹமாஸை இந்தப் புத்தகத்தில் உலகமயமாக்கம் செய்கிறேன்.

ஜதலியா: இந்தப் புத்தகம் எப்படி உங்கள் முந்தைய ஆக்கங்களுடன்
ஒத்துபோகிறது மற்றும் வேறுபடுகிறது?

சென்: 2003 லிருந்து இந்தப் புத்தகத்தின் பயணம் பல வழிகளில் தொடங்கியது.
இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டு மாணவனாக ஃபாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு நான் முதன்முதலில் அறிமுகமானேன். அப்போது ‘க்ளோபல் ஃபாலஸ்தீன்’ ஆசிரியர் ஜான் காலின்ஸ் எனது மேற்பார்வையாளராக இருந்தார். இஸ்ரேலின் காலனியாதிக்க குடியேற்ற, ஃபாலஸ்தீனின்
காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போராட்டம் ஆகிய இரண்டின் உலகளாவிய தாக்கங்களை ஆராய என்னை ஊக்குவித்தார். அன்றிலிருந்து, ஃபாலஸ்தீனத்தில் குடியேறிகளின் காலனியாதிக்க ஆட்சியின் கீழ் வாழும் ஒரு புவிசார் இனத்தின் அன்றாட வாழ்வு, அரசியல் மீதான ஆழமான ஆர்வத்திற்கும், தெற்காசியா, லத்தீன் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் காலனியாதிக்க எதிர்ப்பு மற்றும் விடுதலைப் போராட்டங்களின் அரசியல் மீதான ஆழமான ஆர்வத்திற்கும் இடையே எனது ஆராய்ச்சி சுற்றி
வருகின்கிறது. இதுவே எனது முனைவர் பட்ட ஆய்வின் உந்துதலாக இருந்தது.

‘டிகாலனைஜிங் பாலஸ்தீன்’ நூல் எனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது. எனவே ஃபாலஸ்தீனம் பற்றியும் பிற இடங்கள் பற்றியும் அது மாறி மாறிப் பேசுகிறது. ஆகவேதான், எகிப்துக்கும் காஸாவிற்கும் எல்லையான ரஃபா பகுதியின் இனப் பண்பாட்டு
தகவல்களுடன் இந்நுல் தொடங்குகிறது. இறுதியில் தான்சானியாவின்
‘தாருஸ்ஸலாம்’ நகரில் நான் பெற்ற அனுபவத்தில் எழுதப்பட்ட பூர்வீக, பின்காலனித்துவ அடையாளம் பற்றிய விவாதத்துடன் முடிவடைகிறது.

ஜதலியா: இந்தப் புத்தகத்தை யாரெல்லாம் படிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
இப்புத்தகம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

சென்: இஸ்ரேல் ஃபாலஸ்தீன அரசியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்நூலை வாசிப்பார்கள் என நம்புகிறேன். ஆனால் ஹமாஸ், காஸா பகுதி பற்றிய எனது விவாதம் பொதுவான
விடுதலைப் போராட்டங்களின் பரிணாமத்திலும், பின்காலனித்துவத்திலும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் தொடர்புடையதாக இருக்குமென நான் உறுதியாக கூறுவேன்.

இப்புத்தகத்தின் பங்களிப்பு மற்றும் தாக்கத்தின் அடிப்படையில், ஹமாஸ் ஆளும் காஸா பகுதியை ஆய்வு செய்வதற்கான புதிய பாதைகளை அறிமுகம் செய்திருக்கிறேன் என நம்புகிறேன். கூடுதலாக, ஓர் இனத்தின் பண்பாட்டை அறிவியல் ரீதியில் ஆய்வு செய்து, அதன்
உறுதியான விளக்கங்களைத் தரும் விதத்தில் இந்நூல் தனித்துவமானது என நான் நினைக்கிறேன்.
இவை விடுதலைப் போராட்டங்களின் அரசியலைப் பற்றி பரந்த அளவில் விவாதிக்கும் ஒரு வழிமுறையாக
கையாளப்பட்டுள்ளது.

ஜதலியா: நீங்கள் வேறு என்னென்ன திட்டங்களில் வேலை செய்கிறீர்கள்?

சென்: 2021 இல் ஜார்ஜியா பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்ட “க்லோபளைஜிங் கோள்ளடெரெல் லாங்குவேஜ்: ஃப்ரம் 9/11 டு என்ட்லஸ் வார்ஸ்” (Globalizing Collateral Language: From 9/11 to Endless Wars) என்ற தலைப்பில் திருத்தப்பட்ட தொகுதியின் நகல்களை நானும் ஜான் காலின்சும் இறுதி செய்து வருகிறோம். 9/11 தாக்குதலின் இருபதாம் ஆண்டு நினைவுடன் இப்புத்தகத்தின் வெளியீடும் ஒத்துப்போகிறது. அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் என தாவிக்கொண்டே இருக்கும் பரப்புரை தற்போது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசியல் திட்டங்கள் தோல்வியடடைந்துள்ளன. இவற்றைக் குறித்து இந்த நூல் ஆராய்கின்றது. சர்வதேச உறவுகளை ஓர் ஒழுங்காற்று புலமாக உருவாக்குவதில் இனம், இனவாதம் மற்றும் காலனித்துவத்தின் பங்கு பற்றிய விவாதங்களில் நான் ஈடுபட்டு வருகிறேன். இனவெறிக்கு எதிரான சர்வதேச உறவுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து தற்போது இரண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். ஒரு சிறப்பு இதழையும் நான் தொகுத்துக் கொண்டிருக்கின்றேன். அதன் நோக்கம் சர்வதேச உறவுகளில் காலனியாதிக்கமற்ற ஒரு தளத்தின் கட்டமைப்பை உருவாக்குவதாகும். இறுதியாக, இஸ்ரேலிய குடியேற்றங்களின் நிலம் சார்ந்த வடிவமைப்பு மற்றும் திட்டமிடலில் உள்ள அரசியல் பற்றிய ஒரு புத்தகத்தின் ஆரம்ப நிலையில் இருக்கிறேன். 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களில் நடைப்பெற்ற எனது இனவரைவியல் களப்பணியை மையமாக கொண்டு இந்தப் புத்தகம் உருவாகும்.

டிகாலனைஜிங் ஃபாலஸ்தீன்’ புத்தகத்திலிருந்து….


 “
அடுத்து என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. இங்கு வாழ்க்கை நிச்சயமற்றது. நீண்ட எதிர்காலம் பற்றி சிந்திக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை.
இங்குள்ள மக்கள் குறுகிய கால வாழ்க்கைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அவர்களின் உடனடித் தேவைகளைப் பற்றியே கவலைப்படுகின்றனர். ஏனெனில் எதிர்காலத்தில் எங்களுக்கு என்ன நடக்குமென்று தெரியாது. ஒருவேளை எல்லை மூடப்படலாம். எங்களுக்கு விசா கிடைக்காமல் போகலாம். எதிர்காலத்தைப் பற்றி கனவு காண ஃபாலஸ்தீனர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை”
– அகமது யூசுஃப், நூலாசிரியரின் நேர்காணல், காஸா நகரம் மே 2013. (நூலின் முதல் அத்தியாயம் ‘அறிமுகவுரை’)

மே 16, 2013 அன்று கெய்ரோவிலிருந்து ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு எகிப்துக்கும் காஸா பகுதிக்கும் இடையே உள்ள ரஃபா எல்லைச் சந்திப்புக்கு வந்தடைந்தேன். எல்லையிலிருந்து ஏறக்குறைய நூறு மீட்டர் தூரத்தில் நான் இறக்கி விடப்பட்டேன். எகிப்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தின் வழியாக நான் நடக்க வேண்டியிருந்தது. எல்லையைக் கடக்கும் முனையத்தின் வாயிலை நான் அடைந்ததும், ஓர் எகிப்து இராணுவ வீரரிடம் எனது பாஸ்போர்ட்டையும் எகிப்து வெளியுறவு அமைச்சகத்தால் தரப்பட்ட கடிதத்தையும் கொடுத்தேன். அக்கடிதத்தில் ரஃபா எல்லைச் சந்திப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் காஸாவிற்குள் நுழைவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த இராணுவ வீரர் சில வினாடிகள் எனது ஆவணங்களை ஆய்வு செய்தபின் அவற்றை ஓர் உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார். பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு வடக்கு சினாயின் பரந்த
பாலைவன நிலப்பரப்பில் இருபது நிமிடங்கள் கடும் வெயிலில் காத்திருந்தேன். என் தோள்களை உயர்த்திப் பார்த்தால் ஃபாலஸ்தீனப் பயணிகள் எல்லைச் சந்திப்பு முனையத்திற்குள் நுழைய தங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்ற பதற்றத்துடன் காத்திருந்தனர்.


ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவியது. அது ஹமாஸின் முக்கிய உறுப்பினரான அஹ்மத் யூசுப் எனக்கு
மேலே விவரித்த அதே நிச்சயமற்ற உணர்வின் மறுவடிவமாக இருந்தது. இதுதான் காஸாவில் வாழும் ஃபாலஸ்தீனரின் வாழ்க்கைக்கான விளக்கம். இறுதியில் எனது ஆவணங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு எல்லைச் சந்திப்பு பகுதிக்குள் நுழைய நான் அனுமதிக்கப்பட்டேன். அடுத்து எகிப்தின் பாஸ்போர்ட் கண்ட்ரோல் முனையத்தில் நான் கண்ட காட்சிகள் அஹ்மத் யூசுஃப்பின் வார்த்தைகளை மேலும் உறுதிப்படுத்தின.

அதன் உள்ளே போதுமான காற்றோட்டம் வசதியில்லை. கோடை வெப்பம் தாங்க முடியாத அளவு இருந்தது. மேலும் சில வயதான பயணிகள் அறையின் பின்புறத்தில் உள்ள நாற்காலிகளில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பயணிகள் பாஸ்போர்ட் துறையைச் சுற்றிக் கூடி நின்றிருந்தனர். எகிப்து பாஸ்போர்ட் கண்ட்ரோல் அதிகாரிகள் தங்கள் பெயர்களை அறிவிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தனர். பொது அறிவிப்பு செய்வதற்கு ஒரே ஒரு ஸ்பீக்கர் மட்டுமே அங்கு இருந்தது.
பின்னர் அவர்களுடைய பாஸ்போர்ட்டை அதிகாரிகள் வீசினர். இதுதான் ஃபாலஸ்தீனர்கள் வீடு திரும்ப காஸாவிற்குள் அனுமதிக்கும் ஒப்புதல் முத்திரையாகும். இந்த ஒப்புதல் முத்திரையைப் பெறுவதற்கு’   அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்காக பின்புற அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காஸா நகரில் வசிக்கும் தனது குடும்பத்தைச் சந்திக்க ஆசையுடன் ஒரு ஃபாலஸ்தீன மருத்துவரும் அங்கே
காத்திருந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் என்னிடம் கூறினார்:  
“நீங்களே பாருங்கள், எவ்வாறு ஃபாலஸ்தீனர்களை கால்நடைகளைப் போல அவர்கள் நடத்துகிறார்கள்.”
தொடர்ந்து, முற்றுகையிடப்பட்டு ஆதிக்கத்துக்குட்பட்ட ஒர் இடத்தின் அனைத்து முக்கியமான அம்சங்களையும் நான் கண்டேன். இருந்தபோதிலும், ரஃபாவில் மிகவும் வித்தியாசமான ஒரு சூழல் இருந்தது. அதாவது, அப்பகுதி காலனி ஆதிக்கத்திலிருந்து எழுச்சி பெற்ற ஒரு பின்காலனித்துவ அரசாக
காட்சியளித்தது. எல்லைச் சந்திப்பின் எகிப்து பகுதியில் இரண்டு மணிநேரம் செலவழித்த பிறகு, நான் ஃபாலஸ்தீன முனையத்திற்குள் நுழைந்தேன்.

என்னைப் போலவே அதே நேரத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்ட ஃபாலஸ்தீனப் பயணிகளின் குழுவுடன் சேர்ந்து கொண்டேன். “ஃபாலஸ்தீனத்திற்கு உங்களை வரவேற்கிறோம்” எனும் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்த வாயில் வழியாக என்னை அனுப்பினார்கள். அந்த பலகையின் கீழ், பாலஸ்தீன அரசு
முத்திரைப் போன்ற சின்னம் பதித்த சீருடை அணிந்திருந்த ஃபாலஸ்தீன எல்லைப் பாதுகாப்புப் பணியாளர்கள் இருந்தனர். எகிப்திலிருந்து காஸாவிற்குப் பயணிக்கும் எங்கள் அனைவரையும் குடியேற்ற
முனையத்தில் வரிசையில் நிற்க சொன்னார்கள். மற்ற சாதாரண பாஸ்போர்ட் கண்ட்ரோல் வாயில் போலவே, உரிய குடியேற்ற அதிகாரிகளால் வழங்கப்பட்ட என்ட்ரி பர்மிட்டை நான் சமர்ப்பித்தேன்.
காஸா பகுதியில் உள்ள Residence and Foreigners Affairs General Administration of the Palestinian Authority அலுவலகம் எனக்கு காஸா பகுதிக்குள் நுழைவதற்கான அனுமதி
வழங்கியிருந்தது. பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரி என்னிடம் “நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?”, “உங்களை யார் அழைத்தது?”, “எவ்வளவு காலம் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?” போன்ற கேள்விகளைக் கேட்டார். அவற்றுக்கு போதுமான பதில்களை நான் அளித்தேன். அதன்பின், எனக்கு
ஃபாலஸ்தீன என்ட்ரி ஸ்டாம்ப் அடித்து வழங்கப்பட்டது. அக்கணம் விடுதலைப் பெற்ற ஃபாலஸ்தீன பிரதேசத்திற்குள் உண்மையில் வந்துவிட்டது போல் உணர்ந்தேன். அப்பகுதி இறையாண்மைக் கொண்ட ஒரு தனித்துவமான பகுதியாக இருந்தது. நிச்சயமாக, பார்ப்பதற்கு முரண்பாடான இந்த இரண்டு சூழ்நிலைகளும் ரஃபா எல்லைப் பகுதியில் மட்டும் சுருங்கிவிடவில்லை. உண்மையில் ஹமாஸ் 2006 ஃபாலஸ்தீன சட்டசபைத் தேர்தல்களில் அதன் வரலாற்று பூர்வமான வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, இரு மாறுபட்ட இருத்தல் அணுகுமுறையை அது மேற்கொண்டது. அதிலிருந்து ஒட்டுமொத்தமாக
காஸா பகுதி முரண்பட்ட இடமாக மாறியது. இஸ்லாமியக் குழுவின் தெளிவான வெற்றிக்குப் பிறகு,
பத்தாஹ் ஹமாஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்துவிட்டது. 2007 காஸா போரின் போது, ஒருபுறம் காஸா பகுதியில் தனது ஆட்சியை ஹமாஸ் ஒருங்கிணைத்தது; மறுபுறம் ஆயுதமேந்திய எதிர்ப்பில் தனது உறுதிப்பாட்டை தக்க வைத்துக் கொண்டிருந்தது. அவ்வாறு செய்வதன் மூலம், ஹமாஸ் பின்காலனித்துவ
அரசு மற்றும் காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கம் எனும் இரு தோற்றங்களில் காட்சியளித்தது.

காஸா பகுதியில் ஓர் அரசு இயந்திரமாக, ஃபாலஸ்தீன எதிர்கால தேசத்தைப் போன்று ஒரு சிவில் அதிகாரத்தை ஹமாஸ் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆயினும், ஆயுதப் போராட்டத்தில் ஹமாஸ்
உறுதியாக இருப்பதால், ஃபாலஸ்தீனம் விடுதலைப் பெற இன்னும் வெகுதொலைவு தூரம் இருக்கின்ற உண்மையையும் அது உணர்ந்துள்ளது. காஸா பகுதியில் நான் சந்தித்த ஹமாஸ் பிரதிநிதிகள் இந்த இரட்டை நிலைபாட்டை தங்களின் பொது வாழ்க்கை பழக்க வழக்கத்தில் அடிக்கடி வெளிப்படுத்தினர். வெளிவிவகார அமைச்சகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, வெளிவிவகாரத் துறையின் துணை அமைச்சர் காஸி ஹமத் அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதிப் போல தோற்றமளித்தார். அவருக்குப் பின்னால் ஃபாலஸ்தீன அதிகாரத்தின் அரச முத்திரையும், அருகில் ஃபாலஸ்தீனக் கொடியும் இருந்தது. ஃபாலஸ்தீனப் போராட்டத்தைப் பற்றி நான் படிக்கும்போது, கற்பனை செய்து வைத்திருந்த கெஃபியே உடையணிந்த ஃபாலஸ்தீன ஃபெடாயீனை (கெரில்லா போராளியை) அல்லது முகமூடி அணிந்த அல்-கஸ்ஸாம் போராளிப் போன்றல்லாமல், ஓர் உயர் அதிகாரியின் தோரணையில் காஸி ஹமத் தோற்றமளித்தார். ஆனாலும், தனது விடுதலைப் போராட்ட அனுபவங்களை துரிதமாக வெளிப்படுத்தினார். ஒரு அமைப்பாக ஹமாஸின் எதிர்காலம் பற்றி அவரிடம் நான் கருத்து கேட்டேன்.


“நாம் முதலில் நிலத்தை விடுவிக்க வேண்டும். நாம் வேறு எதையும் செய்வதற்கு முன், விடுதலைக்கான ஒரு தெளிவான தளத்தை நாம் உருவாக்க வேண்டும். ஃபாலஸ்தீன தேசத்தை மீட்டெடுக்க அதைப்
பயன்படுத்த வேண்டும்” என அவர் கூறினார். ஹமாஸின் இந்த இரட்டை அணுகுமுறையைக் குறித்து இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளேன்.

நான் உங்களிடம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன். காலனியாதிக்க எதிர்ப்புக்கும் பின்காலனித்துவத்துக்கும் இடையில் ஹமாஸின் அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதன்
அரசியலை நாம் எப்படி கருத்தாக்கம் செய்ய வேண்டும்?
இஸ்ரேலின் குடியேற்ற காலனியாதிக்க ஆட்சியை நான் கருத்தாக்கம் செய்யப்போகிறேன். அந்த ஆட்சியை தகர்க்க நடைபெறும் ஃபாலஸ்தீனப் போராட்டத்திற்கு ஹமாஸின் காலனியாதிக்க எதிர்ப்பு எவ்வாறு நீடித்து
பங்களிக்கும்?
குடியேற்றக்காரர்கள் வெளியேறியப் பின், ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் ஹமாஸின் பின்காலனித்துவ ஆட்சியை நாடற்ற ஃபாலஸ்தீனர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
ஒருபுறம் காலனியாதிக்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு காலனியாதிக்க எதிர்ப்பு குழு, மறுபுறம் அதன் ஆட்சியின் பின்காலனித்துவ அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துகிறது?
மேலும், ‘விடுதலையடைதல்’ மற்றும் ‘அடிமைப்படுத்தப்படுதல்’ என்பதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்வதில் காலனியாதிக்க எதிர்ப்பு, பின்காலனித்துவம் இரண்டின் கூட்டுவாழ்வும் எவ்வாறு சிக்கல்களை உண்டாக்குகிறது?


இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், 2013 முதல் 2016 வரை காஸா பகுதி, மேற்குக் கரை, இஸ்ரேல், எகிப்து ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட எனது களப்பணியை ஆதாரமாக பயன்படுத்தியுள்ளேன்.
அதன் மூலம், ஒரு குடியேற்ற காலனித்துவ சூழ்நிலையில் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம், பின்காலனித்துவ ஆட்சிமுறையின் ஓர் இனப்பரப்பு விளக்கத்தைத் தருகிறேன்.
உதாரணமாக, ஃபாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கு ஆயுதப் போராட்டம் இன்றியமையாதது என்று ஹமாஸ் உறுப்பினரின் உறுதியான வாக்குமூலத்தை நான் தருகிறேன். அத்துடன் இஸ்ரேலிய சிறையில்
சித்ரவதை செய்யப்பட்ட ஒரு ஃபாலஸ்தீன உணவக உரிமையாளரின் நினைவுகளை பதிவு செய்துள்ளேன். இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுடப்பட்டதில் ஒரு காஸா இளைஞனின் உடலில் ஏற்பட்ட வடு மறையாமல் உள்ளது. அதன் காரணமாக ஆயுதமேந்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக அவனுடைய உறுதியற்ற நிலைப்பாட்டையும் தந்துள்ளேன். இவ்வாறாக, காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் பல அனுபவங்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளேன். இதேபோல், ஹமாஸின் பின்காலனித்துவ ஆட்சிமுறையின் இனப்பரப்பு விளக்கத்தை தந்துள்ளேன். அதில், தங்களது விடுதலைப் போராட்டத்திற்கு அந்த ஆட்சிமுறை உதவுகிறது என ஒரு ஹமாஸ் உறுப்பினர் வலியுறுத்துகிறார். காஸா நகரில் காவல்துறையினரால் ஒரு இளம் ஃபாலஸ்தீனர் பகிரங்கமாக தாக்கப்பட்டு, அந்த ஆட்சிமுறையின் எதேச்சதிகாரத் தன்மையை எதிர்கொண்டதை பதிவு செய்துள்ளேன்.

வடக்கு காஸாவில் ஒரு கடுமையான குடும்பத் தகராறு காவல்துறையினரால் தணிக்கப்பட்டதை நான் கண்டேன். இந்த நிகழ்வையும் இணைத்து அதில் தந்துள்ளேன். மேலும், இந்த இனப்பரப்பு ஆய்வுகளை இஸ்ரேலில் நான் பார்த்த குடியேற்ற காலனித்துவ விவரிப்பு பாணியில் முன் வைக்கிறேன். டெல் அவிவில் உள்ள அருங்காட்சியகங்களில் இஸ்ரேலிய ‘சுதந்திரப் போரை’ கொண்டாடும் கண்காட்சிகளில் ஃபாலஸ்தீனர்களை இழிவாகக் காட்டுவதைப் பற்றிய எனது கருத்துகளை இதில் இணைத்துள்ளேன். மேலும் ஃபாலஸ்தீன கலாச்சார கலைப்பொருட்களை இஸ்ரேல் கையகப்படுத்தியதைக் குறித்து எழுதியுள்ளேன். 2015 மற்றும் 2016 இல் நான் ஜெருசலேமில் தங்கியிருந்த வேளையில் சிறிய கத்தி, கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு தாக்க வரும் ஃபாலஸ்தீனர்களை சர்வ சாதாரணமாக கொல்லப்பட்டதைக் குறித்து இதில் குறிப்பிட்டுள்ளேன். இறுதியில், இந்த நூலில் பேசும் பல ஃபாலஸ்தீன குரல்களைப் போலவே, மாற்றத்திற்கான காலனியாதிக்க எதிர்ப்புப் பயணத்தின் எழுச்சிக்கும் புதிர்களுக்கும் இடையில் இந்த நூலும் அலையைப் பாய்ச்சுகிறது. குறிப்பாக, விடுதலையை நோக்கிய பாதையில் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம், பின்காலனித்துவ ஆட்சி இரண்டையும் ஒரே நேரத்தில் சந்திக்கும்போது, இந்தப் பயணத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளை தெரிவிக்க அம்மனிதர்களின் எண்ணங்களை இந்நூல் வெளிப்படுத்துகிறது.