நாம் கட்டும் வீடுகளும் அமைக்கும் நகரங்களும் நாம் எப்படி வாழ்கிறோம், எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதை பிரதிபலிப்பவை. மேலும் நாம் “இறை வேதத்துடன்” இசைந்ததொரு வாழ்க்கையை வாழும் போது நமது கட்டிடங்களில் அதுவும் பிரதிபலிக்கும். நாம் வாழும் சுற்றுச்சூழலை கிடைக்கும் சில சாதனங்கள் மற்றும் பொருட்களை பயன்படுத்தி பயனளிக்கும் வகையிலும் கண்களை கவரும் வகையில் அழகுப்படுத்துவதும் நமது பொறுப்பாகும்.
இஸ்ஃபஹான், கார்டோபா, பாக்தாத் போன்ற முந்தைய முஸ்லிம் பெருநகரங்கள் குர்ஆனிய கோட்பாடுகளுக்கும்,கட்டளைகளுக்கும் இசைவானதாக கட்டமைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்திருக்கிறன.எடுத்துக்காட்டாக அவற்றில் நல்லிணக்கம்,நீதி,ஒழுங்கு,அழகு,கல்வி, கருணை போன்ற பண்புகள் வளர்ந்தோங்கியிருந்ததை குறிப்பிடலாம். குர்ஆனில் தோட்டங்களை பற்றிய குறிப்புகள் நமது வாழ்க்கை முறையில் மனிதன் அல்லாத பிற உயிரினங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
வீடுகளில் சிறிய அளவுக்கூட தோட்டம் இல்லாமல் வாழ்வது செழிப்பற்ற,வறுமை உண்டாக்குகின்ற வாழ்க்கையை வாழ்வதாகும்.
தோட்டத்தின் அளவு முக்கியமல்ல.அவை சிறியதாக இருக்கலாம் அல்லது வீட்டின் நமது அறைகளில் பையிலிடப்பட்ட செடிகளாக இருக்கலாம் அல்லது சமையல் அறையின் ஜன்னலில் வைக்கப்படும் சில மூலிகைகளாக இருக்கலாம்.மேலும் அப்படி ஒரு சிறியதொரு தோட்டமும் அதற்கு தண்னீர் இறைக்கும் சிறிய நீருற்று(Miniature Fountain) இருந்தால்,அது மறை உலகில் ஆட்சி புரிபவனிடமிருந்து நம் பார்வைக்கு புலப்படும் இவ்வுலகத்திற்கு தொடர்ந்து பொழியப்படும் கருணையை நமக்கு நினைவூட்டும்.
ஓரிறையிடமிருந்து பல பரிமாணங்களில் வெளிப்படும் வெளிச்சத்தை,நமது வீட்டு ஜன்னல்கள் வழியாக நுழைந்து அனைத்து அறைகளையும் ஒளியால் நிரப்பும் சூரிய ஒளி நமக்கு நினைவுப்படுத்தும்.
வீட்டின் வெளித்தோற்றங்களை விட வீட்டின் அகத்தோற்றங்களே முக்கியமானது. ஒரு வீட்டை ஸகீனத் என்னும் நிம்மதி மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாக மாற்றுவது அவ்வீடு எந்த அம்சங்களை தாங்கியுள்ளது என்பதை பொறுத்தே அமையும். எவ்வீடு இறைநம்பிக்கை,கட்டுபடுதல்,இரக்கம்,அன்பு போன்றவற்றை தாங்கியிருப்பின் அவ்வீடு நிச்சயம் பாதுகாப்பானதாக நம்மை உணரவைக்கும்.வீட்டின் வெளிப்புறம் அழகாக இருந்து அது நரகத்தின் குழியாக இருப்பதில் எந்த ஓர் அர்த்தமும் இல்லை. புவியில் நமது குடியிருப்புகள் முடிந்த வரை நிலையான சுவனத்தின் உறைவிடத்தை நினைவூட்டக் கூடியதாக இருக்க வேண்டும். இப்புவியில் நமது வீடுகள் நாளைய நிலையான வீட்டின் பிரதிபலிப்பு என்பதை நாம் மறவாமல் நினைவில் நிறுத்துவோம்..!
-கோலின் டர்னர்
தமிழில்:நேமத்துல்லாஹ்
(மாணவர்-அல்ஜாமியா அல்இஸ்லாமிய்யா கேரளா)