(கர்நாடகாவில் ஹிஜாப் தடையைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்களின் உடையொழுங்கு குறித்து பொது சமூகத்தில் மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளது. பொதுச் சமூகத்தின் ஒரு அங்கமான கல்வி வளாகங்களில் இருந்தும் தீர்மானிக்கப்பட்ட பதில்கள் உள்ள கேள்விகளே ஹிஜாபைக் குறித்து வருகிறது. இந்நிலையில் கல்வி வளாகங்களில் முஸ்லிம் பெண்களின் பர்தா/ஹிஜாப் அனுபவக் குறிப்புகள் உங்கள் முன்னால் சமர்ப்பிக்கப்படுகிறது)


Sometimes a hijab is just a hijab: sometimes it is not!

/உம்முல் ஃபாயிசா

2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான மிக முக்கியமான ஒரு விவாதம் முஸ்லிம் பெண்களைக் குறித்தான ஆதங்கம்தான். காலனியாதிக்க காலகட்டத்தில் உருவான ஆதங்கங்களிலிருந்து இது வேறுபட்ட ஒன்றாக இருந்தபோதிலும், இதுவும் காலனியாதிக்க காலகட்டத்தின் தொடர்ச்சியாகவே உள்ளது என்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகிறது. காலனியாதிக்க காலகட்டத்தில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதும் கலாச்சாரக் கண்காணிப்பு உருவாக்கப்பட்டதும் ஆசியாவிலும் ஆப்ரிக்காவிலும் உள்ள முஸ்லிம் நாடுகளில்தான். (உம்: அல்ஜீரியா, எகிப்து) ஆனால் பின் காலனியாதிக்க காலகட்டத்தில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதோ சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் போன்ற கொள்கைகள் உருவெடுத்த இடங்கள் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயினில் பார்ஸிலோனா, ஜெர்மனியில் ஹெஸ்ட் ஸ்டேட் போன்ற இடங்களில் முஸ்லிம் பெண்களின் ஹிஜாபிற்கு தடை விதிக்கப்பட்டது. கியூபெக், டென்மார்க், கனடா, ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் எல்லாம் முஸ்லிம் பெண்களின் உடையொழுங்கு தடை செய்வதைக் குறித்தான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

முகத்தை மூடும் நிகாப் மட்டுமல்ல, தலையை மறைக்கும் ஹிஜாபும் பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ‘பெண் சுதந்திரம்’ என்ற கொள்கையை சொல்லித்தான் இவ்வாறான தடைகளை செய்கிறார்கள் என்பது மிகவும் விந்தையானது. பெண், உடல், சுதந்திரம் இவற்றைக் குறித்த புதிய விவாதங்கள் முஸ்லிம் பெண்களின் உடையொழுங்கைச் சுற்றிதான் எழுகிறது.

உலகளாவிய இத்தகைய நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவிலும் முஸ்லிம் மாணவிகளின் பர்தாவும், ஹிஜாபும் தலை முக்காடும் வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இவர்கள் மத அடையாளங்களை சுமந்து கொண்டு ‘இனவாதத்தை ‘ உருவாக்குகிறார்கள் என்றும் பள்ளிகளில் ‘ஒருமைப்பாட்டை’(Uniformity) சீர்குலைக்கிறார்கள் என்றும் பள்ளி அதிகாரிகள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட பிரச்னைகளில் தலையிடும் முஸ்லிம் அமைப்புகளை மத மோதல்களை உருவாக்குகிறார்கள் என குற்றம் சுமத்தவும் செய்கிறார்கள். அவ்வாறாயின் இந்த ஹிஜாபைக் குறித்தான சமகால விவாதங்கள் என்ன? என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக கேரளா போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்ற பிறகும், மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்திய பிறகும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்னடைவில் இருந்த முஸ்லிம்கள் சற்று வளர்ச்சி அடைய தொடங்கினர். அதனுடைய ஒரு பகுதிதான் ஹிஜாப் என்ற ஆடைக் கலாச்சாரமும். அதாவது வளைகுடா குடியேற்றம் அளித்த ஒரு காஸ்மோபாலிட்டன் அடையாளத்தின் பாகமாக வளர்ந்து வந்த ஆடை முறைமையே ஹிஜாப்.

நவீன தொழில்நுட்பங்களையும் கலாச்சாரங்களையும் மிக எளிதாக ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம் இளைஞர் இளைஞிகள் புதிய ஆடை முறைகளையும் எளிதாக ஏற்றுக் கொண்டார்கள் என ‘முஸ்லிம் ஸ்டைல் இன் சவுத் இந்தியா’ என்ற தங்களது ஆய்வில் பிலிப்போ ஒசெல்லே கரோலின் ஒசெல்லேவும் குறிப்பிடுகிறார்கள். அதுமட்டுமின்றி ஹிஜாப் என்பது முஸ்லிம் பெண்களின் மத ரீதியான பண்பாட்டின் தொடர்ச்சியும்கூட. இன்றைய ‘தேசிய’ வாழ்க்கையில் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட பெண்களின் பொது ஆடையாக உள்ள ‘சேலைக்கு’ கிடைக்கும் கலாச்சாரத் தனித்துவத்திற்கு எதிரான அடையாளமாகவும் ஹிஜாப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஹிஜாப் என்பது பல்வேறுபட்ட சமூக வாழ்வியல் போக்குகளை அடையாளப்படுத்துகிறது. அத்துடன் ஹிஜாபைக் குறித்தான ஆதிக்கம்/விடுதலை என்ற தத்துவார்த்த அணுகுமுறைகளில் இருந்து விலகி நின்று மேற்படி விவாதங்களை முன்னெடுப்பது என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. ஏனெனில் ஹிஜாப் ஆதிக்கத்தின் அடையாளம் என்ற கருத்தாக்கம் நம்மை விடுதலை என்ற வாய்ப்புகளை நோக்கி உந்தித் தள்ளும். ஆனால் முஸ்லிம் பெண் வாழ்க்கையின் சிறப்புகள் இதில் மட்டுமே ஒதுங்கி விடுமா என்ற கேள்வியும் மீதமிருக்கிறது.

ஹிஜாப் என்பது முஸ்லிம் பெண்களின் தேர்வு(choice) மட்டுமே என்று லிபரல்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானால் இந்தத் தேர்வு(choice) என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ள பெண்களுக்கு எந்த அளவு அளிக்கப்படுகிறது? என்ற கேள்வியும் மிக முக்கியமானதாகும்.

பெண்களின் தேர்வு சுதந்திரம் என்ற லிபரல் கருத்துக்களின் சமூக உருவாக்கத்தைக் குறித்து ஆய்வு செய்தால் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை வெளிப்பாடுகளை தேர்வு சுதந்திரம் என்ற ஒற்றைக் கருத்துக்குள் அடக்குவதற்கு வரம்புகள் உள்ளது என பல பெமினிஸ்ட் ஆய்வுகள் கூறுகிறது. இந்தியா போன்ற ‘மதச்சார்பற்ற’ நாடுகளில் சிறுபான்மை அரசியலில் சிறுபான்மையாக உள்ள முஸ்லிம் பெண்களை குறித்து நாம் கவலையுடன் விவாதிக்க வேண்டும்.


ஆதிக்கத்திற்கு உட்படுவதாக உணரவில்லையா?

/முனைவர் வர்ஷா பஷீர்

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் மாநாடு நடந்தது. அங்கு கேரளாவிலிருந்து ஆங்கிலத் துறையில் படிக்கக்கூடிய ஒரு மாணவனை சந்தித்தேன். மதிய உணவிற்குப் பிறகு நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது அவன் “(எனது ஹிஜாபைப் பார்த்து) இதனால் உனக்கு மூச்சு முட்டுவது போல தோன்றவில்லையா” என்று கேட்டான். நான் சொன்னேன்” இது காற்றையும் தடை செய்யவில்லை. எனக்கு மூச்சு கிடைப்பதில் பிரச்னையும் இல்லை”.

பிறகு சிரித்துக் கொண்டே கேட்டேன்; “உண்மையில் நீ இதைத்தான் கேட்க விரும்பினாயா?” அவன் மனம் திறந்து பேசினான். “நீ இதை அணிகின்ற பொழுது ஆதிக்கத்திற்கு உட்படுவதாக உணரவில்லையா”? “மனைவியும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிய நான் ஆணாதிக்கம் நிறைந்துள்ள கேரளாவிலிருந்து மூன்று நாள் நடைபெறும் ஒரு மாநாட்டில் பங்கேற்று ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்காக வீட்டிலிருந்து 3500 கிலோமீட்டர் தூரமுள்ள ஒரு பகுதிக்கு தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றேன். இங்கு இரவு 10 மணிக்கு உன்னோடு அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றேன். அதன்பிறகும் நான் ஆதிக்கத்திற்கு உட்பட்டவளாக இருப்பதாக நீ எப்படி கருதுகிறாய்?” என்று நான் கேட்டேன். அவன் மெலிதாக புன்னகைத்துக் கொண்டு சொன்னான் “நான் அந்த அளவிற்கு சிந்திக்கவில்லை”. “இதுதான் பிரச்சனை. நீங்கள் என்னுடைய தலையில் சுற்றியுள்ள ஒரு மீட்டர் துணியை மட்டுமே பார்க்கிறீர்கள். ஆனால் நான் இங்கு வந்து சேர்ந்ததன் அம்சங்களை நீங்கள் பார்ப்பதில்லை.
நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை பார்ப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் நம்முடைய கண்களையும் காதுகளையும் நாம் பயன்படுத்த வேண்டும்.” என்று நான் அவனுக்கு பதில் கூறினேன்.


பெண், pin, பின் மஃப்தா

/சம்ரா அப்துர் ரசாக்

எட்டு வயசு முதல் மஃப்தா/ஹிஜாப் அணியத் துவங்கிய எனக்கு அந்த ஆடை முறையை பின்பற்றுவது என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை. பள்ளிக்குச் செல்கின்ற பொழுது மஃப்தா இடவில்லை என்றால் டீச்சர் மிரட்டுவார் என்று பயமுறுத்தும் அக்காமார்களும், எங்கள் பகுதியில் ஹிஜாப் அணிந்த பெண் ஆளுமைகளும்தான் இவ்வாறு ஒரு பழக்கத்தை நான் கடைபிடிக்கக் காரணம். என்னுடைய பகுதியிலும் பள்ளியிலும் மஃப்தாவிற்குள் நான் பாதுகாப்பாக இருந்தேன். ஆனால், இந்த சூழல்களிலிருந்து மாறுபட்டு ஒரு கிருத்தவ நிறுவனத்தின் கீழ் உள்ள கல்வி வளாகத்திற்குள் சென்ற பொழுதுதான் சமூகத்தில் மஃப்தா அணிந்தவர்கள் ஒரு மாறுபட்ட உயிர்களாக பார்க்கப்படுவதை நான் புரிந்து கொண்டேன்.

முக்காடு அணிந்த பெண்கள் அழகானவர்கள் என்று பேசித்திரிந்த அதே நேரத்தில் மஃப்தாவிலிருந்து மாணவிகளை விடுதலை அடையச் செய்வதற்கான வேலையையும் சில ‘அண்ணன்மார்’கள் செய்து வந்தார்கள். மதம் எங்களிடம் மறைத்து வைக்கின்றவைகள், நாங்கள் புரிந்து கொள்ளாதவைகள் என்று சில பாடங்களை திரும்பத் திரும்பச் சொல்லித் தந்து அறிவுறுத்தினார்கள்.

வகுப்பறையில் பேசிக் கொண்டிருக்கின்ற போது அறியாமல் ‘இஸ்லாம்’ ‘முஸ்லிம்’ என்ற வார்த்தைகள் வந்து விட்டால் நான் வகுப்புவாதியாக மாறிவிடுவேன். பிறகு கண்காணிக்கப்படுவேன். ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவி என்ற அடிப்படையில் ‘லிபரலாக’ சிந்திப்பது என்பது மறைமுக கட்டாயம். ஆனால் அதற்கு எதிராக ‘பழமையான முறையில்’ ஆடை அணிந்து வரும் என்னுடைய வார்த்தைகளில், தலையீடுகளில் ஒரு ‘மதத் தீவிரவாதியை’ அவர்கள் உருவாக்கி நிறுத்தினார்கள்.


எனது முக்காடு, எனது தற்காப்பு

/A K ஃபாசிலா

முதல்முறையாக முக்காடு அணிந்து வெளியே சென்றது மதரஸாவில் படிக்கின்றபோது தான்.
மதரஸாவில் இருந்து வீட்டுக்கு வருவதற்குள் முக்காடு அதனுடைய இடத்திலிருந்து சற்று இறங்கி இருக்கும். தலையை மறைப்பது என்ற பழக்கத்தின் முதல் படியாகத்தான் அது இருந்தது. தலை மறைக்காமல் இருந்ததற்கு, பின் குத்தி மஃப்தா இடாமல் இருந்ததற்கு திட்டு வாங்கியது நான்காம் வகுப்பில் படிக்கும்போது தான். மாலையில் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்கின்ற வேளையில், முக்காடை கையில் பிடித்து ஸ்டைலாக நடந்து வருகின்றபோது “இவ்வளவு பெரிதாக வளர்ந்த பின்பும் இவற்றையெல்லாம் சரியாகச் செய்யத் தெரியாதா” என்று ஓர் அக்கா சத்தம் போட்டார். மேல்நிலைப்பள்ளி படிப்பு முடிகின்ற காலம் வரை இறையச்சத்தின், ஒழுக்கத்தின், மரியாதையின் அடையாளமாகத்தான் என்னிடத்தில் மஃப்தா இருந்தது.

படித்த கல்வி நிலையங்களிலும், ஊர்காரர்களிடமும் எனக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்க காரணமாக இருந்ததும் நான் வாழ்ந்த பகுதியின் சிறப்புகளும் இந்த மஃப்தாவும்தான். என்னுடைய அங்கீகாரத்திற்கு காரணமான என்னுடைய ஆடையைக் குறித்து ஐயமோ, நீராசையோ, கேள்விகளோ விவாதங்களாக எங்கும் எழவில்லை. இந்த ஆடையின் பெயரால் எங்கும் நான் புறக்கணிக்கப்படவும் இல்லை. அப்படிப்பட்ட எந்த அணுகுமுறைகளும் எண்ணங்களும் எனது வாழ்க்கையில் வரவில்லை.

அதன் பிறகு மேற்படிப்பிற்காக கோழிக்கோடு சென்ற பிறகு என்னுடைய ஆடை என்னை ஒரு வித்தியாசமான உயிரியாக அடையாளப்படுத்தியது. அது என்னை பெரும் வருத்தத்திற்கு ஆளாக்கியது. ஒரே நேரத்தில் நிராசையும் கோபமும் குற்ற உணர்வும் எனக்கு உருவானது. என்னுடைய வகுப்புத் தோழிகளும், விடுதி தோழிகளும், மஃப்தாதாரிகள் நடமாடும் கோழிக்கோடு கடைவீதியில் உள்ளவர்களும் என்னை நான் சுயம் மூடி வைத்ததை கேள்விக்கு உட்படுத்தினார்கள். நான் அனுபவிக்கும் வெயில் வெப்பத்தையும் தலைவலியையும் யோசித்து யோசித்து அவர்கள் வியர்வை சிந்தினார்கள். அன்றைக்கு விடுதியிலும் கல்லூரியிலும் நடந்து செல்லும் இடங்களில் எல்லாம் நீட்டி முழங்கிக் கூறும் ஸலாம்களும், பெரியக்கா என்று அழைத்து கிண்டல் செய்யும் அறிமுகமில்லாத ஆட்களும், எங்கே நிலாவுக்கு போகின்றீர்களா? என்று கேட்டு கேலி செய்த பேருந்து பயணிகளும், கணவனின் கட்டாயத்திற்கு வேண்டி இந்த வேஷமா? என்று கேட்ட பேருந்துக்காக காத்திருந்த ஓர் அக்காவும், கடந்த 19 வருடங்களாக நான் உருவாக்கி வைத்திருந்த ‘என்னுடைய கேரளா’ என்ற கனவுலக முட்டாள்தனங்களை எனக்கு புரிய வைத்தனர்.

கல்லூரியின் ஆரம்ப நாட்களில் முதல் வருட மாணவர்களை அறிமுகப்படுத்த சீனியர் அண்ணன்மார்களும் அக்காமார்களும் சேர்ந்து மஃப்தாவையும் முழுக்கை ஆடையையும் கேள்வி கேட்டு கேலிச் செய்தார்கள். இதற்கிடையில் ஓர் அக்கா என்னுடைய சுடிதாரின் கைகளை மேலே இழுத்து “உன்னுடைய தோலுக்கும் எங்களுடைய தோலுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்” என்று சொன்னபோதுதான் நான் வாழப் போகும் உலகத்தின் சகிப்பின்மையையும் குறுகிய மனோநிலையையும் நான் தெரிந்து கொண்டேன். அன்று முதல்தான் என்னுடைய முக்காடு என்னுடைய தற்காப்பு அடையாளமாக மாறியது. தலைமறைப்பவளின் அழகு, ஆரோக்கியம், சுதந்திரம், அரசியல் உணர்வு, தேசிய உணர்வு, கல்வி, இறைநம்பிக்கை, குடும்ப உறவுகள், கலை உணர்வு, வெயில், சூடு, குளிர் போன்ற விஷயங்களுடன் தொடர்புடைய எண்ணற்ற கேள்விகள் ஒரே நேரத்தில் என்னை அழவும் சிரிக்கவும் வைத்தது.

“தலை மறைப்பதினால் அழகு குறைந்துவிடும்”, “நீ பெரிய இறையச்சம் கொண்டவள் என காண்பிக்கின்றாயா?”, “சூடாக இல்லையா”, “தலை வலிக்க வில்லையா”, “வீட்டில் இருப்பவர்களுக்கு பயந்துகொண்டா”, “பழமைவாத குடும்பமா”, “அந்தக் குந்தத்தை தலையிலிருந்து கழட்டி வீசு” என்று பலவித தாக்குதல்களை நான் எதிர் கொண்டுள்ளேன். மிகவும் அழகான, பல வண்ணமயமான ஸ்கார்ப் அணிந்து கொண்டு நான் இந்த சகிப்பின்மைகளையும் கேலிகளையும் எதிர் கொள்ள தீர்மானித்தேன். இறை நம்பிக்கையின் அடையாளம் என நான் நம்புகின்ற என்னுடைய முக்காடை தற்காப்பின், எதிர்ப்பின் அடையாளங்களாக மாற்றி அமைத்தேன்.

கடந்த மகளிர் தினத்தன்று எத்திக்ஸ் பாட வேளையில் நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பெண் விரோதப் பேச்சை ஆசிரியர் பேசிய பொழுது அதை எதிர்த்து நான் கேள்வி கேட்டேன். தொடர்ந்து நடைபெற்ற ‘பால் சமத்துவத்தை’ குறித்த விவாதத்தில் நான் ஆக்கப்பூர்வமான வகையில் தலையிட்ட பொழுது என்னுடைய வாயை அடைக்க அந்த ‘சார்’ ஆறு கேள்விகள் கேட்டார். நான் ஒரு மதச்சார்பற்றவாதி எனவும் நான் சொல்லப் போகின்ற விஷயங்களால் இந்திய மதச்சார்பின்மை மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை நீங்கள் ஐயப்படக் கூடாது எனவும் முன்ஜாமீன் எடுத்துக்கொண்டு அவர் பேசினார். பெண்களுக்கு ஆடை சுதந்திரத்தை அனுமதிக்காத, பொது அரங்கங்களில் அவளுடைய ஆற்றல்களை வெளிப்படுத்த தடைகள் ஏற்படுத்திய ஒரு மத நம்பிக்கையை, தனியார் சட்டங்களின் பெயரில் அதிகாரப்பூர்வ சட்டங்களின் கீழ் கொண்டுவருவது இந்திய மதச்சார்பின்மைக்கு சவால் அல்லவா? மதத்தின் இந்த பெண் விரோத நிலைப்பாட்டை குறித்து முதலில் பதில் சொல்லுங்கள் என்று கூறி அட்டனன்ஸ் கூட எடுக்காமல் வகுப்பிலிருந்து தப்பித்து ஓடிச் சென்றார் அவர். இந்திய மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் முஸ்லிம் பெண்ணின் முக்காடுதான் என்ற உண்மை அப்போதுதான் எனக்குப் புரிந்தது.


தமிழில்- K S அப்துர் ரஹ்மான்