மார்ச் 7, 2023 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நடுப்பக்க Opinions பகுதியில் சாய் தீபக்கின் ‘Perils of go-to secularism’ என்றொரு விஷமத்தனமிக்க கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அவர் அக்கட்டுரையில் பயன்படுத்தியுள்ள மொழியும் வாசகங்களும் பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் வாதம்போலவும் முற்போக்கு அறிவாளிகளின் சொல்லாடல் போலவுமே வெளிப்படுகிறது. துணைத்தலைப்பின் வாசகம் இது: In a country that has been the victim of invasions, colonialism, renaming can contribute to the revival of civilizational consciousness and restorative justice. ‘Restorative Justice’ – இது பாபர் மசூதி இடிப்பு பற்றிப் பேசும்போது முஸ்லிம் இயக்கங்களும், சாதி ரீதியிலான வன்முறையின் போது தலித் இயக்கங்களும் முன்வைக்கும் சொல்லாட்சியாகும். சாய் தீபக்கின் காணொளிகளையும் அவரது எழுத்துகளையும் தொடர்ந்து பார்த்தும் வாசித்தும் வருபவர்களுக்கு இது புதிய செய்தியாக இராது.

பாரதம் என்னும் இப்பெருந்தேசம் பல்வேறு ஆக்கிரமிப்புப் போர்களாலும் காலனியாதிக்கத்தாலும் சூறையாடப்பட்டு வந்துள்ளது. நமது சிந்தனைகள் முழுக்கவும் காலனிய நோயால் பீடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளிவருவது அவசியம். நம் நகரத்தின் பெயர்கள் முதற்கொண்டு நமது அன்றாடம் வரையிலும் ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களைத் தாங்கியுள்ளோம். அதிலிருந்து மீண்டெழுந்து நமக்கான பெயரை நாமே தெரிவு செய்ய வேண்டும். அலாகாபாத் ப்ரயாக்யா என்று பெயர் மாற்றம் செய்தது பற்றி அறிவோம். ஹைதராபாத் – பாக்கியநகர், அஹமதாபாத் – அஷவல் அல்லது கர்னவதி என்று தொடர்ந்து பெயர் மாற்றும் முயற்சிகள் நிகழ்ந்து வருகின்றன. இவையனைத்தும் இந்தியாவின் கடந்தகால வன்முறைகளை நினைத்துப் பார்ப்பதற்கும் தமக்கென ஒரு பாரிய நாகரிகத்தை மீள் கண்டுபிடிப்பு செய்வதற்கும் முக்கிய வழிமுறைகளாகும். இதுதான் Restorative Justice. இதுதான் காலனிய நீக்கம் (Decolonization). சாய் தீபக் முதற்கொண்டு இந்துத்துவர்கள் பலரின் வாதம் இதுதான்.

இக்கட்டுரை செக்குலரிசம் என்னும் கருத்தாக்கம் இந்தியாவில் எவ்வாறெல்லாம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று பேசுகிறது. மேலை நாட்டின் செக்குலரிசம் மதத்துக்கும் அரசுக்கும் இடையில் ஒரு இரும்புத் திரை இருக்க வேண்டும் என்கிறது. மதமும் அரசும் ஒன்றையொன்று ஊடுருவாமல் செயல்பட வேண்டும் என்பதுதான் செக்குலரிசத்தின் சாராம்சம். ஆனால் மேலை நாடுகளில் கிறித்தவம் ஒன்றும் இதனால் பொதுவெளியிலிருந்து மறைந்துவிடவில்லை. எவ்வாறு கிறித்தவ செக்குலரிச தேசிய அரசுகள் மேலை நாடுகளில் உருவாகிச் செயல்படுகின்றனவோ, அது போலவே இந்தியாவும் பன்முகக் கலாசாரம் கொண்ட செக்குலர் இந்து நாகரீக அரசாக இருப்பதில் தவறொன்றுமில்லை (Secular and Plural Hindu Civilizational State). மேலும் இக்கட்டுரை பாரதம் ஏன் ஐரோப்பாவில் உருவான செக்குலரிசத்தைத் தமக்கான ஒன்றாக வரித்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்கிறது. ஆனால் அதற்கு அசலான துணிச்சலான காலனிய நீக்க சிந்தனை தேவை. அது இந்தியாவில் இப்போது சாத்தியமில்லை ஆதாலால் நாம் இந்து செக்குலரிசத்தை முன்னெடுப்பதே சரி என்று சாய் தீபக் வாதிடுகிறார்.

90-களில் இந்து தேசியவாதத்தின் பெருவளர்ச்சியும் 2000-களில் உலக அளவில் இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றிய சொல்லாடலும் செக்குலரிசம் பற்றிய பல்வேறு உரையாடல்களை உருவாக்கியது. ஆஷிஷ் நந்தி, டி.என். மதன் போன்றோர் இந்தியா போன்ற மதங்களின் பிடிப்பிலிருக்கும் தேசத்திற்கு செக்குலரிசம் என்னும் ஐரோப்பியக் கருத்தாக்கம் ஒத்துவராது என்று பேசி வந்தனர். ஆஷிஷ் நந்தி ஒரு படி மேலே சென்று நம்முடைய தேசத்திற்கான அரசியல் நம்முடைய பண்பாட்டிலிருந்தே எழுந்து வர வேண்டும். பல்வேறு மதங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காந்தியப் பார்வையிலான சகிப்புத்தன்மையை செக்குலரிசத்திற்கு மாற்றாக நந்தி முன்வைத்தார். நமக்கான பண்பாடு என்று அவர் கூறுவது இந்துப் பண்பாடாக மட்டுமே இருக்கிறது. ஆய்வுத் துறையிலிருந்து இவ்வாறு எழுந்த வந்த சொல்லாடல்தான் இன்று இந்துத்துவ அறிவாளிகளால் வளர்த்தெடுத்துச் செல்லப்படுகிறது.

இஸ்லாமிய அரசர்களின் ‘ஆக்கிரமிப்பை’யும் ஐரோப்பியக் காலனியத்தையும் ஒரே மாதிரி சாய் தீபக் மதிப்பிடுகிறார். அந்நியர்கள் என்ற வகைப்பாடுதான் அது. நவீன தேச அரசுகளின் தோற்றம் பற்றி அறிந்த எவரும் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டைத்தான் எல்லைகள் துலக்கம் பெறத் தொடங்கிய காலம் என்பர். அதற்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் செயல்பட்ட அரசியல் வடிவத்தை Concentric Circles என்று ரொமிலா தாப்பர் மதிப்பிடுவார். அதாவது அரசு ஒரு நகரத்தில் தனது அதிகாரத்தைக் குவித்திருக்கும். அம்மையத்திலிருந்து தூரம் செல்லச் செல்ல அதிகாரத்தின் தாக்கம் குறைந்து கொண்டே வரும். சுதிப்தா கவிராஜ்ள் ஒரு வட்டமாகச் சுருங்கியுள்ளது. தேவையின் பொருட்டு மட்டும்தான் ஒரு வட்டம் பிறிதொரு வட்டத்துடன் உறவாடும். உறவாடிய பின்னர் ஒவ்வொரு சமூகமும் மீண்டும் தனது வட்டத்துள் சுருங்கிவிடும். அரசும் இவ்வட்டமும் பெரிதாக உறவாடாது. அரசும் சமூகத்தின் குழுக்களும் ஒன்றையொன்று பாதிக்காமல்தான் இந்திய நிலப்பரப்பின் ஆட்சியதிகாரம் இருந்து வந்துள்ளது. இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்படும் தில்லி சுல்தான்களின் ஆட்சியும் முகலாயர்களின் ஆட்சியும் இவ்வாறே செயல்பட்டன. அது மட்டுமன்றி ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்காலமும் 1820 வரை அவ்வண்ணமே இருந்து வந்துள்ளது என்று பெய்லி, வாஷ்புரூக் முதலான வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அந்நியர்கள் என்று இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் குறிப்பிடுவது மற்றொரு பிரச்சனை. தம்மை இப்பூமியின் ஆதிகுடிகளாகவும் மற்றோரை புதிதாக வெளியிலிருந்து வந்த வந்தேறிகள் என்றும் காலம் காலமாகப் பலரும் சொல்லி வருகின்றனர். தங்களது பிரச்சனைகளுக்கான ஊற்றுக்கண் வேறெங்கோ உள்ளது என்பதையே இவர்கள் கோடிட்டுக் காண்பிக்கின்றனர். இந்துக்கள் தங்களை ஒடுக்கப்பட்டோராக (subaltern) முன்வைக்கின்றனர். உண்மையிலேயே சமூக-பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் இது போன்ற ஒரு சொல்லாடலைக் கைக்கொள்கின்றனர். அதிலும் உண்மைத் தன்மைப் பிரச்சனை உள்ளது. ஆனால் அவர்கள் முன்வைப்பது சுய விடுதலையையும் சுய மரியாதையையும் உறுதி செய்வதற்காக. மாறாக, இந்து தேசியவாதிகள் இவ்வாறு முன்வைக்கும் சொல்லாடல்கள் எல்லாம் இஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் கிறித்தவர்களுக்கும் இன்னும் பல சிறுபான்மையருக்கும் எதிராகவே முடியும்.

நம் நவீன காலத்து சமய அரசியல் இயக்கங்கள் எல்லாம் மேலைநாட்டுச் சாயலில் உருவாக்கப்பட்டவைதாம். அதற்கென அவை எல்லாவற்றையும் தூக்கிக் கடாசி விடுவதா? ராமகிருஷ்ணர் இயக்கம், பிரம்மோ சமாஜம், ஆரிய சமாஜம், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், அயோத்திதாசரின் சாக்கைய பௌத்த சங்கம் என இவை யாவும் கிறித்தவ மதப்பரப்புரையினரின் இயக்க வடிவத்தைத் தமதாக்கிக் கொண்டவைதாம். இரான் இராக் பகுதிகளில் காணப்பெற்ற சமய வழிபாடுகளுக்கும் வேத காலத்தில் காணப்பெற்ற சமய வழிபாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். வெளியிலிருந்து வரும் அனைத்தும் ஆபத்தானவை என்று இந்து தேசியவாதிகள் கட்டமைக்கின்றனர். சிந்தனை முறை வளர்ச்சி பற்றிப் பேசும் பக்தின், மொழிகளின் இடையே கேட்கும் சப்தங்கள் அனைத்தையும் Heteroglossia என்று குறிப்பிடுவார். ஒரு சிந்தனை பேருரையாடல்கள் மூலம்தான் கிளைத்தெழுகிறது. ஆனால் யாருடைய குரலில் இச்சிந்தனை வெளிப்பட்டது என்று தீர்மானிப்பது இயலாத காரியம் என்பது அவர் துணிபு. சிந்தனை உருவாக்கம் இவ்வாறு இருக்க இஸ்லாம் கிறித்தவம் ஆகிய மதங்கள் போன்று வெளியிலிருந்து வருபவை எல்லாம் ஆபத்தானவை என்று கட்டமைப்பது விஷமத்தனமான பிரச்சாரம்.

பெயர் மாற்றம் என்று இந்துத்துவர்கள் தூக்கிக் கொண்டு வருவது நிச்சயமாக Restorative Justice ஆக இருக்க இயலாது. தம்மை பாதிக்கப்பட்டோராகக் கற்பனை செய்துகொள்வதில் இந்துத்துவம் கூர்மையாகச் செயல்படுகிறது. இவ்விடத்தில் இந்திய அரசும் உ.பி. அரசும் முஸ்லிம் பெயர்களை நீக்கம் செய்வது, அரசியல் தளத்தில் அவர்களது இருப்பையே நீக்கம் செய்வதற்கு ஒரு முன்னோட்டம் தான். அதை வெளிநாடுகளுக்கு விற்கும் தந்திரோபாதயம் தான் நீதி, காலனியம் பற்றிய பேச்சுகள். காலனியத்தையும் இஸ்லாமிய அரசுகளின் ஆட்சியையும் ஒன்றுபடுத்திப் பேசுவது பெரும் வரலாற்றுப் பிழை. இஸ்லாமிய அரசுகள் என்ற பெயரிலும் நமக்குப் பிரச்சனை உள்ளது. காரணம் இங்கிருக்கும் இந்து அரசு என்றழைக்கப்படும் விஜயநகரப் பேரரசு தனது அரசியல், ஆட்சி வடிவமைப்பு எல்லாவற்றையும் சுல்தானியர்களிடமிருந்தே பெற்றுக் கொண்டது. Sultan among Hindu Kings என்று வாகோனர் இதைக் குறிப்பிடுவார். சிறு சிறு அரசுகளாகப் பிளவுபட்டிருந்த காலத்தில் ஒரு இந்து அரசுக்கும் பிறிதொரு இந்து அரசுக்கும் இடையில் நடந்த போர்கள் எத்தனை? ஒரு முஸ்லிம் அரசுக்கும் பிறிதொரு முஸ்லிம் அரசுக்கும் இடையில் நடந்த போர்கள் எத்தனை? மதம் என்னும் சட்டகம் அரசியல்மயப்படுவதற்கு முன்பான காலகட்டத்தில் இன்றைய புரிதல்களை ஏற்றுவது ஃபாசிசப் புரிதலே.

மற்றுமொரு பிரச்சனை காலனிய நீக்கம் என்ற பெயரில் சாய் தீபக் முதற்கொண்டு பலரும் பேசுவது. சமீபத்தில் மோடி பற்றியான பிபிசி ஆவணப்படத்துக்கு எதிராக இண்டியன் எக்ஸ்பிரசில் வந்த கட்டுரை ‘White media’s burden’ என்று பிபிசியின் செயல்களைக் கண்டித்தது. காலனிய நீக்கம் என்று வரலாற்றாசிரியர்களும் அரசியல் அறிஞர்களும் முன்வைக்கும் கருத்துகளிலிருந்து இந்துத்துவம் இதை எடுத்துக் கொண்டது. காலனிய நீக்கம் பற்றிப் பேசும் அறிவாளிகளின் வாதங்களும் பல்வேறு நேரங்களில் இவ்வரசியலுக்குத் தோதாக இருப்பதும் ஒரு காரணம். Subaltern Studies நூல் தொகுதிகள் உண்மையிலேயே அதுவரை கண்டுகொள்ளப்படாத பல்வேறு இயக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கு நாம் என்றுமே கடன்பட்டவர்கள் தாம். ஆனால் அவர்களது ஆய்வுச் சட்டகம் நிச்சயம் பிரச்சனைக்குரியது. காலனியத்திற்கு எதிராக அவர்கள் முன்னிறுத்தும் ஆளுமைகளில் பங்கிம் சந்திரரும் வருகிறார். இது பற்றி பிறிதொரு நேரத்தில் விவாதிப்போம். ஆனால் கொமரம் பீம், பிர்சா முண்டா போன்றோர் வரிசையில் இவரையும் வைப்பது பிரச்சனைக்குரியதுதான். உயர்சாதி இந்துக்களும் ஐரோப்பிய அமெரிக்கர்களுமே பெரும்பாலும் இவ்வாய்வு வட்டத்தில் உள்ளனர். இந்தியாவுக்கென்று ஒரு தனித்த பண்பாட்டுக்கூறைக் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் நமக்கான அரசியல் பாதையை வகுப்பது காலனிய நீக்க அறிவாளிகளின் முக்கியத் தூண்டுகோலாகும். பல நேரங்களில் சாதி, மதம், இனம் போன்ற அகில இந்திய வகைப்பாடுகளைக் கேள்வி கேட்பதற்கு இவ்வறிவுச் செயல்பாடு பயன்படுகிறது என்பது உண்மை. ஆனால், இதே அறிவுச் செயல்பாடு இந்துத்துவத்துக்கும் அருகில் சென்று நம்மை நிப்பாட்டுகிறது. அதன் ஒரு சிறு கீற்றுதான் சாய் தீபக்கின் இச்சிறு கட்டுரை.

நமக்கான கருத்தியலை நாம் தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. காலனிய நீக்கம் என்று நாம் சொல்லும் போது மதம் என்னும் தன்னிச்சையான ஒரு வகைப்பாட்டின் அடிப்படையைக் கேள்வி கேட்கிறோம். சாதி எப்படி ஒரு அகில இந்திய வகையினமாக அறிமுகப்படுத்தப்பட்டது என்று வினவுகிறோம். பெண்ணடிமைத்தனம் எவ்வாறு புதிய எல்லைகளைத் தொட்டது என்று பேசுகிறோம். நமக்கான காலனிய நீக்கச் செயல்பாடு இதுவாகவே இருக்க முடியும். செக்குலரிசம் பற்றி வேறொரு இடத்தில் விரிவாகப் பேசியுள்ளேன். நமக்கான மதச்சார்பின்மை சிறுபான்மையருடனான உரையாடலில் இருந்து கிளைத்து வருவதாக மட்டுமே இருக்க முடியும். இந்துத்துவர்களின் கையில் செக்குலரிசம் சிக்கிவிட்டது என்பதற்காக நமக்கான பணியை நாம் செய்யாமல் இருக்க இயலாது.