யூசுஃபுள் கர்ளாவி
தங்களது எழுச்சிமிக்க எழுத்துக்களின் மூலமும் வார்த்தை ஜாலம் நிறைந்த கவிதைகளின் மூலமும் புதிய வழிமுறைகளின் பக்கம் மக்களின் இதயங்களை திசை திருப்பிய இலக்கியவாதிகள் இவ்வுலகில் உண்டு.
கண்ணியமிக்க அறிஞர் பெருமக்களுமுண்டு. செய்திகளின் ஆழத்தை எளிதாக அளந்துவிடும் ஆற்றல் பெற்றவர்கள், சரி எது என்பதையும் தவறு எது என்பதையும் மிகத்துல்லியமாக கணித்து சொல்லும் கலை தெரிந்தவர்கள்.
ஆற்றல் மிக்க அழைப்பாளர்களும் நம்மில் உண்டு. தங்களது பேச்சாலும் எழுத்தாலும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் படைத்தவர்கள்.
ஆனால் எல்லா எழுத்தாளர்களும் அறிஞர்களும் அழைப்பாளர்களும் சிந்தனையாளர்களாக உருவாவதில்லை. ஆழமான அறிவும் சிந்திக்கும் ஆற்றலாலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்தான் சிந்தனையாளர்கள். மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்தும் அதற்கான தீர்வுகளைக் குறித்தும் சுயமான கருத்துடையவர்கள். யாருடைய கருத்துக்களின் பின்னாலும் பயணிக்காதவர்கள். உலகாளவிய பார்வையுடையவர்கள். ஏதாவது கருத்தியலோடோ சித்தாந்தத்தோடோ இணைந்து நிற்காமல் தனக்கான சித்தாந்த பாதையை வகுத்தவர்கள். அதனூடகத்தான் அவர்களை அடையாளம் காண முடியும். மார்க்சியம், கிறிஸ்தவம், இறையியல் என பலதரப்பட்ட சிந்தனையாளர்களை இப்படித்தான் உலகம் அடையாளப்படுத்துகிறது.
1979 செப்டம்பர் 23 அன்று ஈடு இணையற்ற ஒரு உலகளாவிய இஸ்லாமிய சிந்தனையாளரை முஸ்லிம் உலகம் இழந்தது. அவரை போன்றவர்கள் மிகவும் அரிதாகவே உருவாவார்கள். அவர்தான் இமாம் அபுல் அஃலா மௌதூதி. தன்னுடைய சிந்தனைகளாலும் எழுத்துக்களாலும் உலகில் இஸ்லாத்தின் வெளிச்சத்தை பரப்பியவர். அதன் மூலம் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் குறிப்பாக இஸ்லாமிய இயக்க தோழர்கள் பலனடைந்தனர். அவர்களின் கொள்கைப் போராட்டப் பாதையில் கலங்கரை விளக்காகவும் வஜ்ராயுதங்களாகவும் அவை விளங்கின.
மௌதூதி சிந்தனையின் சிறப்புகள்.
மௌதூதி சிந்தனையின் சிறப்புக்களைத் தெரிய வேண்டுமானால் அன்றைய சூழலைக் குறித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் நாடுகளை மேற்கத்தியக் கலாச்சாரமும் சித்தாந்தங்களும் ஆதிக்கம் செலுத்தியக் காலகட்டமது. உஸ்மானியா கிலாபத் உருக்குலைந்த தருணம். கிலாபத்தின் கீழ் இருந்த நாடுகள் அனைத்தையும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிறகு கருத்தியல் ரீதியாகவும் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
அன்றைய இந்திய முஸ்லிம்கள் இடையே அதிகமான தாக்கம் செலுத்தி வந்தன சிந்தனைகளை கீழ்க்காணுமாறு பட்டியல் இடலாம்.
- பழைமைவாத சிந்தனை.
பழைய கருத்துக்களிலேயே ஊறிக்கிடக்கும் பழமைவாதிகள் இவர்கள். முன்னோர்கள் தங்களது பின் தலைமுறைகளுக்காக எதையும் விட்டு வைக்கவில்லை என்பதே இவர்கள் நிலைப்பாடு. முன்னோர்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மத்ஹப் மற்றும் என்றோ முடிந்து போன கருத்தியல் சிக்கல்களில்தான் இவர்களின் கவனம் குவிந்திருந்தது.
புதிய கருத்துக்களோடும் ஆராய்ச்சிகளோடும் கடும் விரோதப்போக்கை அவர்கள் கொண்டிருந்தனர். இஜ்திஹாதின் கதவுகளை அடைத்துவிட்டனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த அறிஞர்களின் கருத்துக்கள் அனைத்தும் என்றும் நிலையானவைகள், சாகா வரம் பெற்றவைகள் என்று அவர்கள் கருதினர். இமாம்கள் இடையேயும் அவர்களது சீடர்களிடையேயும் கூட ஏராளமான கருத்து முரண்பாடுகள் இருந்தன. இமாம் அபூ ஹனிபாவின் சீடர்களே இமாம் அவர்களின் முன்னூறுக்கும் மேற்பட்ட கருத்துக்களில் முரண்பட்டிருந்தனர். ஒரே விஷயத்தில் இமாம் மாலிக்கும் இமாம் அஹமதும் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தனர்.
ஹகீமுல் இஸ்லாம் ஷா வலியுல்லா தெஹ்லவி இதற்கெதிராக மிகக் கடுமையாக போராடிய சீர்திருத்தவாதி. ஆனாலும் பெரும்பான்மை முஸ்லிம்களும் தங்களது கடுவாய் பற்களால் பழைமை கருத்துக்களை இறுக பற்றிப் பிடித்தனர். பெரும்பான்மையான மக்கள் இமாம் அபூ ஹனிஃபாவையும் இமாம் ஷாஃபியையும் சூபிகள் இமாம் ஜூனைதியின் வழிமுறைகளையும் பின்பற்றி வந்தனர்.
- மூட நம்பிக்கைகள்..
பிற முஸ்லிம் நாடுகளைப் போலவே இந்தியாவிலும் மூட நம்பிக்கைகளுக்கு நல்ல சந்தை இருந்தது. சில ஆன்மீக குருக்களும் அவர்களுக்கு சில ஆதரவு வட்டங்களும் இருந்தன. தாங்கள் சூஃபி பரம்பரையைச் சேந்தவர்கள் என்பது அவர்களது வாதம். இவர்களுக்கு நபி வழிமுறைகளில் எந்த முன் மாதிரிகளையும் காண இயலாது.
தங்களது குருநாதர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றல் உண்டு எனவும் மறைமுகமான விஷயங்கள் அவர்களுக்கு தெரியும் எனவும் அதன் மூலம் மக்களது பிரச்சனைகளை அவர்களால் தீர்க்க முடியும் எனவும் அவர்கள் கருதினர். உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல இறந்தவர்களுக்கு கூட அந்த ஆற்றல் இருப்பதாக நம்பினர். அதனால் அவர்கள் இறந்தவர்களுக்கு தர்காக்களை எழுப்பி வழிபாடுகளை நடத்தத் துவங்கினர். அங்கே நேர்ச்சைகளை நிறைவேற்றினர். தங்களது தேவைகளை சொல்லி உதவிகளை கேட்டனர்.
இப்படிப்பட்ட தவறான வழிகளில் பயணித்தவர்களுக்கு சரியான வழி காட்டக் கூடியவர்கள் எவருமில்லை. அன்றைக்கு இருந்த பலரும் இவர்களது நம்பிக்கைகளை பயன்படுத்தி சுரண்டிக் கொண்டிருந்தனர். அவர்களது தோற்றங்களை கண்டு மக்கள் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களை கேள்வி கேட்பதும் மறுதலிப்பதும் மாபெரும் குற்றம் என அந்த அறிஞர்கள் கூறி வந்தனர். மக்களை வெறும் ஒரு மய்யத்துகளாக அவர்கள் மாற்றியிருந்தனர்.
இறந்தவர்களுக்கு கப்ருகளை எழுப்பியதோடு மட்டுமின்றி போலியாகவும் கப்ருகளை உருவாக்கி தங்களது வருமானங்களை பெருக்கிக் கொண்டிருந்தனர்.
சமூகத்தில் நடக்கும் தவறுகளை கண்டும் காணாமல் மௌனிகளாகவும் குருடர்களாகவும் கடந்து சென்றனர். அந்தத் தவறுகளை நியாயப்படுத்தவும் செய்தனர். குற்றங்களையும் குற்றவாளிகளையும் இஸ்லாமிய சட்ட விதிகளின் (ஷரீஅத்) அடிப்படையில் பார்க்கக்கூடாது. மாறாக ஆத்ம பார்வையின் (ஹகீகத்) அடிப்படையில் பார்க்கவேண்டும். அப்போதுதான் தப்பிக்க வழிகள் கிடைக்கும் எனவும் மக்களிடம் அவர்கள் கற்பித்தனர். ஷரீஅதையும் ஹகீகத்தையும் அவர்கள் பிரித்துப் பார்த்தனர்.
பலதெய்வ வழிபாட்டாளர்களை விடவும் மோசமான நிலையில் அவர்கள் நிலை இருந்தது. மூடத்தனமான நம்பிக்கைகளால் அவர்களது அறிவு மலுங்கிப்போயிருந்தது. சூபிசத்தை வியாபாரமாக மாற்றியவர்கள்தான் இதற்கு பின்னால் இருந்தனர். பல முஸ்லிம் நாடுகளை விடவும் இந்தியாவில் மூட நம்பிக்கைகளின் நிலை படு மோசமாக இருந்தது. இந்து சமூகத்துடனான நெருங்கிய நிலைதான் இதற்கு முக்கிய காரணம். சூபிகள் என்ற பெயரில் உலாவியவர்கள் இறைமொழியையும் நபிவழியையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
இந்நிலையை குறித்து மௌதூதி இப்படிக் கூறினார்.
“உங்களது பகுதில் வாழும் மக்களின் வணக்க நிலைமைகளை ஆய்ந்து பாருங்கள். முஸ்லிம்களின் நிலைமைகளையும் உற்று கவனியுங்கள். இரு குழுக்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகளை உங்களால் பார்க்க முடியாது. இஸ்லாத்திற்கு முன்பு, புத்த மதநம்பிக்கையாளர்கள் புத்தரின் உடல் சேகரிப்புகளை வழிபட்டனர். இங்கே புத்தரின் எலும்பு உள்ளது…. அங்கே பல் உள்ளது… சற்று தொலைவில் புத்தரின் பிற பாகங்கள் உள்ளன எனக் கூறி மக்கள் அவைகளை வழிபட்டு வந்தனர். இன்று முஸ்லிம்கள் நபிகளாரின் தலைமுடியையும் பற்களையும் செருப்பையும் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர். முஸ்லிம் அவ்லியாக்களின் சேகரிப்புகளையும் புனிதமாகக் கருதி வருகின்றனர்.
சில முஸ்லிம் குலங்களின் வழிபாட்டு முறைகளுக்கும் அதைபோன்ற பிற குலங்களின் வழிபாட்டு முறைகளுக்கும் பெரிய வேறுபாடுகளை பார்க்க முடியாது. கடந்த காலங்களில் முஸ்லிம்களை வழிநடத்தியவர்களின் பொறுப்பற்ற தன்மையைத்தான் இது காட்டுகிறது”.
- மேற்கத்திய சிந்தனை அடிமைத்துவம்..
மேலே குறிப்பிட்டவர்களுக்கு நேர் எதிர் திசையில் உள்ளவர்கள்தான் மேற்கத்திய அடிவருடிகள். மேற்கத்திய நாகரீகத்தை பின்பற்றக்கூடிய, முற்று முழுதாக அதனிடம் சரணடைந்து அதனுடன் இணைந்து பயணிக்கக்கூடிய சிந்தனை. இவர்களைத்தான் நாம் ‘மேற்கின் அடிமைகள்’ என அழைக்கிறோம் மேற்கத்திய நாகரீகத்தின் எல்லா அம்சங்களையும் கண்மூடி அங்கீகரிக்கும் புதிய மூட நம்பிக்கையாளர்கள். அவற்றில் எவ்வளவு குறைகள் இருந்தாலும் அவற்றை தங்களது சமுதாயம் பின்பற்ற வேண்டியது காலத்தின் தேவை என அவர்கள் கருதினர்.
இப்படிப்பட்ட ஒரு எகிப்தியன் கூறினான் “மறுமலர்ச்சியின் பாதை மிகத் தெளிவாக உள்ளது. அது ஐரோப்பியர்கள் தங்களது மறுமலர்ச்சிக்காக பயணித்த பாதைதான். அதில் குறைகள் இருந்தாலும் அவற்றை நாம் பின்பற்றவேண்டும்”
இந்த சிந்தனைதான் எல்லா முஸ்லிம் நாடுகளிலும் பிரதிபலித்தது. மேற்கத்திய வழிமுறைகளை பின்பற்றச் சொல்லி சர் செய்யது அஹமது கான் போன்றவர்கள் கூட வாதிட்டனர். சொந்தம் மதத்தில், சமூகத்தில் நம்பிக்கையற்றவர்கள். பெயரிலும் குடும்பத்திலும் மட்டுமே இவர்களது மதத்தின் அடையாளங்கள் இருந்தது. பலரிடமும் இஸ்லாமிய தோற்றங்கள் இருந்தாலும் இவர்களது சிந்தனைகளும் ஒரியண்டலிஸ்டுகளின் சிந்தனைகளும் ஒன்றாகத்தான் இருந்தன. இடதாகவும் வலதாகவும் அவர்களது கருத்துக்கள் இருந்தாலும் ஒரு மரத்தின் கிளைகள் போல அவற்றின் மூலங்கள் மேற்காகத்தான் இருந்தன. மனித வாழ்க்கையில் மதம் சொல்லும் – இறைவன், தூதர், மலக்குகள், வேதங்கள், மறுமை உட்பட – எந்த கருத்துக்களுக்கும் இடமில்லை. இவர்களது பார்வையில் மனித வாழ்க்கையில் ஒழுக்கங்களுக்கும் நற்பண்புகளுக்கும் இடமில்லை.
- நிராசை அடைந்த நிலை.
மேலே சொன்னவர்களை விட சிறிது மேம்பட்டவர்கள் இவர்கள். மேற்கத்திய நாகரீகத்தை அங்கீகரிக்காவிட்டாலும் தங்களது மதத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டதன் காரணத்தால் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்ற உணர்வின் காரணமாக மேற்கை பின்பற்றுபவர்கள். வெளிப்படையாகவில்லை எனினும் உள்ளுராக அதைச் சரியென நம்புபவர்கள். அதனால் அவர்கள் மேற்கின் முன்பாக தோல்வி மனப்பான்மையுடன் சரணடைகின்றனர். அதற்கான நியாய வாதங்களை ஃபத்வாக்களாக கூறுகின்றனர். பன்மடங்கு வட்டிதான் கூடாது. சிறிய வட்டியை ஹலால் ஆக்கினார்கள். நுகர்விற்காக அல்லாமல் வியாபாரத்திற்காக வட்டி கொடுக்கல் – வாங்கல் செய்யலாம் என வாதிட்டனர். தலாக், பலதார மணம் உள்ளிட்டவைகளை இல்லாமல் ஆக்குவதற்கும் துணிந்தனர். ஜிஹாதை அதனுடைய பெயரிலும் பொருளிலும் வலுவிழக்கச் செய்து ஜிஹாதிய உணர்விலிருந்து முஸ்லிம் சமூகத்தை அப்புறப்படுத்துவது. அதன்மூலம் வேட்டைக்காரர்களுக்கு முன்னால் நிராயுதபாணிகளாக முஸ்லிம்களை தள்ளி விடுவதுதான் இவர்கள் செயல்.
- மன்னிப்பு நிலை…
தற்காப்பு மனோநிலையில் உள்ளவர்கள் இவர்கள். இஸ்லாம் ‘தற்காப்பு நிலையில்’ உள்ளதாக அவர்கள் கருதினர். இஸ்லாத்திற்கெதிராக நீண்ட குற்றப்பத்திரிக்கையை அவர்கள் வாசித்தனர். இஸ்லாம் இதை கட்டாயப்படுத்துகிறது… அதை தடுக்கிறது… இதை அனுமதித்தது…. அதை சட்டமாக்கியது என மேற்கிற்கும் மேற்கத்திய சிந்தனையின் அடிமைகளுக்கும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை அவர்கள் பட்டியலிட்டனர். இவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை நிராகரிக்காவிட்டாலும் உலகின் வளர்ச்சிக்கு காரணம் மேற்கத்திய அடிப்படைகள்தான் காரணம் நம்புகின்றனர். நம்முடைய நாடுகளில் மிகப்பெரிய அறிஞர்கள் பலர் இருந்தனர். அவர்களில் பலரும் இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள்தான்.
- சுன்னத் மறுப்புக் கொள்கை…
மேலே சொன்னவர்களுக்கிடையில் சுன்னத் மறுப்பாளர்களும் இந்தியாவில் இருந்தனர். குர்ஆன் மட்டும் போதும். நபி வழிகள் தேவையில்லை என்ற வாதத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நபிவழியோ நபி மொழியோ இல்லாமல் குர்ஆனை புரிந்து கொள்ள முடியாது என்ற அடிப்படை உண்மையை இவர்கள் திட்டமிட்டே புறக்கணித்தனர்.
- காதியானி சிந்தனை…
சுன்னத் மறுப்பாளர்களை விட இவர்கள் சற்று அதிகமாக இருந்தனர். நபிகளாரோடு நபித்துவம் முற்றுப்பெறவில்லை. புதிய இறைதூதர் வருகை தந்துள்ளார் என்ற போலி இறைத்தூதுவத்துடன் அவர்கள் முஸ்லிம்களை வழி கெடுத்துக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணான இக்கருத்தியல் மேற்கத்திய உதவியுடன் பலமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது., மிர்சா குலாம் அஹமது என்பவன் தன்னை இறைதூதராக பிரகடனம் செய்து மக்களை திசை திருப்பினான். அல்லாமா இக்பாலின் வார்த்தைகள்தான் மிகச்சரி. “முஹம்மதிய நபித்துவத்திற்கு எதிரான கலகம் இது”
மௌதூதியின் வருகை…
சிக்கல்களும் குழப்பங்களும் நிறைந்த சூழலில்தான் மௌதூதி களமிறங்கினார். அது பலரிலும் தாக்கங்களை உருவாக்கியது. அல்லாமா இக்பால் கூட ஆரம்ப கட்டத்தில் இஸ்லாமிய விரோதியான முஸ்தபா கமால் அத்தாதுர்க்கை புகழ்ந்துரைத்தார். உண்மை விளங்கிய உடனேயே தனது கருத்துக்களை திருத்திக் கொண்டார். அவர் மட்டுமல்ல மகாகவி அஹமது சவ்கிற்கும் இதே நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் அடிப்படைகளில் எவ்வித மாற்றங்களையும் செய்து கொள்ளாமல் அதே நேரத்தில் நவீன கருத்தியல்களுடன் மௌதூதி களம் கண்டார்.
மக்கள் புரிந்து கொண்டது அல்ல இஸ்லாம். நபிகளாருக்கு இறைவழிகாட்டுதலாய் கிடைத்து மட்டுமே இஸ்லாம். அதை உரத்துச் சொல்ல அவருக்கு எவ்வித தயக்கமும் ஏற்படவில்லை. நபிகளார் முஆதிற்கு சொன்னதை போன்று இறைவழிகாட்டுதலை அறிவின் துணை கொண்டு ஆழமாக படித்தார். அதனை பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார் மௌதூதி சிந்தனைகளின் சிறப்புகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
- இஸ்லாம் முழுமையானது என்பதில் உறுதி…
மௌதூதி தன்னை சுற்றி இருந்த கருத்தியல்களில் இருந்தும் விடுபட்டு நின்றார். மூடநம்பிக்கைகளின் குதுபியாக்களை உடைத்தார். மத்ஹபி கருத்தியல்களை புறக்கணித்தார். மேற்கத்திய அடிமை மனோபாவத்தை புறந்தள்ளினார்.
குர்ஆன் ஹதீசுகளின் ஒளியில் இஸ்லாமிய கருத்தியல்களை மறுவாசிப்பு செய்தார். மௌதூதி முன்னெடுத்த இஸ்லாமில் பிற கலப்புகள் இல்லை. கம்யூனிசமும் சோசலிசமும் ஜனநாயகமும் தேசியவாதமும் அவரது கருத்துக்களில் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை. இஸ்லாமிய கருத்தியல்களுக்கு அதனது தனிமையார்ந்த வழிமுறைகள் உண்டு. அதனூடாகத்தான் அது பயணிக்கும். இறை நீதியின் அடிப்படையில் மட்டுமே அது செயல்படும்,
“அல்லாஹுவின் நிறம்! அல்லாஹுவின் நிறத்தை விட சிறந்தது எது உள்ளது?” (2:138)
மௌதூதியின் இஸ்லாம் முழுமையானது. அது கொள்கையில் மட்டும் ஒதுங்கி நிற்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைகளில் ஊன்றி நின்று அவர் உலகத்தை பார்த்தார். தனி நபரும் சமூகமும் பொருளாதாரமும் அரசியலும் வழிபாடுகளும் இறைவழிகாட்டுதலின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும் என அவர் வாதிட்டார். இஸ்லாம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
- கால கட்டத்தோடு பயணித்தவர்..
ஒரு கண்ணின் மூலம் இஸ்லாத்தையும் மறு கண்ணின் மூலம் உலகத்தையும் பார்த்தவர் மௌதூதி. அவர் நிகழ்காலத்தை புறக்கணித்து கடந்த காலத்தில் வாழவில்லை. மாறாக சமகால சித்தாந்தங்களை அதனுடைய மொழியில் நேரிட்டார். அதனுடைய யுக்திகளையே அவற்றிற்கு எதிராக பயன்படுத்தினார். அதனுடைய முறையற்ற நியாயங்களை அவர்களுடைய விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி தோற்கடித்தார். அல்லாஹுவின் அருளுக்கு ஆளான அழைப்பாளனின் பண்பு இது. “அவர்களுடைய மொழியில் அவர்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லுவதற்காகத்தன் இறைதூதர்களை நாம் அனுப்பினோம்” என்ற இறை வசனத்தின் பொருளை நன்றாக உள்வாங்கிய அழைப்பாளன்.
மௌதூதி அவர் வாழ்ந்த கால கட்டத்தையே நேரிட்டார் என்பதையே அவரது புத்தகங்கள் நமக்கு உணர்த்துகிறது. சமகால பிரச்சனைகளை குறித்து மிகத் தெளிவாக உள்வாங்கியிருந்தார். மேற்கின் சித்தாந்தங்களையும் அது இளைய தலைமுறைகளிடத்தில் ஏற்படுத்தியிருந்த தாக்கங்களையும் அதனது தோல்விகளையும் அதற்கு பின்பலமாக இருப்பவர்களையும் மௌதூதி தெரிந்திருந்தார். அதனடிப்படையில் இருந்துதான் மேற்கத்திய சித்தாந்தங்களுக்கு எதிரான அவரது வலுவான அறிவுசார் தாக்குதல்கள் உருவானது.
- எதிர்கொண்ட விதம்
தற்காப்பு மனோநிலையிலோ நிராசை அடைந்தவராகவோ இஸ்லாத்தை குற்றவாளிக் கூண்டிலே அடைத்து விட்டோ மேற்குதான் சகலமும் என்ற சரணாகதி அடைந்தோ மௌதூதி இஸ்லாத்தை மக்களிடத்தில் சமர்ப்பிக்கவில்லை.
தான் முன்வைக்கும் இறை மார்க்கமான இஸ்லாத்தின் மீது மிகப்பெரிய மதிப்பை கொண்டிருந்தார், அதை நூறு சதவீதம் நம்பினார். பலவீனமான மனிதால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் கருணையின், அறிவின், உரிமையாளனான அல்லாஹுவின் சட்டங்களுக்கு முன்னால் ஒன்றுமேயில்லை என்ற சத்தியம்தான் அவரது நம்பிக்கையின் ஆதார சுருதி. ”தெரிந்து கொள்ளுங்கள், படைத்தவனுக்கே அனைத்தும் தெரியும்”
4. சீர்திருத்தவாதி…
எல்லா சிந்தனையாளர்களும் சீர்திருத்தவாதிகளாக உருவானதில்லை. சமூகத்தைக் குறித்து சிந்திப்பவர்களுக்கு மட்டுமே சமூகத்தின் பிரச்சனைகளை உள்வாங்க முடியும். வெறுமனே சித்தாந்த தத்துவங்களை கதைப்பவர்களால் சமூகத்திற்குள் மாற்றங்களை உருவாக்க முடியாது.
.தான் வாழும் சமூகத்தை ஆட்கொண்டுள்ள நோயை குறித்து மிகத் தெளிவாக புரிந்து கொண்ட மௌதூதி அதற்கான நிவாரணம் எது என்பதையும் தெரிந்திருந்தார். அந்த நோயை அவர் ஜாஹிலிய்யது என்ற ஒற்றை வார்த்தையில் அடையாளப்படுத்தினார். மானுட வரலாறு என்பது போராட்ட வரலாறுதான் இஸ்லாத்திற்கும் ஜாஹிலிய்யதிற்குமான போராட்டம். ஜாஹிலிய்யத்தை ஒழிப்பதுதான் இறைத்தூதர்களின் வேலை.
உலகை ஆதிக்கம் செலுத்தும் ஜாஹிலிய்யத்தை தோற்கடித்து இறை விதிகளின் பால் உலகை மீட்டெடுத்து வருவதுதான் தனது பொறுப்பு என உணர்ந்திருந்தார். உண்மையில் இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்களைத்தான் இஸ்லாமிய உலகம் முஜத்தித் என்று அழைக்கிறது.
மௌதூதியின் சிறப்புக்களில் முக்கியமான ஒன்று, தான் உணர்ந்து கொண்டவைகளின் அடிப்படையில் சமூக மாற்றுவதற்காக ஒரு இயக்கம் கண்டவர் மெளதூதி. ஏதாவது ஒரு அறையில் தனிமையில் ஒதுங்கிக் கிடந்து தனது சிந்தனைகளை புத்தகங்களாக்கி சமூகத்தை கடந்து சென்றவரல்ல அவர். வார்த்தைகளை மட்டுமல்ல மனிதர்களையும் கோர்க்கத் தெரிந்த தலைவர். தனது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மனிதர்களை ஒருங்கிணைத்து ஒரு அழகிய மாலையாய் இயக்கத்தை படுத்துயர்த்தினார் மௌதூதி. அதனூடாக சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு அவர் வித்திட்டார். அதன் அடிப்படைகளாக அவர் மூன்று விஷயங்களை முன்வைத்தார்.
- ஏகனான அல்லாஹுவிற்கு மட்டும் அடிமைப்படுதல். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இறைச்சட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும்.
- இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அந்த நம்பிக்கைக்கு உண்மையாக இருக்கு வேண்டும். அதில் நயவஞ்சகம் கூடாது. செயல் முரண்களிலிருந்து விடுபடவேண்டும். இறை வர்ணத்தையே தங்கள் வர்ணமாக கொள்ள வேண்டும்.
- பூமியில் அதிகாரங்களை கைப்பற்றி இறைவரம்புகளை மீறி குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து அதிகாரத்தை இறையடியாளர்களின் கைகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் மட்டுமே வாழ்வின் சகல துறைகளிலும் இறைச்சட்டங்களின் அடிப்படையிலான முன்னேற்றத்தை உருவாக்க முடியும்
மேற்சொன்ன விஷயங்களின் அடிப்படையில்தான் அவர் ஒரு இஸ்லாமிய இயக்கத்தை – ஜமாஅத்தே இஸ்லாமியை – உருவாக்கினார்.
மௌதூதியின் சில நிலைப்பாடுகளோடு முரண்பாடுண்டு. எனினும் அவர் முன்வைத்த அடிப்படை கருத்தியல்கள் என்பது மனித கால வரலாறு தொட்டு இறைதூதர்கள் முன்வைத்ததுதான். காகட்டத்தின் முஜத்திதாக மௌதூதி தனது சிந்தனை மற்றும் இயக்க பங்களிப்பின் மூலம் துவண்டு கிடந்த இஸ்லாமிய உலகிற்கு உயிரூட்டினார். இருண்டு கிடந்த அறிவுலகிற்கு குர்ஆனிய ஒளி கொண்டு வெளிச்சமூட்டினார்.
– அல்லாமா யூசுஃபுல் கர்ளாவி.
Translation – K.S. அப்துல் ரஹ்மான்
.