(எஸ்ஐஓ தமிழ்நாடு சார்பாக 29 ஜூன் 2024 அன்று நடைபெற்ற தஃவா பயிற்சி வகுப்பில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

கிறிஸ்தவ மதம், 2.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படக்கூடிய பரந்த உலகளாவிய இருப்பைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய மதமாகும். இது 1ஆம் நூற்றாண்டில் யூதேயாவில் தோன்றியது. சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட கிறிஸ்தவம், கிறிஸ்தவர்களால் கடவுளின் மகனாகக் கருதப்படும் இயேசு கிறிஸ்தவின் (அவருக்கு அமைதி உரித்தாகுக) வாழ்க்கை மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. கிறிஸ்தவத்தின் முக்கிய கருத்துக்கள், வரலாறு மற்றும் பைபிள் ஆகியவற்றை ஆராய்வதன் மூலம் செல்வாக்குமிக்க இந்த மதத்தினை குறித்த அடிப்படை புரிதலை வழங்குவது இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

ஆதி பாவம்

ஆதி பாவம் என்ற கருத்து ஆதியாகமம் புத்தகத்தில் காணப்படுகிறது. கதையின்படி, ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் தடைசெய்யப்பட்ட பழத்தை சாப்பிடுவதன் மூலம் கடவுளுக்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகுகிறார்கள். இந்தச் செயல் மனிதகுலத்தை சிதைத்து, துன்பத்தையும் மரணத்தையும் உலகிற்கு கொண்டு வந்ததாக கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. அனைத்து மனிதர்களும் இந்த ஆதி பாவத்தின் விளைவுகளை வாரிசாகப் பெற்றுள்ளார்கள் என்றும், இதனால் அவர்கள் இறைவனின் அருளில் இருந்து தூரமாக்கப்பட்டார்கள் என்று நம்பப்படுகிறது.

“ஆதி பாவம் என்பது நாம் யாருடன் இருக்கிறோமோ அதுவல்ல. நாம் யாருடன் பிறக்கிறோமோ அது”, என்கிறார் ஹிப்போவின் அகஸ்டின். அதாவது பிறக்கும் போதே மனிதன் பாவியாக பிறக்கின்றான் என்ற கோட்பாட்டை கிருஸ்த்துவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.

திரித்துவம்

திரித்துவம் என்பது ஒரு சிக்கலான கோட்பாடாகும். இது குறித்து பைபிளில் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், பல்வேறு விவிலிய கருத்துகளில் இருந்து இதற்கு விளக்கங்கள் கொடுக்கிறார்கள்.

தந்தை, மகன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி என்பது இதன் அடிப்படை. அதாவது, இவர்கள் மூவரும் தனித்தனியானவர்களாக இருந்தபோதிலும் ஒரே கடவுளாக ஒன்றுபட்டுள்ளனர், சாராம்சத்திலும் சக்தியிலும் சமமானவர்கள் என்கிறார்கள்.

“கடவுள் தனது சாராம்சத்தில் ஒன்றாகவும், அவரது தனித்துவத்தில் (Hypostasis) மூன்று நிலைகளில் இருக்கிறார்”, என்றும் இதனை அலெக்ஸாண்டிரியாவின் அதனாசியஸ் கூறுகிறார்.

கற்ற கிறிஸ்தவ மதகுருமார்களும் அறிஞர்களும் இந்த கருத்தை விசுவாசத்தின் மர்மம் (Mystery of Faith) என்கிறார்கள். மேலும், இது மனித அறிவால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாதது ஒன்று என்றும் கூறுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து கிறிஸ்தவத்தின் மைய உருவம்

பிரதான கிறித்துவர்கள், இயேவை முழுமையான கடவுளாகவும் முழுமையான மனிதராகவும் நம்புகிறார்கள். கத்தோலிக்கம், கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் மற்றும் பெரும்பாலான புராட்டஸ்டன்ட் பிரிவுகள் (மெத்தடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், லூத்தரன்கள் போன்றவை உட்பட) அனைத்தும் ஹைபோஸ்டாடிக் யூனியனை நம்புகிறார்கள். இது, இயேசு ‘கடவுள் மற்றும் முழுமையாக மனிதர்’ என்ற இரண்டு இயல்புகளைக் கொண்ட ஒரே நபர் என்று கூறுகிறது.

“நாங்கள் இரண்டு கடவுள்கள் இருக்கிறார்கள் என்று கூறவில்லை. ஆனால், ஒரே கடவுள் தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்று கூறுகிறோம்”, என்கிறார் டமாஸ்கஸின் ஜான். இந்த நம்பிக்கை பல்வேறு விவிலிய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும், இது ஆரம்பகால சர்ச் கவுன்சில்களிலிருந்து ஒரு முக்கியக் கோட்பாடாகவும் இருந்து வருகிறது.

இந்த கருத்திற்கு மாற்றாக சில கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. அவை,

  • யூனிடேரியன் யுனிவர்சலிசம்: இந்த மதப்பிரிவை சார்ந்தவர்கள் திரித்துவத்தையும் இயேசுவின் தெய்வீகத்தையும் நிராகரிக்கிறார்கள். அவர்கள் இயேசுவை ஒரு தீர்க்கதரிசியாகவும் தார்மீக ஆசிரியராகவும் பார்க்கிறார்கள்.
  • யெகோவாவின் சாட்சிகள்: இந்த மதப்பிரிவை சார்ந்தவர்கள் இயேசுவை தந்தையான கடவுளால் “படைக்கப்பட்டவர்” என்றும் கடவுளுக்கு நிகரானவர் இல்லை என்றும் கூறுகிறார்கள்.
  • பிரதான கிறிஸ்தவர்களால் மதச்சார்பற்றவைகளாக கருதப்படும் எபோனைட் மற்றும் ஏரியன் போன்ற குழுக்கள், இயேசு முழுமையாக மனிதர் என்ற கருத்தை கொண்டிருந்தன. மேலும், மதச்சார்பற்ற சில கிறிஸ்தவ பிரிவுகள் இயேசு கிறிஸ்து பற்றி வெவ்வேறு விளக்கங்களைக் கொண்டுள்ளன.

பிரதான கிறிஸ்தவர்களுக்குள் கூட, ஹைபோஸ்டாடிக் யூனியன் குறித்து சில இறையியல் விவாதங்கள் இருப்பினும், இயேசு கடவுள் மற்றும் மனிதர் என்ற அடிப்படை நம்பிக்கையில் நிலையாகவே உள்ளனர்.

சிலுவையில் அறையப்படுதல்

சிலுவையில் அறையப்படுவது கிறிஸ்தவத்தில் முக்கிய நிகழ்வாகும். இது மனிதகுலத்தின் மீதான கடவுளின் அன்பையும், தியாகத்தின் மூலம் மீட்பைக் கொண்டுவருவதற்கான அவரது விருப்பத்தையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.

இரத்தப் பாவ நிவாரணம் என்ற கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இரத்தம் மனிதகுலத்தின் பாவங்களுக்கு பரிகாரம் என்றும், இது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது. மேலும், இது இயேசு கிறிஸ்துவின் தியாகத்தின் மூலமே சாத்தியமானது என்றும் நம்பப்படுகிறது.

(அடுத்த பகுதியை வாசிக்க)