(எஸ்ஐஓ தமிழ்நாடு சார்பாக 29 ஜூன் 2024 அன்று நடைபெற்ற தஃவா பயிற்சி வகுப்பில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

உலகில் எத்தனையோ மார்க்கங்கள் மதங்கள் கொள்கை கோட்பாடுகள் தோன்றி அவற்றில் சில அழிந்தும் சில தொடர்ந்து மக்களிடம் இருந்து கொண்டிம் இருக்கிறது. அந்த வகையில் மிகப் பழமையான மதமாக கருதப்படுகின்ற இந்து மதத்தை பற்றிய சில புரிதல்கள் நமக்கு தேவைப்படுகிறது.

உலகின் மூன்றாவது பெரிய மதமாக கருதப்படுகிற இந்து மதம், எப்பொழுது தோன்றியது? அதனுடைய கொள்கை கோட்பாடுகள் என்ன? அதனுடைய வணக்க வழிபாடுகள் என்ன? போன்றவை பற்றி இக்கட்டுரையில் நாம் பார்ப்போம்.

பெயர் காரணம்

“இந்து” என்ற சொல் ‘சிந்து’ (Sindhu) என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, சிந்து நதிக்கு கிழக்குப் பகுதியில் வசித்த மக்கள் அனைவரையும் சேர்த்து குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது பல்வேறு மக்கள் பல்வேறு வணக்க வழிபாடுகளை சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றி வருவதை கவனித்தார்கள். குடிமைச் சமூகமாக மக்களை ஒருங்கிணைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தார்கள். அதற்காக எவர்கள் கிறிஸ்தவர்கள்,  முஸ்லிம்கள், புத்தர்கள் இல்லையோ அவர்கள் அனைவரையும் “இந்து” என்ற ஒற்றைச்சொல்லால் குறிப்பிட்டார்கள்.

ஏனெனில், இம்மக்கள் அவரிடத்திலும் கடவுள்கள், சடங்குகள், சாதி ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும், பிராமணர்களை வைத்து கடவுளுக்கு பூஜை செய்வதை அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையாக ஆங்கிலேயர் கருதியதனால் இந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது “டிஸ்கவரி ஆப் இந்தியா” என்ற புத்தகத்தில் இவ்விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்து மதத்தின் தோற்றம்

இந்து என்கிற பெயர் தற்காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அம்மக்களின் சடங்கு சம்பிரதாயாங்கள் பல நூற்றாண்டுகளாக தொடந்து பின்பற்றி வருவதாக இருக்கிறது.இங்கே ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. அதனால், பல்வேறு வகையிலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயமாக இந்து சமயம் விளங்குகிறது.

பழங்கால புராணங்களும், பல தெய்வக் கோட்பாடுகளும், சிலை வழிபாடுகளுமே இந்து சமயத்தின் அடிப்படை ஆகும். சிலை வழிபாட்டை அடிப்படையைக் கொண்டே இந்து சமயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த பகுதி மக்களின் சிந்தனைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்றார்போல் புதிய தெய்வங்களையும், சடங்குகளையும் சிலை வழிபாட்டில் இணைத்து வழிபட்டு வந்துள்ளனர். சிலை வழிபாட்டு முறையானது உலகம் முழுவதும் பலவருடங்களாக பழக்கத்தில் இருந்து ஒன்றாகவே உள்ளது.

உதாரணமாக, திருக்குர்ஆனில் கூட நூஹ் என்ற இறைத்தூதரை பற்றி கூறும் பொழுது அன்றைய காலத்தில மக்கள் சிலை வழிபாட்டிலே மூழ்கி இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

“உங்களுடைய கடவுள்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாஉ, யஃகூஸ், யஊஃக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன்: 71:23)

திருக்குர்ஆனின் இந்த வசனத்தின் படி பார்க்கும் பொழுது ஆதம் நபிக்கு பிறகு பூமியில் தோன்றிய இரண்டாவது இறைத்தூதர் நூஹ் நபியின் காலத்தில் இருந்தே மக்களிடையே பல தெய்வக் கோட்பாடும் சிலை வழிபாடும் இருந்து வந்துள்ளது தெரிகிறது. யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம்  ஆகிய மார்க்கங்களுக்கு பொதுவாக இருக்கக்கூடிய இறைதூதர் (ஆபிரகாம்) இப்ராஹீம் நபி அவருடைய காலத்திலும் சிலை வழிபாடு இருந்து வந்துள்ளது.

இந்தியாவில் தோன்றிய இந்து சமயம்

இந்து மதத்தின் முதல் தோற்றம் என்பது வரலாற்றுக்கூற்றின்படி வேத காலம் என்று அழைக்கப்படும் கி.மு 1900 முதல் கி.மு 1400ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் ஆகும்.

சிந்து சமவெளி நாகரிகம் சரிந்த பிறகு, பொ.ஆ.மு. 2000லிருந்து 1500க்குள் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம். ஒவ்வொரு நாகரிகமும் அழிகின்ற போது அங்கிருந்த மக்கள் வாழ்வாதாரத்தை தேடி வேறு பிற பகுதிகளுக்கு நாடோடிகளாக செல்லத் தொடங்கினர். அப்படி அன்றைய அகண்ட ஈரானாக இருந்த ஆப்கானின் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து நாடோடிகளாக இந்தியாவிற்குள் வந்தவர்கள் தான் ஆரியர்கள். அவர்களின் வருகைக்கு முன்பு வரை தமிழகத்திலும் தற்பொழுது உள்ள இந்தியாவிலும் மக்கள் சிலை வழிபாட்டில் ஈடுபட்டதாக ஆதரங்கள் எதுவும் எந்த ஓர் அகழ்வாய்வுகளிலும் கிடைக்கவில்லை.

தமிழகத்திலும் கூட கி.பி 5ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் இந்து சமயம் பரவியிருக்கலாம் என்று சங்க கால இலக்கியங்களின் அடிப்படையில் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அதற்கு முன்புவரை நிலத்தின் அடிப்படையிலேயே மக்கள் பலக்கிளைகளாக பிரிந்து வாழ்ந்தனர். கீழடி போன்ற அகழ்வாய்வுகளில் கூட சிலைகள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை.

இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கை

இந்து வேதங்களின் அடிப்படையில் கடவுள் என்றால் அது ஒரு “பிரம்மம்” அதாவது அந்த சக்தி அணுவை விட சிறியது இந்த பிரபஞ்சத்தை விட பெரியது. அந்த சக்திக்கு பல்வேறு பெயர்களை வைத்துள்ளார்கள். அதன் பிரதான வேலைகளாக படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவை இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்த மூன்று வேலைக்கும் மூன்று கடவுளை பிரிக்கின்றார்கள். படைப்பதற்கு பிரம்மன், காப்பதற்கு விஷ்ணு, அழிப்பதற்கு சிவன்.

இந்து மதம் உள்ளடக்கிய சமயப் பிரிவுகள்

இன்றைய இந்து மதமானது இந்தியாவிலிருந்த பழமையான 6 சமயப் பிரிவுகளான “சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்” ஆகியவற்றை உள்ளடக்கி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

  • சைவம்

சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம். ஆரம்பமும் இறுதியும் சிவனே என்பர் சிவனடியார்கள். சிவனின் அடியார்களான 63 நாயன்மார்கள் சிவனை வழிப்படுவதை சைவம் என்று அழைத்தனர். சைவம் தமிழில் சிவனியம் ஆகும். உமை, விநாயகர், முருகர், பரமனின் (சிவபெருமானின்) அம்சமான பரிவார கடவுள்கள் பைரவர் (வீரத்தின் அதிபதி), தட்சிணாமூர்த்தி/பரமகுரு (ஞானத்தின் அதிபதி), வீரபத்திரர், நாகதம்பிரான் மற்றும் கிராமப்புற தெய்வங்களும் வழிபாட்டுத் தெய்வங்களாகச் சைவர்களால் வழிபடப்படுகின்றன.

சிவனை உருவகிப்பதில் சாம்பல் பூசுதல், புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடிகளின் கூறுகள் முக்கிய பங்கு வகிப்பதால், பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் உருவானதே  சிவ மதம் (சைவ சமயம்) என்றும் சொல்லலாம்.

  • வைணவம்

விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம். உலகில் தீமைகள் ஓங்கும் போது காக்கும் கடவுளான விஷ்ணு மனித வடிவில் அவதாரம் எடுத்து அவற்றை அழித்து நல்லவர்களைக் காப்பார் என்பது வைணவர்களின் நம்பிக்கை. வைணவர்களின் தத்துவமாக அவர்கள் கூறும் பிரம்மம் என்கின்ற சக்தி விஷ்ணுவே ஆகும். அவர்தான் பெருமாள், நாராயணன், திருமால் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

வைணவர்கள் விஷ்ணு, இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக (சிலை) கோயில்களில் காட்சியளிப்பளிப்பதாக நம்புகிறனர். அர்ச்சாவதாரங்களை வணங்குவதே மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் நாராயணனை அடைய எளிதான வழி என்று வைணவர்கள் நம்புகின்றனர்.

வைணவ சமயத்தில் ஶ்ரீவைணவம், மாத்வ சம்பிரயாதம், கௌடிய வைணவம், வர்க்காரி, சுவாமிநாராயண் சம்பிரதாயம், அரே கிருட்டிணா இயக்கம் எனப்பல பிரிவுகள் உள்ளன. ஶ்ரீவைணவத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உண்டு.

  • சாக்தம்

சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம். இப்பிரிவு சைவத்திலிருந்து தோன்றியதாகும். சக்தியை பெண் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். கடவுளைப் பாதி ஆண், பாதி பெண்ணாகவும் கருதி வழிபட்டனர். இச்சக்தி (பெண் தெய்வத்தை) பிற்காலப் புராணங்களில் தனித் தனிக் கடவுள்களுக்கு மனைவியாக உருவப்படுத்தப்பட்டது. விஷ்ணுவிடத்தில் லஷ்மிமியாகவும், உமைவடிவத்திலும் (அமைதி நிலையில்), துர்க்கை (காளி, சாமுண்டி, பைரவி, விந்திய வாசினி) (கடுமையான நிலையில்) ஆகவும் பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் காணப்பட்டது.

ஏறத்தாழ கி.பி 500இல் “சக்தி/அம்மன்” வழிபாடு தனி வணக்கமாக ஏற்கப்பட்டது. அம்மனை முழுமுதற் கடவுளாக வணங்கும் மக்களும் ஏற்பட்டனர். சக்தியையே முழுமுதற் கடவுளாக வணங்கும் இவர்கள்தான் சாக்தர். தங்களை இவர்கள் சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக்கொள்வர்.

யோக வகைகள் இச்சமயத்தை சார்ந்தவைகளாகும். மந்திரம், யந்திரம், முத்திரை, சக்கரம் என்பன இச்சமயத்தில் சித்தியடைய சொல்லப்படும் வழிகளாகும்.

  • காணாபத்தியம் – கணபதியை (விநாயகரை) முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

  • கௌமாரம் – முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

  • சௌரம் – சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

பொதுவாக, இச்சமயங்கள் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் ஆகிய 3 பெரும்பிரிவுகளாகவே கருதப்படுகிறன. அதனடிப்படையில் காணாபத்தியம், கௌமாரம் சைவ சமயத்தின் உட்பிரிவாகவும் சௌரம் வைணவ சமயத்தின் உட்பிரிவாகவும் உள்ளது.

(அடுத்த பகுதியை வாசிக்க)