(எஸ்ஐஓ தமிழ்நாடு சார்பாக 29 ஜூன் 2024 அன்று நடைபெற்ற தஃவா பயிற்சி வகுப்பில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)

(முதல் பகுதியை வாசிக்க)

இந்து மதத்தின் முக்கிய சில கோட்பாடுகள்

  • அவதாரக் கோட்பாடு

இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் ஒரு சமூகம் தீமை செய்யும் போது அவர்களை திருத்தி நேர்வழிப்படுத்துவதற்காக மனிதர்களிடமிருந்து இறைத்தூதர்களை இறைவன் தேர்ந்தெடுப்பது (தூதுத்துவம்) கொள்கையாக உள்ளது.  ஆனால் இந்து மதத்தில், எங்கெல்லாம் தீமைகள் தலை தூக்குமோ அதை அழிப்பதற்கு நன்மை நிலை நாட்டுவதற்கு கடவுளே மனிதனாக அவதரித்து வருவதாக நம்புகின்றனர். அவதாரம் என்றால் ‘இறங்கி வருதல்’ என்று பொருள்.

“யதா யதாஹி தர்மஸ்ய….”

கிருஷ்ணர் சொல்வதாக: “அர்ஜுனா, எப்போதெல்லாம் தருமம் குன்றி அதர்மம் மேலெழுகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; சாதுக்களைக் காத்து, தீயோரை அழித்து தர்மத்தை நிலை நாட்ட யுகம் தோறும் நான் வந்துதிக்கிறேன்”. (பகவத் கீதை: 4-7,8)

இறைவன் மனித வடிவெடுக்காது வேறு வடிவில் அவதரித்து வந்த (மச்சாவதாரம், கூர்மாவதாரம், நரசிம்மாவதாரம் போன்ற) அவதாரக் கதைகளையும் இதிகாசங்களும் புராணங்களும் விவரித்துள்ளன.

பிரம்மன் அவதாரம் எடுப்பதாக எந்த ஒரு தகவலும் புராணங்களில் கிடைப்பதில்லை. புராணங்களின் அடிப்படையில் பெரும்பாலும் விஷ்ணுவே அவதாரம் எடுப்பதாக கூறப்படுகிறது.

சிவன் போர் புரிய அவதாரம் எடுப்பதாக ஓறிரண்டு புராணக் கதைகள் உள்ளன. பெரும்பாலும், அவதாரக் கொள்கை வைணவர்களிடமே காணப்படுகிறது.

விஷ்ணு எடுத்த அவதாரங்கள்: (1) மத்ஸ்யாவதாரம் (2) கூர்மாவதாரம் (3) வராகாவதாரம் (4) வாமனாவதாரம் (5) நரசிம்மாவதாரம் (6) பரசுராமாவதாரம் (7) ராமாவதாரம் (8) கிருஷ்ணாவதாரம் (9) பலராமாவதாரம் (10) கல்கியாவதாரம்.

  • மறு ஜென்ம கோட்பாடு

கருமா/மறு ஜென்மம்/மோட்சம் என்ற வார்த்தைகள் உலகத்தை விட்டு பிரிந்தவர்களுக்கு சொல்லப்படுகின்ற கோட்பாடாகும். இந்த உலகத்தில் பிறக்கின்ற மனிதர்கள் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் பிரிக்கப்படுகிறார்கள். அவர்கள் இறந்த பிறகு மீண்டும் பிறப்பார்கள். இதை அடுத்த ஜென்மம் என்று சொல்கிறார்கள். அதாவது முதல் ஜென்மத்தில் அந்த மனிதன் நல்ல மனிதனாக வாழ்ந்தான் என்றால் அவருடைய கருமா உயர்கிறது. அடுத்த ஜென்மத்தில் அவன் நல்ல நிலையில் வாழ்வான் அப்படி அவன் வாழும் பொழுது தீமைகள் செய்தாலும் அவனது கருமா அவனை தடுக்கும். அவனுக்கு வரக்கூடிய தீங்கான விஷயங்கள் முன் ஜென்மத்தில் செய்த நல்ல செயல்களினால் தடுக்கப்படுகிறது.

அதே போல ஒரு மனிதன் ஒரு ஜென்மத்தில் பாவமான காரியங்களை செய்தான் என்றால் அவன் இறந்த பிறகு மீண்டும் பிறக்கிறான். அடுத்த ஜென்மத்தில் அவனுடைய கருமாவின்  காரணத்தினால் அவனுக்கு வருகின்ற தீமைகள் பாதிப்புகள் அவன் ஏற்க நேரிடும். இதுவே மறு ஜென்ம கோட்பாடாகும்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு மனிதன் தீமை  பாவமான காரியங்களை தொடர்ந்து செய்கிறான் அவனுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. தொடர்ந்து செல்வத்துடனும் புகழுளுடனும் வாழ்கிறான். இதற்கு காரணம், அவன் முன் ஜென்மத்தில் நல்ல செயல்களை செய்து அதிக கருமாக்கலை உடையவனாக இருக்கிறான். அவனுடைய கருமா தீரும் வரை அவன் பாவமே செய்தாலும் நல்ல நிலையில் வாழ்வான். அதே போல ஒருவன் இந்த உலகத்திலே ஏழையாகவும், நோயாளியாகவும் எந்த தொழில் செய்தாலும் அதிலே நஷ்டம் அடைந்து வாழ்க்கையே வெறுப்படைந்து வாழ்ந்து கொண்டிருப்பான் இதற்கு காரணம் அவன் போன ஜென்மத்தில் செய்த பாவத்தினால் அவனது கருமாக்கல் முடிந்திருக்கும்.

இன்னொரு வகையில் சொல்லப்போனால் பாவமான காரியங்கள் செய்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் மனிதர் அல்லாத மிருகமாக பிறந்து பூமியிலே வாழ்வார்கள். இதுதான் இந்து சமயத்தில் சொல்லப்படுகிற கருமாவும் மறு ஜென்ம கோட்பாடுமாகும்.

இதில், அடுத்த ஜென்மம் வேண்டாம் என நினைப்பவர்கள் தங்களுடைய எல்லா பாவங்களும் கழிந்து மோட்சம் அடைய வேண்டும் என்று எண்ணுவர். அதற்காக, சில சடங்கு, சம்பிரதாயங்களை செய்கிறார்கள். சைவ சமயத்தின் அடிப்படையில் ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் கங்கை ஆற்றில் குளித்து இறந்துவிடுவரானால் அவருடைய பாவங்கள் கங்கையிலே கழுவப்படுகிறது. அவர் மோட்சம் அடைந்து மறு ஜென்மம் எடுக்காமல் சிவனுடன் சேர்ந்து விடுவார் என நம்புகின்றனர்.

  • வர்ணாசிரம கோட்பாடு

இதில், மனுதர்ம சாஸ்திரத்தின் படி சமூகம் வர்ணங்களாக பிரிக்கப்படுகின்றது. மனு ஸ்மிருதி-இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும்.

வர்ணம் என்பதற்கு சாதி என்பது பொருள். அதற்குரிய தர்மம் வர்ண தர்மம் எனப்படும். தாவரங்கள், , விலங்குகள் என்பது பொதுவாகவிருப்பினும், அவற்றிலும் பற்பல வகைகள் உள்ளன. அந்தந்த சாதியின் விதையிலேயே ஸூஷ்மமாய் அவரவர் கருமத்தின்படி கடவுளினால் அமைக்கப்பெற்றிருப்பதாக கருதுகின்றனர். அவ்விதமான அமைப்பை மற்றவரால் மாற்ற முடியாது.

வேம்பு சந்தனமாகுமா? புலி பசுவாகுமா? வேப்பம் விதையை வெகுகாலம் தேனில் ஊரவைத்து விதைத்தாலும் அது தன்மை மாறுமா? மிளகாயும் கரும்பும் ஒரே பூமியில் முளைத்து ஒரே தண்ணீரில் வளர்க்கப்பட்டினும் மிளகாய் காரமாக இருப்பதற்கும் கரும்பு தித்திப்பதற்கும் காரணமாகவிருப்பது அவற்றின் விதைகளது குணங்களாகும். அவ்விதமே மனிதர்களிலும் கடவுள் அவரவர் கர்மமாகிய விதையின் குணத்தைத் தழுவிப் பிறவிலேயே வெவ்வேறு சாதியினரைப் படைத்திருக்கின்றார்.

“ஸத்வம் முதலிய குணங்கள், கர்மங்கள் இவற்றின் வேற்றுமையைப் பொருத்து நான்கு வர்ணங்கள் என்னால் ஸ்ருஷ்டிக்கப் பெற்றிருப்பான்” என்று கீதையில் பகவான் கூறுகிறார். ஆதலால் சாதி என்பது  பிறவியிலேயே ஏற்படுவதன்றி பிறந்தபிறகு ஏற்படுத்தக் கூடியதல்ல என்று கருதுகின்றனர்.

கீதையின் அடிப்படையில் நன்கு வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு பின்வருமாறு குணங்களள் வகுத்துக் கொள்ளப்பட்டது.

  1. பிராமணர் – மிகு சாத்வீகம் (சத்துவ குணம்).
  2. சத்திரியர் – குறை சாத்வீகம் அதிக ராசசீகம் (இராட்சத குணம்), குறை தமாசீகம்.
  3. வைசியர் – சாத்வீகமற்றவர், குறை ராசசீகம், அதிக தாமாசீகம்.
  4. சூத்திரர் – சாத்வீகமற்றவர், ராசசீகமற்றவர், தாமசீகம் மட்டும் தாமச குணம்.

முக்கியமான இந்து மத நூல்கள்

  1. முதன்மையான நான்கு வேதங்கள் (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்).
  2. உபநிடதம் (குரு ஒரு சீடருக்கு போதிக்கும் கல்வி).
  3. பிரம்ம சூத்திரம் (சூத்திரம் என்றால் சுருங்குதல் என்று அர்த்தம், எது உபநிடதங்களில் உள்ளதோ, எதுவெல்லாம் கீதையில் பேசப்பட்டதோ அதுவெல்லாம் பிரம்ம சூத்திரத்தில் அடங்கும்).
  4. பகவத் கீதை (கடவுளின் பாடல் என்று அர்த்தம்) (மகாபாரதத்தின் ஒரு பகுதி).
  5. இதிகாசம் (கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய  வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறு) (ராமாயணம், மகாபாரதம்).
  6. பாகவதம் (வைணவம் சமய இலக்கியம்).
  7. புராணங்கள் (18 மகா புராணங்கள்) (கதைகளில் வடிவில் உள்ளவை. பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகளின் தோற்றம், அவர்களின் அவதாரங்கள், தேவர்கள்–அரக்கர்களின் போர்கள் போன்றவற்றை இவை விவரிக்கின்றன).
  8. மனுதர்ம சாஸ்திரம் (மனு ஸ்மிருதி) (இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல்).
  9. ஆகமங்கள் (இந்து மதத்தின் முப்பெரும் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய சமயங்களின் சமயக்கோட்பாடுகள், கோவிலமைப்பு, கோவில் வழிபாடு, மந்திரமொழிகள் ஆகியவை அடங்கிய நூல்).

முடிவுரை

முன்பு பார்த்தது போல் இந்து மதத்தை நெறிப்பதுத்ட ஒரு மைய அமைப்பு இல்லாததால் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வகையிலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றை உள்வாங்கிக் கொண்டது. அதனால நம்பிக்கைகளிலும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

உதாரணமாக, மகாபாரதமும் இராமாயணமும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வகையாக எழுதப்பட்டுள்ளன. அதேபோல இந்துக்களின் நம்பிக்கைகளிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இப்படி சிலவற்றை தவிர பெரும்பாலானவை காலத்துக்கு ஏற்றார்போல் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்ற காரணத்தால் போலி சாமியார்களும் மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற சடங்கு சம்பிரதாயங்களும் மூட பழக்கவழக்கங்களும் மற்ற மதங்களை விட இந்து மதத்தில் அதிகமாகவே இருக்கிறது.

இந்து மதம் பற்றி தெரிந்துகொள்ள இன்னும் பல தகவல்கள் உள்ளன. அவற்றை குறித்து அறிந்துகொள்வதர்கான ஆரம்பநிலை தகவல்களின் தொகுப்பே இக்கட்டுரை. இக்கட்டுரையானது இந்து மதத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகுவதற்கான நுழைவாயிலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.