உலகின் கடந்த காலங்களிலும் நிகழ் காலத்திலும் தொடர் பேசுபொருளாக இருப்பவற்றில் பெண் தொடர்பான உரையாடலுக்கு முக்கிய இடமொன்று இருக்கிறது.பதவி,உரிமை, பொருளாதாரம், கட்டுப்பாடு என பல்வேறுபட்ட தலைப்புகளில் அந்த உரையாடல்கள் நடந்திருப்பதை நம்மால் காணமுடியும்.தற்போது தமிழகத்த்தில் கூட பெண்களின் உடையொழுங்கு சம்பந்தமான உரையாடல் மேழுந்திருக்கிறது.
இந்நேரத்தில் இஸ்லாம் எம்மாதிரியான உடையொழுங்கை எம் சமூக பெண்களிடத்தில் எதிர்பார்க்கிறது என்பதை முன்வைத்து பேசுவது சிறந்ததொரு பங்களிப்புக்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது.
இஸ்லாமிய பார்வையில் ஆடையின் நோக்கம் இரண்டு வகை:
1.அவ்ரத்தை மறைத்தல்.(மறைக்க தேவையானதை மறைத்தல்)
2.அலங்காரம்.
இதனையே பின்வரும் திருக்குர்ஆனின் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.
“ஆதத்தின் மக்களே! உங்களுடைய வெட்கத்தலங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்குப் பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்.”
(அல்குர்ஆன் : 7:26)
இஸ்லாம் ஆடை குறித்து வழங்கும் பொதுப்படையான பார்வையே இது.அடுத்ததாக பெண்களின் ஆடையை குறித்து இன்னும் மேலதிக தகவல்களை இஸ்லாம் சொல்லிச் செல்கிறது.
“உடல் உறுப்புகள் வெளியே தெரியும்படியான ஆடைகள் அணிவதை முஸ்லிம் பெண்ணிற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.அதிலும் குறிப்பாக மார்பகங்கள்,பிட்டம்,இடுப்பு முதலிய இச்சையைத் தூண்டும் உடலிலுள்ள பாகங்கள் வெளியில் தெரியும்படி அணியும் ஆடையை இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ளது.”
ஆடை அணிந்த நிர்வாண தோற்ற கலாச்சாரம் சமூகத்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.சமகாலத்தில் பல பெண்களின் ஆடைகள் உடலின் உறுப்புகளை மிகத் தெளிவாக வெளிக்காட்டும் வண்ணம் இவ்வாறுதான் உள்ளது.இது இஸ்லாமால் எச்சரிக்கை செய்யப்பட்ட ஒரு விஷயம்.
திருக்குர்ஆனின் வசனமே அதனை தெளிவாக எடுத்தியம்புகிறது:
“ஆதத்தின் மக்களே! எவ்வாறு ஷைத்தான் உங்கள் தாய் தந்தையரை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றினானோ, மேலும் அவர்களுடைய வெட்கத்தலங்களை பரஸ்பரம் வெளிப்படுத்திட வேண்டும் என்பதற்காக அவர்களுடைய ஆடைகளைக் களைந்தானோ அவ்வாறு மீண்டும் உங்களை அவன் குழப்பத்திலாழ்த்திட வேண்டாம்.”
(அல்குர்ஆன் : 7:27)
பெண் ஆணைப் போன்று ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்திருக்கிறது.
பெண் ஆணைப் போன்று ஆடை அணிவதையும்,ஆண் பெண்ணைப் போன்று ஆடை அணிவதையும் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
இயற்கை அமைப்பிற்கும் இயல்பான மனித சிந்தனைக்குமே மாற்றமாக இருப்பதினால் தான்
இஸ்லாம் இவற்றை தடை செய்திருக்கிறது.
இஸ்லாமிய சட்டதுறையின் நோக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இவற்றையெல்லாம் நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.இஸ்லாம் பெண்களை போற்றி அவளது பலவீனத்தை கருத்தில் கொண்டே இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.பெண்கள் உடலமைப்பில் கவர்ச்சியானவர்கள்.அவர்களது அங்கங்கள் இயல்பாகவே ஆண்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை.பெண்களின் உடற் கவர்ச்சிகள் வெளிப்படும்போது ஆண்களின் உணர்ச்சிகள் அவர்களை மிகைத்து விடுகின்றன.இதன் காரணமாக கூட அதிகமான பாலியல் வன்முறைகள் நடந்தேறுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.எனவே,இத்தகைய பாலியல் வன்முறைகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் வழங்கும் பெண்களின் ஆடை குறித்த பார்வையும் பெரிதும் உதவுகிறது. இதனையே திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது:
” அவர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்கள் தொல்லைக்கு ஆளாகாமலிருப்பதற்கும் இதுவே மிகவும் ஏற்ற முறையாகும். “
(அல்குர்ஆன் : 33:59)
இஸ்லாம் வழங்கும் உடையொழுங்கு குறித்த பார்வை நிச்சயம் பெண்களுக்கு கண்ணியமும் பாதுகாப்பும் தரவல்லது.
முஸ்லிம் பெண்களின் ஆடை:
1.முகம்,இரு கைகளையும் தவிர உடலின் ஏனைய பகுதிகள் முழுவதையும் மறைக்கும் வண்ணம் இருக்கவேண்டும்.
2.அடர்த்தியான, உடலின் அமைப்பை வெளிக்காட்டாத முறையில் அமைந்திருக்க வேண்டும்.(இது மிகவும் வலியுறுத்தப்பட்ட விஷயம்)
3.பிறரை ஈர்க்கும் கவர்ச்சிகரமாக இல்லாதிருத்தல் வேண்டும்.
4.ஆண்களை போன்ற ஆடை அணிதல் கூடாது.
இவற்றில் சில அரசியல் சிக்கல்களும் உள்ளன..
இஸ்லாம் பெண்களின் ஆடை குறித்து வழங்கும் பார்வை அடக்குமுறையை காட்டுவதாகவும் சுதந்திரசிந்தனைக்கு மாற்றமானதொன்று எனவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து கூக்குறலிட்டு வருகின்றனர்.இவர்களின் இந்த கரிசனை பார்வைக்கு பின்னாலுள்ள அரசியல் மிகவும் நுண்ணியமானது.
இதனை கனடாவின் ஆசிரியை கெத்ரீன் புல்லொக் மிகத்தெளிவாக பேசுகிறார்.முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்து பேசும்போது அதனுடன் மேற்கத்திய பார்வையை விமர்சனம் செய்தும் பேசும் கெத்ரின் புல்லொக்
அவரின் ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக அவருள் ஏற்படும் மனக்கேள்வியே இருந்தது என்கிறார்.
“விடுதலையும்,சுதந்திரமும் அளிப்பதாக நானும் எனது தோழியரும் கருதும் ஓர் அம்சம்,ஏன்?எம்மைச் சூழவுள்ள சமூகத்துடன் இத்துணை முரண்பாடுகளை ஏற்படுத்தி வைத்துள்ளது?”
இதற்கான காரணம் சொல்லும்போது இப்படி சொல்கிறார்.தம்மைக் மறைத்துக் கொண்டுள்ள பெண்களை காண்பது ஐரோப்பியர்களுக்கு சங்கடத்தை தந்தது.”தம்மால் காண இயலாத பெண்களால் தாங்கள் காணப்படுகிறோம்” என்பதே.
இது அவர்களின் பார்வையில் பெண்களுக்கு ஒருவித மேட்டிமையை வழங்கியது.எனவே,அதனை அரசியலாக்கும் முயற்சியிலும் இறங்கினர்,செய்துகொண்டும் இருக்கின்றனர்.உலகமே ஒரு காட்சிப் பண்டமாக இருக்க குறிப்பிட்ட பெண்கள் மட்டும் தங்களின் பார்வைக்கு காட்சிப் படுத்தப்படாமலிருப்பது மிகப்பெரிய சங்கடத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.
உலகமே காட்சிப் பண்டமாக பாவிக்கப்படும் ஒரு சூழலில்,பெண்ணுடம்பை வர்த்தகப் பொருளாக்கும் முதலாளித்துவ முனைப்பும் உள்ள காலகட்டத்தில் பெண்கள் தங்கள் அழகையும்,அலங்காரத்தையும் வெளிக்காட்டாதிருப்பது முஸ்லிம் பெண்களின் ஆடை குறித்து இஸ்லாம் கூறும் உடையொழுங்கு பெண்களுக்கு வலிமையூட்டி விடுதலையளிப்பதாகவே உள்ளதென கெத்ரீன் புல்லொக் விளங்கப்படுத்துகிறார்.
ஆம், பெண்களின் உடல் வெறும் கவன ஈர்ப்பு செய்வதற்கு மட்டுமே இங்கு பயன்படுத்தப்படுகிறது.இத்தகைய முதலாளித்துவ சிந்தனையிலிருந்து பெண்களை விலக்கி நிறுத்துவது இன்றைய காலத்தின் தேவை.அதுவே அவர்களை மானுடத் தன்மை கொண்டவர்கள் என்ற சிந்தனையின் பக்கமும் இட்டுச்செல்லும்.
உலக முஸ்லிம் பெண்களிடத்திலும் இன்னும் முஸ்லிம் நாடுகளிலும் கூட இன்றைக்கு இஸ்லாம் வழங்கும் உடையொழுங்கு காணமுடியாமல் உள்ளது.
இது சரிசெய்யப்பட வேண்டும்.
பெண்ணுரிமை,சுதந்திரம்,பாதுகாப்பு இவற்றை உரையாடுபவர்களின் கருத்துக்கள் முதலாளித்துவ சிந்தனையில் சிக்கியிருப்பதாகவே நம்மால் அவதானிக்க முடிகிறது.இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது போன்ற கோஷங்களும் கூட இத்தகைய முதலாளித்துவ சிந்தனை பிண்ணனியிலிருந்து எழுபவையே.
இஸ்லாம் மனிதர்கள் இவ்வுலகில் எப்படி வாழ்ந்திட வேண்டும் என்பதை வகுத்துத் தருகின்றது.இப்படி வகுத்தளிக்கும் வேளையில் இஸ்லாம் மனித இயல்புகளை வளைக்கவோ,முறிக்கவோ முயற்சி செய்வதில்லை.மனித இயல்புகேற்ற வழிகளையும்,நெறிகளையுமே இஸ்லாம் வழங்கியிருக்கின்றது.மனித இயல்பை தழுவிய வழிகாட்டல்களே மனிதனை திருப்தி அடையவும் செய்கின்றது.
–மௌலவி . முஹம்மது அலி ஸலாமி