2021 புத்தாண்டு துவங்கியதிலிருந்து அமெரிக்காவின் அரசியல் மாற்றம் குறித்தே சர்வதேச ஊடகங்கள் அதிகம் விவாதித்து வந்த சூழ்நிலையில் ஒரு சில ஊடகங்கள்- விதிவிலக்காக, வேறு சில கவனப்படுத்தப்படாத அரசியல் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தன.  ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் அதிபர் தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் தேசிய கவுன்ஸிலுக்கான தேர்தல் ஆகியவற்றை இந்தாண்டு நடத்த ஹமாஸ் இயக்கமும், நேட்டோவின் ஆதரவுப்பெற்ற முஹம்மது அப்பாஸின் பிரிவும் முடிவெடுத்துள்ளன என்பது அப்படிப்பட்ட செய்திகளுள் ஒன்று.

இச்செய்தி வெளிவந்ததிலிருந்து இஸ்லாமிய இயக்கங்கள் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் தேர்தல்களில் பங்கெடுப்பது சரியானதா என்ற பழம்பெரும் விவாதம் மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது. 

தேர்தல் பங்கெடுப்பு ஹலாலா ஹராமா என்ற கேள்விக்குள் செல்ல வேண்டாம். கிரஸண்ட் இண்டர்நெஷனல் மற்றும் அதன் தொடர்பில் இருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் இஸ்லாமிய வட்டத்திற்குள் நின்று  தேர்தலில் பங்கெடுப்பது என்பது இஸ்லாத்தில் ஆகுமானது என்ற கருத்தையே கொண்டுள்ளோம். 

ஆயினும்  இஸ்லாமிய இயக்கங்கள் எப்போது தேர்தலில் பங்கேற்கலாம் என்ற கேள்விக்கு உறுதியான பதில் இல்லை. அது அந்தந்த பகுதியின் சூழமைவுக்கு உட்பட்டது.

ஆனால் தேர்தல் களத்தை சந்திக்கும் முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் பெற்றிருக்க வேண்டிய ஒரு சில முக்கியத்துவம் மிகுந்த சமூக-அரசியல் மாறிகள்(Variables) இருக்கின்றன. இந்த  சமூக-அரசியல் மாறிகளை நடைமுறை சார்ந்து கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளை எவ்வித சட்டப்பூர்வ அந்தஸ்தும் இல்லாத எதேச்சதிகார ஆட்சியாளர்களே ஆளுகின்றனர். இவர்கள் வெளிநாட்டு சக்திகளுக்கு விசுவாசமாக நடக்கக்கூடியவர்கள் என்பது வெட்டவெளிச்சமாகும்.

இந்த ஆய்வை வெற்றி கதைகளிலிருந்து துவங்குவோம். வெற்றிக்கதை என்றவுடனே ஈரானின் இஸ்லாமிய இயக்கத்தினர் அதிகாரத்திற்கு வந்ததை குறித்து அலசும் ஆவல் எழக்கூடும்,  ஆனால நாம் இங்கு ஈரானிய மாதிரியை அலச போவதிவில்லை. ஈரானின் இஸ்லாமிய புரட்சி குறித்து விளக்கம் ஏதும் தேவையில்லை. ஈரானை குறித்து ஒருவருக்கு எப்படிப்பட்ட அபிப்பிராயம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஈரானில் மட்டும் தான் இஸ்லாமிய இயக்கம் எதேச்சதிகார அரசை தூக்கியெறிந்து விட்டு இஸ்லாமிய விழுமியம் சார்ந்து, நவீன ஆளுகை முறையில் புதிய அரசை கட்டமைத்தது என்பதை மறுக்க முடியாது.

லெபனானின் ஹிஸ்புல்லாஹ், ஃபலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் ஏமனின் அன்ஸாருல்லாஹ் ஆகிய மூன்று இஸ்லாமிய இயக்கங்கள் குறித்தே நாம் மேலதிகமாக பார்க்க இருக்கின்றோம்.  இம்மூன்று இஸ்லாமிய இயக்கங்களும் அவற்றின்  முதன்மை அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மட்டும் பகிர்ந்துக் கொண்டவை அல்ல. மாறாக இவர்கள் பொதுவான வழிமுறையை(Common Methodology) பின்பற்றுபவர்கள். அதன் மூலம் தங்களின் எல்லைகளுக்கு அப்பாலும் செல்வாக்கு செலுத்துபவர்கள்.

ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அன்ஸாருல்லாஹ் ஆகிய மூன்றின் கட்டமைப்பும் அடிமட்ட மக்களையும் உள்ளடக்கும் வகையில் அமைந்துள்ளது. அதன் தலைவர்களில் முதன்மையானவர்கள் பாரம்பரிய வழியில் இஸ்லாமிய கல்வியை கற்றவர்கள்.  AKP கட்சியின் தலைவர்களைப் போன்றோ அல்லது துனிஸியாவின் அந்-நஹ்தா இயக்கத்தின் தலைவர்களை போன்றோ மேற்கு மைய நிறுவனங்களில் பயின்றவர்கள் அல்லர்.

இம்மூன்று இயக்கங்களும் தங்களது அரசியல் பணிகளை சமூக பிரச்சனைகளிலிருந்தே துவங்கினர். தங்கள் நாட்டின் ஊழல் செறிந்த அரசு நிர்வாகத்தையும் அதன் தலைவர்களையும் கடந்தேசமூகத்தின் தேவையை நிறைவேற்றுவதிலும், பொது மக்களின் குறைகளை களைவதிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். வெகுஜன மக்கள் திரளுடன் நேரடியான தொடர்புகளை அமைத்துக் கொண்டனர்.  இந்த மூன்று இயக்கங்களுக்குமிடையே இருக்கும் மற்றொரு ஒற்றுமை,  இவர்கள் அனைவரும் தமது சமூகத்தை அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து காப்பதில் முதன்மை பங்கு வகுத்தவர்கள்.

தெளிவாக குறிப்பிட வேண்டுமென்றால் அவர்கள் தங்களது Career-ஐ அரசியல் கட்சியிலிருந்து துவக்கவில்லை. மாறாக எதேச்சதிகார அரசியல் அதிகார வடிவத்திற்கு வெளியே சமூக-அரசியல் இயக்கங்களாக மக்களுக்கு சேவை செய்தே தமது ஆரம்ப காலத்தை துவக்கினர்.இவர்களது ஆற்றலும் சமூக அந்தஸ்தும் அதிகரித்த போது, அதிகாரத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருப்போர் இவர்களை அரசியல் ரீதியாகவும், அடியாட்களை கொண்டும் கடுமையாக துன்புறுத்தினர். இம்மூன்று இயக்கங்களும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களையும் உள்நாட்டு ஆக்கிரமிப்பாளர்களையும் எதிர்த்து நிற்க என்றும் தயங்கியதில்லை. ஆயினும் உள்நாட்டு எதிரியையும் வெளியில் இருந்து வரும் எதிரியையும் எதிர்க்கும் தமது  வழிமுறைகளை வெவ்வேறாக அமைத்துக் கொண்டனர். உதாரணமாக, 2006-ம் ஆண்டு இஸ்ரேல் நேரடி இராணுவ நடவடிக்கை மூலம் ஹிஸ்புல்லாஹ்வை முறியடிக்க நினைத்த முயற்சி கைக்கூடவில்லை. இஸ்ரேல் வேதொரு திட்டத்தை தீட்டியது. அஹமது அல் அஸ்ஸார் என்பவர் தலைமையில் வஹாபிய சித்தாந்த படைகளைக் கொண்டு ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக லெபனானில் உள்நாட்டு போரை உருவாக்க முயன்றது.

ஆயினும் ஹிஸ்புல்லாஹ் இந்த சூழ்ச்சிக்கு பழியாகவில்லை. இந்த பிரச்சனையை தீர்க்க  அரசியல் மென்சக்தியை கையாண்டது.  லெபனான் அரசு நிறுவனங்களின் துணைக்கொண்டு அல்அஸ்ஸீரின் துரோக செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படிபட்ட வேறுப்பட்ட உத்தி(Differentiation Strategy) மூன்று இயக்கங்களுக்கும் அரசியல் பாதுகாப்பையும் தங்களது பகுதிக்கு வெளியிலும் அரசியல் அணிசேர்வதற்கான வாய்பையும் வழங்குகின்றது.

இப்படிபட்ட தெளிவான முறையை கையாள்வதால் தான் ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அன்ஸாருல்லாஹ் ஆகியவை வெளி அழுத்தங்களுக்கும், உள்நாட்டு துரோகங்களும் ஆளாகி வந்தாலும், அவர்களால் தங்களது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு, தங்களது கொள்கைசார் அரசியலில் தொடந்து பயணிக்க முடிகிறது.   உலகில் பல இஸ்லாமிய அமைப்புகள் சமூக சேவையையும் மக்களுக்கு தேவையான உதவிகளையும் எதேச்சதிகார அரசுகளை விடவும் அதிகம் செய்கின்றன. ஆயினும் அவற்றில் பெரும்பாலானவை இத்தகைய அரசுகளுக்கு அடிபணிந்தவையே. இங்கு எழும் கேள்வி முக்கியமானது. ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அன்ஸாருல்லாஹ் போன்ற இயக்கங்களை விடவும் பொருளாதார பலமும், மக்கள் வலிமையும் கொண்ட இஸ்லாமிய இயக்கங்களால் ஏன் தங்களது கொள்கைகையை ஆட்சிக்கட்டிலை நோக்கி நகர்ற்ற் முடிவதில்லை? இந்த கேள்விக்கான பதில் எளிமையானது. பெரும்பாலான இயக்கங்கள் தம்மை ஆளும் எதேச்சதிகார அரசுகள் உருவாக்கிய அமைப்பு முறைமைகளுக்குள் (Structures and Paradigm) தங்களை தகவமைத்துக் கொண்டிருக்கின்றன. இது அவர்களது ஒழுங்குத்திறனை மதிப்பிழக்க செய்கிறது.  இஸ்லாமிய எழுச்சியின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள் என்று அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இன்று பொது சமூகத்தின் முன்பு  அதிகாரத்திற்காக போட்டியிடும் மற்றுமோர் கட்சியாகவே பார்க்கப்படுகின்றனர்.

ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அன்ஸாருல்லாஹ் ஆகியவற்றின் வெற்றி இந்த புள்ளியிலேயே அடங்கியுள்ளது. இவர்கள் தமக்கான அரசியல், நிர்வாக மற்றும் சமூக அடிப்படைகளை இந்த முறைக்கேடான எதேச்சதிகார அமைப்புக்கு வெளியே உருவாக்கினர். எதேச்சதிகாரம் உருவாக்கி இருக்கும் அமைப்பில் இணையும் போது  தங்களுக்குரிய நிபந்தனைகளுடனே  இணைந்தனர். இதே முறையை ஈராக்கின் முக்ததா அல் சத்ரும் கையாண்டார். பல நேரங்களில் அவர் அரசியலில் தோல்வியை தழுவியரானாலும், ஈராக்கின் அரசியல் அரங்கை உலுக்கியதற்கான காரணம் அவர் தமது அரசியல் களத்தை ஏகாதிபத்திய அமெரிக்கா உருவாக்கிய அரசியல் கட்டமைப்பிற்கு வெளியே நடத்தினார். 2003-ல் ஆசிய டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தியின்படி பாக்தாத் வீழ்ந்தவுடன், பாத் கட்சி சிதைந்து இருந்த நேரத்தில், அங்கெழுந்திருக்கும் அரசியல் மற்றும் இராணுவ வெற்றிடத்தை நிரப்புவதில் முக்ததா மின்னல் வேகத்தில் செயல்பட்டார். தமது நம்பிக்கைக்கு உரியவர்களை ஷியாக்கள் அதிகம் இருக்கும் தென்பகுதி முழுவதும் அனுப்பி உள்ளூர் குழுக்களை உருவாக்கினார். அவர்கள் மூலம் மருத்துவமனைகள் கைப்பற்றப்பட்டன. தானியக்கிடங்குகள் பாதுகாக்கப்பட்டன. குப்பைகள் சேகரிக்கப்பட்டன. மின்சார நிலையங்களும், குடிநீர் நிலையங்களும் பாதுகாக்கப்பட்டன. சாலைகள் ஆங்காங்கே மூடப்பட்டு வன்முறையாளர்கள் தடுக்கப்பட்டனர். பாத் கட்சியின் அலுவலகங்கள் அனைத்தும் மார்க்க நிலையங்களாக மாற்றப்பட்டன. மேலேயுள்ள இயக்கங்கள் மற்றும் அமைப்புகளோடு ஒப்பிடும் போது எகிப்து மற்றும் ஜோர்டானில் செயல்படும் இஹ்வானுல் முஸ்லிமீனும் பாகிஸ்தானில் செயல்படும் ஜமாத்தே இஸ்லாமியும் முறைகேடான ஊழல் நிறைந்த அமைப்பில்  அரசியல் செய்யும் ஒரு பிரிவாக தாழ்ந்து இருக்கின்றன. அறிஞர் பெருமக்கள், செயற்பாட்டாளர்கள், அரபுலம் முழுவதும் பரவியிருக்கும் ஆதரவாளர்கள் என்று பெரும் ஆதரவுப்படையை கொண்ட இயக்கம் இஹ்வானுல் முஸ்லீமூன்.  இருப்பினும் அதனால் சொற்ப காலமே ஆட்சியில் நீடிக்க முடிந்தது. இஹ்வான்களுடன் ஒப்பிடும் போது ஃபலஸ்தீனீல் பயங்கரமான எதிரியையும், காத்திரமான சர்வதேச அழுத்தங்களையும் எதிர்கொண்டுள்ள ஹமாஸ், உள்ளூர் மட்டத்தில் அல்ல பிராந்திய அளவில் ஆட்சி செய்யும் தரப்பாக தொடர்ந்து நீடிக்கின்றது. இப்பிராந்தியத்தின் பல அரசுகளும் ஹமாஸுடன் உறவை பேணுவதன் மூலம் மதிப்பிற்குரிய அதன் ஆக்கிரமிற்கு எதிரான போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டதாக பெயரெடுக்க விரும்புகின்றன. ஹமாஸ் தன் மீது திணிக்கப்படும் எந்த கட்டுபாடுகளையும் ஏற்பதில்லை. எதிரிகள் வரைந்த கோடுகளுக்குள் நின்று விளையாடாமல், தமது சொந்த திட்டங்களின் அடிப்படையில் செயல்படும்  ஹமாஸுடைய மனநிலைப்பாடு(Mindset) தூர நோக்குப்பார்வை(Vision) மற்றும் அதன் தலைமை(Leadership) ஆகியவையே ஓப்பீட்டு அளவில் ஹமாஸின் மேம்பட்ட நிலைக்கான காரணங்கள்.

ஃபலஸ்தீனில் ஹமாஸ் சந்தித்ததை காட்டிலும் எகிப்தில் இஹ்வான்கள் அதிக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக சிலர் வாதாடலாம். துரதிருஷ்டவசமாக இது ஒரு குறுகிய பார்வை. 1970களிலும் 1980 களிலும் இஹ்வான்கள் சவூதி மற்றும் பிற மன்னராட்சிகளின் ஆதரவையும் பொருளுதவியையும் பெற்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் இஹ்வான்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படாத தருணங்களிலும் அவர்கள் இப்படிப்பட்ட அரசியல் பெருநகர்வை மேற்கொள்ளவில்லை.

வாஷிங்டனிலிருந்து செயல்படும் al-monitor.com என்ற இணையதளம் சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தது. அதில் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் ஜோர்டானில் அதன் அரசர் அப்துல்லாஹ் பின் அல்ஹுசைனின் ஆதரவோடு ஏப்ரல் 19, 1945 அன்று துவங்கப்பட்டதாகவும் இஹ்வானுல் முஸ்லிமீனின் நிருவனர் இமாம் ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்களின் மருமகன் அப்துல் ஹகீம் ஆபீதீனை ஜோர்டான் மன்னர் சந்தித்து ஆதரவு வழங்கியதாகவும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அமீரக ஜோர்டானுக்கு இஹ்வான்களின் சேவை அவசியம்  என்பதாக மன்னர் அப்துல்லாஹ் தெரிவித்ததாகவும், ஜோர்டான் தலைநகர் அமானில் நடைப்பெற்ற இயக்கத்தின் துவக்க நிகழ்வில் மன்னர் கலந்துக் கொண்டதாகவும் அந்த செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

அப்படியே 2020 ஆம் ஆண்டுக்கு வருங்கல். கடந்த டிசம்பர் மாதம், இதே ஜோர்டானின் சமூக முன்னேற்றத்திற்கான  அமைச்சகம் இஹ்வானுல் முஸ்லிமீனை தடை செய்தது. இத்தனை ஆண்டுகள் அரசு ஆதரவு பெற்றிருந்த இஹ்வான்களால் தங்களது இயக்கத்தை முதன்மை அரசியல் சக்தியாக மாற்ற இயலவில்லை. எந்த ஒரு அரசாலும் ஒரே கையெழுத்தில் மக்கள் செல்வாக்குள்ள இயக்கத்தை தடை செய்ய இயலாது என்பது வெளிப்படை. இஸ்ரேல் அரசால் ஹமாஸை தடை செய்ய இயலுமா? இந்த கேள்வியே நகைப்புக்கு உரியதாகவும், அப்படியே தடை செய்தாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஹமாஸின் செயல்பாடுகளுக்கு ஏற்படாது என்பதும் திண்ணம்.

கடந்த நூற்றாண்டின் முதன்மையான அறிஞர்களில் ஒருவரான சையித் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்) அவர்களால் ஜமாத்தே இஸ்லாமி பேரியக்கம் பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நாட்களில் ஜமாத்தே இஸ்லாமி ஆளும் வர்க்கத்தோடு நெருக்கமானதொரு தொடர்பை கொண்டிருந்தது. பொது மக்களின் பெரும் ஆதரவும் அதற்கு இருந்தது.  ஜமாத்தே இஸ்லாமியினால் அங்கீகரிக்கப்பட்ட அறிஞர்கள் பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்ட உருவாக்கத்தில் குறிப்பிடதக்க பங்காற்றினர்.

பொதுமக்கள் ஆதரவு, குறிப்பிடதக்க நிர்வாக மற்றும் பொருளாதார பலம், களத்தில் நின்று பணியாற்றுவதற்கு பற்றாக்குறையற்ற ஊழியர்களின் எண்ணிக்கை என்று பலவும் சாதகமாக இருக்கும் இயக்கம் தற்போது பாகிஸ்தானில் ஊழலில் கொழுத்த தலைவர்களுக்கு எதிராகவும், சீர்குலைந்த அரசமைப்பிற்கு எதிரான மாற்று அரணாகவும் நின்றிருக்க வேண்டும். இன்று பாகிஸ்தானில் ஊழலும் நிலவுடைமை சமூக அரசியலமைப்பும் வலுவாக காலூன்றியுள்ளன. பெனாசிர் பூட்டோ, நவாஸ் ஷரீஃப், ஆஸிஃப் அல் சர்தாரி போன்ற ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளே இன்று பாகிஸ்தான் அரசியலின் ஆதர்ஷ நாயகர்களாக இருக்கின்றனரே அன்றி, அபுல் அஃலா மெளதூதியோ அல்லது அவரது மாணவர்களோ அல்ல.

பல தசாப்தங்களாக அரசியலில் இருந்தும் ஏன் ஜமாத்தே இஸ்லாமியினால் சமூக அரசியல் தளத்தில் தம்மை மாற்று சக்தியாக நிறுவ முடியவில்லை? ஜமாத்தே இஸ்லாமியின் முதன்மை தலைவர்களில் ஒருவரான ஆஸிஃப் லுக்மான் காஸி, அமெரிக்க சிந்தனையாளர் மன்றங்களில்(Think Tank) ஒன்றான Brooklyn நிறுவனத்திற்கு எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “ஜமாத் நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கூட்டணியில் பங்கெடுத்து இருக்கிறது. இரண்டு மாகாணங்களில் ஆட்சி செய்யும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டணியான முத்தஹிதா மஜ்லிஸே அமால் கூட்டணிக்கும் அது தலைமை தாங்குகிறது. கைபர் பங்குத்துவா மாகாணத்தில் இம்ரானின் தெஹ்ரிக்கீ இன்ஸாஃப் கட்சியுடனும் கூட்டணியில் இருக்கின்றது. பாகிஸ்தானில் இருக்கும் கட்சிகளிலேயே ஜமாத்தே இஸ்லாமி தான் அதிக ஜனநாயக தன்மையுடன் இயங்கக்கூடிய கட்சி. ஜமாத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டுகிறதோ அதே அளவு அதில் பங்கேற்பதிலும் காட்டுகிறது”.

இந்த மனநிலை தான் பாகிஸ்தானில் ஜமாத்தே இஸ்லாமியையும் மற்ற இடங்களில் பிற இஸ்லாமிய இயக்கங்களையும் அரசியல்-சமூக மாற்று சக்தியாக மாறவிடமால் தடுத்து நிறுத்துகிறது. ஜமாத்தும் அதனை ஒத்த பிற இயக்கங்களும் நிறுவப்பட்டுள்ள சமூக-அரசியல் அமைப்பில் தங்களை இணைத்து கொள்கின்றன. இதனால் அவை மற்றுமொரு மாக்கியவல்லி(Machiavelli) அரசியல் கட்சியாகவே பார்க்கப்படுகிறன.

இந்த ஆய்வை படிக்கும் ஒருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் முஸ்லிமல்லாதோருடன் கூட்டு சேர்ந்ததை(Alliance) சுட்டிக்காட்ட எண்ணலாம். உண்மைதான், மேன்மைமிக்க இறைத்தூதரின் கூட்டணி என்பது ஒருபோதும் சுயம் இழந்து அடிபணிந்த ஒன்றாக இருக்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்களது அரசியல் ஒருபோதும் கூட்டணிக்காக தமது கொள்கைகளையும் இலக்குகளையும் சமரசம் செய்துக் கொண்டதல்ல.  இருதரப்பிற்கும் நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே கூட்டணி அமைத்தார்கள். கூட்டணியில் இருதரப்பும் சம அந்தஸ்த்தில் இருந்தன. இறைவேதமும் இறைமார்க்கமும் இப்படிபட்ட கூட்டணியை அனுமதித்து இருக்கின்றன.

ஆனால் முஸ்லிம் நாடுகளில் நடப்பதோ வேறு. மன்னராட்சிகளும் அதனை பின்னால் இருந்து இயக்குபவர்களும் இஸ்லாமிய அமைப்புகளை பகடை காய்களாகவும், தமது நாசவேளைக்கான உருபடிகளாகவுமே (Tools of Sabotage) பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் எகிப்தில் சலஃபிய மரபை பின்பற்றும் நூர் கட்சிக்கு சவூதி அரசு பொருளாதார உதவி செய்து அந்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்தது இதற்கு ஓர் உதாரணம். இதேபோல சிரியாவில் இஸ்லாமிய அமைப்புகளை ஏகாதிபத்தியம் தமது நலனுக்காக பயன்படுத்தி அந்நாட்டையே அழித்ததையும் நாம் அறிவோம். நிறுவப்பட்ட அமைப்பிற்குள் நின்று நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த இஸ்லாமிய பிரக்ஞை உடைய பலரும் போராடிய துருக்கியிலும் கூட சந்தர்பவாத தலைவர் ஒருவரை தான் அதிபராக்க முடிந்தது. அவரால் இஸ்லாத்தை மக்களை திரட்டுவதற்கான கருவியாக பயன்படுத்த முடிந்ததே தவிர இராஜாங்க கொள்கை முடிவுகளை (Strategic Policy decisions) இஸ்லாத்தின் அடிப்படையில்  எடுக்க முடியவில்லை. பெரும் கேடுகளை விளைவித்த சிரியா தொடர்பான முடிவுகள், இஸ்ரேல் உடன் கொஞ்சி குழாவுதல், அரை மனதுடன் சவூதி ஆட்சியை எதிர்த்தல் என துருக்கி அதிபர் எர்துனானின் அனைத்து கொள்கை முடிவுகளும் இந்த வழிமுறையின் தோல்வியை விளக்க போதுமானதாகும்.இந்த ஆய்விலிருந்து எதேச்சதிகார முறைகேடான அரசுகள் ஆட்சியில் இருக்கும் சூழலில் ஒரு இஸ்லாமிய இயக்கம் அரசியலில் நுழைவதற்கு முன்பு மூன்று காரணிகளை கொண்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

1) அதன் தலைமை மரபார்ந்த வழியில் இஸ்லாத்தை பயின்றவர்களை கொண்டதாகவும், அத்தலைவர்கள் போராட்டக் களங்களில் நிற்பவர்களாகவும், தியாகம் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

2) நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்டமைப்பிற்கு வெளியே தமது சொந்த வழியில் எந்த வெளிக்கட்டுபாடுகளுக்கும் பணியாது தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். இது மிகவும் சவாலான அதிகம் தியாகத்தை வேண்டும் ஒரு பணி. அதன் பிறகு நிறுவப்படுள்ள அரசியல் அமைப்பில் நுழைய வேண்டும்.

3) அரசியல் தளத்தில் தம்மையும் ஒரு பங்காளராக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில்  மட்டுமே நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்டமைப்பில் இணைந்து விடக்கூடாது. அப்படி தாமாக இணைவது இஸ்லாமிய இயக்கத்தை பத்தோடு பதினொன்றாக மாற்றிவிடும்.

– அய்மன் அஹ்மது

(Crescent International, Canada)

மூலம்: Crescent International

(தமிழில் : அஸ்லம்)