ஸைய்யித் ஜமாலுத்தீன் அல் அப்கானீ (நவீனகால இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஆரம்ப விதை)
ஒழுக்க நலன்களையும், உயர் பண்புகளையும் அணிகளாய்க் கொண்ட அறிவுத் தேட்டத்துக்காய் அரும் முயற்சி எடுத்து வரும் ஏராளமான இந்திய இளைஞர்களை இங்கு நான் காண்பது எனக்கு அளவிலா மகிழ்ச்சியைத் தருகின்றது. நிச்சயமாக நான் மகிழத்தான் வேண்டும். ஏனென்றால், இந்த இளைஞர்கள் மானுடத்தின் தாயகமாம் இந்தியாவின் தவப்புதல்வர்கள். இந்தியாவிலிருந்து வையகமெங்கும் பரவின மானிட விழுமியங்கள். எந்த மண்ணில் நடுநாள் வட்டம் (Meridian Circle) முதன்முதல் நிர்ணயமானதோ அந்த மண்ணைச் சார்ந்தோர் இந்த வாலிபர்கள். ராசி மண்டல அமைப்பினை முதன் முதல் புரிந்துணர்ந்த பூமியினர் இந்த இளைஞர்கள். கேத்திரகணிதத்தில் முழுமையான அறிவில்லாதவர்களால் இவ்விரு மண்டலங்களையும் தீர்மானித்தல் சாத்தியமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஆக, எண் கணிதத்தையும், கேத்திரத்தையும் அறிமுகம் செய்தவர்கள்கூட இந்தியரே என நாம் கூறலாம். இந்திய எண்கள் இங்கிருந்து அரபியருக்கும், அங்கிருந்து ஐரோப்பவுக்கும் சென்று சேர்ந்தமையைச் சற்றே கவனத்தில் கொண்டு பாருங்கள்.
மட்டுமல்ல. இந்த இளைஞர்கள், உலகத்தின் அனைத்துச் சட்டங்கள், நியதிகளது தாயகமாம் மண்ணின் மைந்தர்களும்கூட. சிறிதே நுணுகி ஆராயும் எவரும் மேற்குலகச் சட்டவிதி ஆதாரமான ரோமன் சட்டக் கோவை (Code Romain)யானது, நான்கு வேதங்களிலும் சாஸ்திரங்களிலிருந்தும் பெறப்பட்டதே என்பதைக் கண்டுகொள்வர். இலக்கியக் கோட்பாடுகளென்ன, தெள்ளிய கவிதைகளென்ன, அனைத்திலும் கிரேக்க விற்பன்னர்கள், இந்தியர்களின் மாணவர்களாகவே விளங்கி வந்துள்ளனர். இம்மாணாக்கருள் ஒருவரே பைதகோரஸ். அறிவியலையும், ஞானத்தையும் கிரேக்கத்தில் பரப்பிய அவரது வார்த்தைகள், தெய்வீக வாசகங்களே போலும் எவ்வித கேள்வியுமின்றி அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தத்துவ ஞானத்தின் சிகரக் கொடுமுடியை எட்டிக்கொண்டோர் இந்தியர். இந்திய மண் அதே மண். இந்தியக் காற்று அதே காற்று அதே மண்ணின் அதே தட்ப வெப்பத்தின் கனிகளே இங்கு வந்துள்ள இந்த இளைஞர்கள். இவர்கள் நீள்துயில் நீங்கியெழுந்து, தமது முந்தின சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடியவர்களாய், தமது சொந்த விருட்சங்களின் கனிகளைச் சேகரிக்க முனைந்துள்ளமையைக் காண நான் நிச்சயம் மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்!
இனி,விஞ்ஞானம், கற்பித்தல், கற்றல் என்பன பற்றி நான் உங்கள் முன்னிலையில் சிறிது பேசவிரும்புகின்றேன். விஞ்ஞானம் குறித்துப் பேசுவதென்பது எத்துணைச் சிரமமானது! விஞ்ஞானம் முடிவில்லாதது: எல்லையில்லாதது. விஞ்ஞானத்தின் நன்மைகள் அளவிறந்தன. வரையறைகளுக்குள்ளான எமது சிந்தனைகளுக்குள் வரையறையற்றதான ஒன்றை நாம் உட்படுத்திக் காண முடியாது. ஆயிரக்கணக்கான சொல் விற்பன்னர்களும், ஞானவான்களும் விஞ்ஞானமும் அதன் மகோன்னதத்துவமும் குறித்து தமது எண்ணங்களை ஏற்கனவே எடுத்துரைத்துள்ளனர். என்றாலும்கூட, அதன் சிறப்புக்களைப் பற்றி நானும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
சற்றே ஆழமாக ஆராய்ந்து காண்போர் விஞ்ஞானமே அகிலத்தை ஆட்சி செய்து வருகின்றது என்பதைக் கண்டுகொள்வர். அன்றும், இன்றும், என்றும் உலகை ஆள்வது விஞ்ஞானமேயன்றி வேறில்லை. ஸெமிராமிஸ் முதலிய பெருவீரர்கள் மூலம் சால்டியர்கள், தாத்தாரிய- இந்திய எல்லைகளையும் அடைந்து கொண்டனர். அவர்கள் வெற்றிகளையெல்லாம் அவதானித்தால், வெற்றிகள் கண்டது சால்டியர்கள் அல்லர்: அறிவும் விஞ்ஞானமுமே என்பது எளிதில் புலனாகும்.
எகிப்தியர்கள் மிகவும் வெற்றிகரமாகத் தமது எல்லைகளை விரிவாக்கிக் கொண்டனர். ஸோஸஸ்தரிஸ் என அழைக்கப்பட்ட இரண்டாம் ராம்ஸஸ், மொஸப்பட்டேமியாவை வெற்றி கொண்டார். அவர் இந்தியாவையே அடைந்த தாகவும் கூறுவர் சிலர். இதனைச் சாதித்தது, விஞ்ஞானமேயன்றி, எகிப்தியர்களல்லர்.
ஃபீனீஷியர்களை எடுத்துக் கொள்ளுங்கள், தமது கப்பல்களின் துணையுடன் பிரிட்டிஷ் தீவுகள், ஸ்பெயின், போர்த்துகல், கிரேக்கம் ஆகிய பகுதிகள் அனைத்தையு தம் கீழ்க் கொண்டு. வந்தனர் அவர்கள். இந்த அதிகாரப் பரம்பலுக்குக் காரணம் விஞ்ஞானமேயன்றி ஃபீனீஷியர்கள் அல்லர்.
இந்தியாவுக்கு வந்ததோ. இந்தியாவை வெற்றி கொண்டதோ அலக்ஸாந்தர் அல்ல. இந்தியாவை வெற்றி கொண்டது விஞ்ஞானமே.
உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஐரோப்பியர் இன்று கை வைக்கத் தொடங்கி விட்டனர். ஆப்கானிஸ்தானை அடைந்து விட்டனர் ஆங்கிலேயர். டூனீஷியாவை வெற்றி கொண்டுள்ளனர் பிரான்சியர். யதார்த்தத்தில். இச்சூறையாடல், ஆக்கிரமிப்பு, படையெடுப்பு ஆகியவற்றை நிகழ்த்துவது ஆங்கிலேயரோ பிரான்சியரோ அல்லர். எல்லாத் திக்குகளிலும் விஞ்ஞானமே தனது வல்லமையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. விஞ்ஞானத்தின் முன்னால் மண்டியிட்டு தன் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்வதேயன்றி, அறியாமைக்கு வேறு வழி ஏதும் இல்லை.
உண்மையில், விஞ்ஞானத்தின் உறைவிடம் எங்குள்ளதோ, அங்குதான் ஆட்சியதிகாரமும் வீற்றிருக்கும். எவ்வாறாயினும், உண்மையான ஆட்சியாளனான விஞ்ஞானம் தனது தலைநகரங்களை மாற்றிக்கொண்டே வந்திருக்கின்றது. சில சமயம் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும், சில சமயம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் அது நகர்ந்து வந்துள்ளது. இதற்கும் மேலாக, உலகத்துச் செல்வங்கள் குறித்து நாம் அவதானிப்போமாயின் வணிகம், கைத்தொழில், விவசாயம் ஆகியவற்றின் விளைவே செல்வவளம் என விளங்கிக்கொள்வோம். விவசாய விஞ்ஞானம், தாவரவியல், வேதியியல், கேத்திர கணிதம் முதலியவற்றால் விவசாய சாதனைகள் சாத்தியமாயின. இயற்பியல், வேதியியல், இயந்திரவியல்,கேத்திர கணிதம் முதலியன கைத்தொழிற் சாதனைகளுக்குத் துணை நின்றுள்ளன. வணிக வளர்ச்சிகளோ, இவ்விவசாய, கைத்தொழில் சாதனைகளையே காலாகக் கொண்டன.
இவ்வாறு, அனைத்துச் செல்வ வளங்களும் விஞ்ஞானத்தால் விளைந்தவையே என்பது வெள்ளிடை மலை, விஞ்ஞாளம் இன்றேல் செல்வம் எதுவும் கூட உலகில் கிடையாது. மொத்தத்தில் முழு மானிட உலகமும் கைத்தொழில் மய உலகமே. வார்த்தைகளில் கூறுவதானால் உலகம் என்பது விஞ்ஞான உலகமே. மானிட உலகிலிருந்து விஞ்ஞானம் அகற்றப்படக் கூடுமாயின் உலகில் மனிதனே எஞ்சியிருக்க மாட்டான்.
அதனால்தான், விஞ்ஞானமானது, தனியொரு மனிதன் பத்து, நூறு, ஆயிரம்,பல்லாயிரம் பேரின் சக்தியைக் கொண்டிருக்கக்கூடிய ஆற்றலை அளிக்கின்றது. மனிதர்கள் தமக்காகவும், தமது அரசுக்காகவும் சேகரிக்கக்கூடியன அனைத்தும் அவர்களது விஞ்ஞான வளர்ச்சியின் விகிதாச்சாரத்துக்கு இயைந்ததாகவே அமையும். எனவே ஒவ்வோர் அரசும் தனது சொந்த நலன்களுக்காக விஞ்ஞான அடித்தளத்தை அமைத்துக் கொள்வதும் அறிவைப் பரப்புவதும் அத்தியாவசியம். ஒரு பழத்தோட்டத்தின் உரிமையாளன் தனது சொந்த நலன்களுக்காக, நிலத்தைப் பண்படுத்தி பயிர்களையும், மரங்களையும் விவசாய விதிகளுக்கமைய வளர்க்க வேண்டும். அது போலவே ஆட்சியாளரும் தமது சொந்த நலன்களைப் பேணிக்கொள்ள வேண்டுமாயின் விஞ்ஞானங்களின் பரம்பரைக்காகப் பாடுபட வேண்டும். பழத்தோட்டக்காரன், விவசாய விதிகளை அனுசரித்துப் பணிகளை விருத்தி செய்யத் தவறினால் பெரும் நஷ்டத்துக்குள்ளாவது நிச்சயம். அதுபோலவே, ஓர் ஆட்சியாளன் தனது மக்களிடையே விஞ்ஞானங்களைப் பரப்பவும் வளர்க்கவும் தவறினால், அது அவனது அரசுக்கே தீங்காக முடிந்துவிடும். வறுமையும் தரித்திரமும் பீடித்ததொரு சமூகத்தை ஆளும் ஓர் அரசனுக்கு என்னதான் நன்மை கிட்ட முடியும்? அத்தகு அரசனை ஓர் அரசன் என்றுதான் அழைக்க முடியுமா?
விஞ்ஞானத்தின் மேன்மையயை ஓரளவு நாள் விளக்கி யுள்ளதால், இனி, விஞ்ஞானம் கற்றல், கற்பித்தல் என்பவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்துச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையும் குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்ததாகவே உள்ளது என்பதும், அப்பொருள் சார்ந்த சேவைகள் விளைவுகள் குறித்தன்றி வேறு எது குறித்தும் அது பேசுவதில்லை என்பதும் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய அம்சம். உதாரணமாக, இயற்பியல் புறவுலகில் காணப்படும் சடப்பொருள்களின் சிறப்பம்சங்களையும், தன்மைகளையும் குறித்து ஆராய்கின்றதே ஒழிய, மனிதகுலத்துக்குத் தேவையான ஏனைய விவகாரங்கள் மீது அக்கறை காட்டுவது இல்லை. கீமியா எனும் வேதியியல், பொருள்களின் பகுப்பாய்வு, கூட்டுச் சேர்க்கை தொடர்பான சிறப்பு அம்சங்கள் குறித்துப் பேசுகின்றது. தாவரவியல் தாவரங்களை மட்டுமே தனது ஆய்வுப் பொருளாகக் கொண்டுள்ளது. எண் கணிதம் வெவ்வேறு பரிமாண அளவுகள் பற்றியும், கேத்திர கணிதம் இணைபரிமாண அளவுகள் பற்றியும் பேசுகின்றன. ஏனைய விஞ்ஞானத் துறைகளும் இவ்வாறே எந்தவொரு விஞ்ஞானத்துறையும் தனது பொருளுக்கு அப்பாற்பட்ட விவகாரங்கள் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
நன்கு ஆராய்ந்தால், தனியொரு பொருள் குறித்த ஒவ்வொரு விஞ்ஞானத் துறையும் விஞ்ஞானம் என்ற உடம்பின் ஓர் உறுப்பே என்பது புலனாகும். எந்தவொரு விஞ்ஞானத் துறையும் தன்னளவில் தனித்துவிட்ட தனது இருப்பைப் பேணிக் கொள்வதென்பது இயலாது. தனித்துவிட்ட நிலையில், மனிதகுலத்தின் நன்மைக்கு ஒரு காரணியாக விளங்கவும் அதனால் முடியாது. ஒவ்வொரு விஞ்ஞானத் துறையும் அதனதன் இருப்புக்காக இன்னொரு விஞ்ஞானத் துறையுடன் தொடர்புபட்டதாகவே உள்ளது; கேத்திர கணிதத்துக்கும் எண் கணிதத்துக்குமிடையிலான தொடர்பு போல.
ஏனைய விஞ்ஞானத் துறைகளின் இருப்புக்காக ஒரு விஞ்ஞானத் துறை எத்துணை அவசியமானது என்பதைத் தனியொரு விஞ்ஞானத் துறையைக் கொண்டு மட்டும் நாம் விளங்கிக்கொள்ள முடியாது. தனிமைப்படுத்தப்பட்ட ஒரு விஞ்ஞானத் துறையில் முன்னேற்றம் காண்பது சாத்தியமானல்ல. அத்துடன் அந்நிலையில் அது தனது நிலைத் தன்மையையும் இழந்துவிடும். எனவே அனைத்து விஞ்ஞான துறைகளதும் ஆன்மாவாய் மிளிரும் தகைமையும் ஆளுமையும் கைவரப்பெற்றதொரு விஞ்ஞானம் அவசியம். அத்தகையதொரு விஞ்ஞானம்தான். எல்லா விஞ்ஞானங்களின் இருப்பை உறுதிப்படுத்த முடியும்; அவை எங்கெங்கு பிரயோகம் ஆக வேண்டுமென்பதை ஒழுங்குபடுத்த இயலும்; ஒவ்வொரு விஞ்ஞானத் துறையினதும் வளர்ச்சிக்கு ஓர் உந்து சக்தியாக விளங்க முடியும்.
அனைத்துத் துறைகளின் இருப்பினை உறுதி செய்து அணைக்கவல்ல ஆன்மாவைக் கொண்டதொரு விஞ்ஞானம் எதுவெனின்,அது ஃபல்ஸஃபா அல்லது தத்துவஞானம் ஆகும். ஏனெனில் அதன் பொருள் அகிலத்துவத் தன்மையானது. மனிதகுலத் தேவைகளை முன்கூட்டியே மனிதனுக்குத் துலக்கிக் காட்டுவது அது. தேவைகள் யாவையென்பதனை விஞ்ஞானங்களுக்குக் காட்டித்தருவதும் அதுவே. விஞ்ஞானங்களின் ஒவ்வொரு துறையும் எங்கெங்கு பயன்பட வேண்டும் என்பதனை நிர்ணயிப்பதும் அதுவே.
ஒரு சமூகத்து உறுப்பினர்கள் அனைவருமே விஞ்ஞானத்தின் பல்வேறு துறைகளிலும் புலமை பெற்றிருப்பினும்கூட, தத்துவஞான விசாரம் அவர்களிடையே இல்லையெனில் அவ்விஞ்ஞானங்கள் நூற்றாண்டு காலங்கள் அச்சமூகத்தில் நிலைபெறப் போவதில்லை. தத்துவஞான உணர்வற்ற ஒரு சமூகம் தனது விஞ்ஞானங்களின் தீர்வுகளை அனுமானித்துக் கொள்ளும் தகைமையைக் கூடப் பெற்றிராது.
உதுமானிய அரசினரும், எகிப்திய ராஜாங்கத்தாகும் கடந்த 60 ஆண்டுகளாக நவீன விஞ்ஞானங்களின் போதனைக்கெனப் பாடசாலைகளை நிறுவி வருகின்றார்கள். இன்று வரை அந்த விஞ்ஞானங்களிலிருந்து அவர்கள் எவ்விதப் பயனையும் ஈட்டிக் கொள்ளவில்லை. அப்பாடசாலைகளில் தத்துவஞானங்களைக் கற்பிப்பது சாத்தியம் அற்றுப் போனதுதான் அதற்குக் காரணம், தனித்தனி அவயவங்கள் போன்ற அவ்விஞ்ஞானங்களிலிருந்து பயன் பெற முடியாமற் போனமைக்குக் காரணம் தத்துவஞான போதனை நிகழாமையாகும். தத்துவ உணர்வுகள் காணப்பட்டிருப்பின் இந்த அறுபது ஆண்டு காலத்திற்குள் அவர்கள், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து விடுபட்டவர்களாக விஞ்ஞான ரீதியாகத் தமது அரசுகளைக் கட்டமைப்பதற்கான முயற்சிகளை நிச்சயம் மேற்கொண்டிருப்பர். தம் புதல்வர்களை ஆண்டுதோறும் கல்வித் தேட்டத்துக்கென ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்கள் அனுப்பியிருக்க மாட்டார்கள்; தமது பாடசாலைகளில் கல்வியைப் போதிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்திருக்கவும் மாட்டார்கள். ஒரு சமூகத்தில் தத்துவ உணர்வு காணப்பெற்றால், அச்சமூகம் குறிப்பிட்ட ஒரு விஞ்ஞானத் துறையைத் கொண்டிராத நிலையிலும் ஐயத்துக்கிடமின்றி அவர்களது தத்துவ உணர்வானது அனைத்து விஞ்ஞாளங்களையும் அடைவதற்கான அறைகூவலை நிச்சயம் விடுத்திருக்குமென நான் கூறுவேன்.
ஆரம்ப முஸ்லிம்கள் விஞ்ஞானத்தைக் கொண்டிருக்கவில்லை. என்றாலும், இஸ்லாமிய மார்க்கம் காரணமாக அவர்கள் மத்தியில் தத்துவ உணர்வொன்று தலையெடுத்தது. அத்தத்துவ உணர்வு காரணமாக ஆரம்ப முஸ்லிம்கள் உலகின் பொது விவகாரங்கள் குறித்தும், மனிதகுல தேவைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலானார்கள். அதனால்தான் வெகு குறுகிய காலத்தினுள் அவர்களால் பல்வேறு விஞ்ஞானத் துறைகளிலும் தேர்ச்சி காண முடிந்தது. மன்ஸூர் தவானகீயுடைய காலத்தில் அவர்கள், ஏராளமான விஞ்ஞான நூல்களை ஸிரிய, பாரசீக, கிரேக்க மொழிகளிலிருந்து அரபியில் மொழியாக்கம் செய்யலாயினர்.
மனிதனை மனிதன் புரிந்து கொள்ளச் செய்வது தத்துவஞானமே. மனிதகுல மாண்பினைத் துலக்கிக் காட்டுவதும், மனிதகுலத்திற்கான நேர்வழியினைக் காட்டித் தருவதும் அதுவே, வீழ்ச்சிப் பாதையை நோக்கி விரையும் எந்தவொரு தேசத்திலும் முதலாவது பலவீனம், ஆரம்பக் குறை, அதன் தத்துவ உணர்விலேயே தோற்றம் பெறும். அதன் பின்னரே அக்குறைபாடுகள் அத்தேசத்தின் ஏனைய விஞ்ஞானங்களுக்கும், கலைகளுக்கும், கழகங்களுக்கும் பரவும்.
இனி நான் முஸ்லிம்கள் மத்தியில் கற்பித்தல், கற்றல் என்பனவற்றின் தரம் குறித்து சிறிது கூற விரும்புகின்றேன். இன்றைய நாட்களில் முஸ்லிம்கள் தம் கல்வியால் எவ்வித நன்மையையும் பெறுவதாகத் தெரியவில்லை உதாரணமாக: அவர்கள் இலக்கணம் கற்கின்றார்கள். இலக்கணம் கற்பதன் மூலம் அரபு மொழி கற்போர், அம்மொழியைச் செவ்வனே பேசவும் எழுதவும் முடிகின்றது. ஆனால், இப்போது முஸ்லிம்களுக்கு இலக்கணம்தான் இலக்காக அமைந்திருக்கின்றது. நீண்ட பல ஆண்டுகளை அவர்கள் ஆழ்ந்த அக்கறையுடன் இலக்கணம் கற்திலேயே விரயஞ் செய்கின்றனர். அத்துணை முயற்சியுடன் இலக்கண அறிவை ஈட்டிக் கொண்டதன் முடிவில் அவர்களால் அரபு மொழியைப் பேசவோ, எழுதவோ, விளங்கிக் கொள்ளவோ கூட முடிவதில்லை.
இலக்கியம் என்பது ஒருவர் எழுந்தாளராக, பேச்சாளராக அல்லது கவிஞராக உருவாவதற்கு உதவும் ஓர்,அறிவுத்துறையாகும். இவர்கள் இலக்கியம் எனக் கொண்டிருப்பதோ வெறும் சொல் அலங்காரமும் வார்த்தை ஜாலங்களுமே அதனால்தான் அவர்கள் இவ்வளவு கற்ற பின்னரும் தமது அன்றாட பேச்சைக் கூடச் சீர்படுத்திக் கொள்ள இயலாதிருப்பதை இன்று நாம் காண்கிறோம்.
கருத்துகளைச் சீர்தாக்கிப்பார்க்க உதவுவது தர்க்கவியல் அதனைக் கற்பவர்கள், நன்மை-தீமை, சத்தியம் அசத்தியும், உண்மை பொய்மை என்பவற்றைப் பிரித்தறிந்து காணும் தகைமையினராய் மாற வேண்டும். இன்றைய முஸ்லிம் தர்க்கவியலாளர் சிந்தையை நிறைத்திருப்பனவோ, வெறும் மூட நம்பிக்கைகளும், அறிவிலிகளின் அகம்பாவமுமேயாகும், அவர்களது கருத்துகளுக்கும், கடைத்தெரு ஜனக் கும்பலின் கருத்துகளுக்கும் இடையில் எவ்வித வித்தியாசத்தையும் காண முடியவில்லை.
தத்துவஞானம் அல்லது ஹிக்மா, புறவுலக இருப்புகளின் காரணிகள், நியாயங்கள், தேவைகள், அவசியங்கள் முதலியன குறித்து ஆராயும் விஞ்ஞானமாகும். நமது மதவியல் அறிஞர்களது நிலைமையோ பரிதாபகரமாக உள்ளது. தம்மைத்தாமே பெரும் ஞானியர் என்று உரிமை கோரிக்கொள்ளும் எமது மதவியலாளர்கள் ஸத்ராவையும், ஷம்ஸ்-அல்-பாரிஆவையும் கற்றுத் தேர்ந்தும் கூட தமது வலக்கரம் எது, இடக்கரம் எது என அறிந்துகொள்ள முடியாமல் இருப்பது விசித்திரம்தான். நாம் யார், எது சரி, எமக்கு உகந்தன யாவை என்றெல்லாம் அவர்கள் வினாக்கள் எழுப்புவதே இல்லை, மின்சாரம், நீராவிப் படகுகள், ரெயில் சேவைகள் என்பவற்றின் காரணிகள் குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை.
இதிலும் விசித்திரம் யாதெனில், மாலை முதல் காலை வரை அவர்கள் விளக்கை முன்னால் வைத்துக் கொண்டு ஷம்ஸ் அல் பாரிஆவைக் கற்கின்றனர். என்றாலும் கண்ணாடிச் சிமிழை அகற்றியதும் விளக்கிலிருந்து புகை கிளம்பாமலிருப்பதேன், என அவர்கள் கிஞ்சிற்றேனும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இத்தகைய தத்துவஞானி வெட்கப்பட வேண்டும். அத்தகைய தத்துவஞானமோ பெரும் வெட்கக் கேடு. உலகின் அனைத்து நிகழ்வுகளாலும் அம்சங்களாலும் சிந்தையில் உந்துதல் பெறுபவனே தத்துவஞானி. யாத்திரையின் ஆரம்பமும் முடிவும் அறியாதவனாய் பாதையில் பயணிக்கும் குருடனல்லன் அவன்.
குடும்ப, நிறுவன, அரசியல் சட்டங்கள் முதலியன அனைத்தையும் தன்னுள் கொண்டதே முஸ்லிம்களது நியாயாதிக்கம். நிதித் துறையினை கற்றுத் தேர்ந்தார் ஒருவர் நாட்டின் பிரதமராக, அரசியல் பிரதிநிதியாக அமைவதற்குத் தகைமை உடையவராவார். எமது சட்டவியல் விற்பன்னர்களோ அத்துறையில் போதிய பாண்டித்யம் பெற்ற பின்னரும், தமது சொந்த வீட்டு விவகாரங்களைக்கூடச் சமாளிக்க முடியாமல் தினறுகின்றார்கள். மட்டுமா? தமது மடமையில் பெருமை காணவும் செய்கின்றார்கள்.
கோட்பாடுகள் பற்றிய அறிவுத் துறையானது, ஷரீஆவின்
தத்துவத்தை அல்லது சட்டவியலின் தத்துவத்தை வரையறுத்துத் தருகின்றது. சரி. பிழை, நன்மை- தீமை, பயன் இழப்பு என்பனவும் சட்டங்களில் பிரகடனத்துக்கான காரணிகள் முதலியனவும் அதில் விளக்கப்படுகின்றன. இத்துறையில் கற்றுத் தேர்ந்தவர் நிச்சயமாக சட்டவாக்கம் செய்பவராகவும், நாகரிக அம்சங்களை நிலைபெறச் செய்யும் தகைமையராகவும் அமைதல் வேண்டும். ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் அவ்வறிவுத்துறையைக் கற்பவர்கள், சட்டலியலின் நன்மைகள், நாகரிகத்தின் விதிமுறைகள், உலகின் சீர்திருத்தம் என்பன குறித்துத் தெளிவு பெறும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறாதவர்களாகவே அமைந்துள்ளனர்.
ஆக, இன்றைய எமது மதவியல் அறிஞர்கள் சின்னஞ் சிறியதொரு கடரைத் தன் உச்சியில் கொண்ட மெல்லியதொரு திரியே போல் ஆவர். இச்சிறு சுடரால் தனது சுற்றுச்சூழலை ஒளிபெறச் செய்யவும் முடியாது: பிறருக்கு ஒளி வழங்கவும் முடியாது. உண்மை அறிவாளியொருவர் ஒளியே போல் ஆவார். உலக முழுவதும் அவரது ஒளி பரவுதல் வேண்டும். அது இயலாது போனால், குறைந்த பட்சம், தமது பிராத்தியத்தில், நகரத்தில், கிராமத்தில் அல்லது வீட்டிலேனும் ஒளி பரவச் செய்தல் அவருடைய கடமை. தன் சொந்த வீட்டுக்குக் கூட ஒளி வழங்க இயலாத ஒருவர் என்ன வகை அறிவாளியோ?
இவையனைத்தையும் விட விசித்திரம், நமது மதவியல் அறிஞர்கள் விஞ்ஞானத்தை இரு வகையாகப் பிரித்துள்ளமையாம். ஒன்றை முஸ்லிம் விஞ்ஞானமென்றும் மற்றதை ஐரோப்பிய விஞ்ஞானமென்றும் அவர்கள் பிரித்தமைத்துள்ளனர். இந்த வகைப்படுத்தலின் விளைவாகப் பயனுள்ள விஞ்ஞானங்கள் கற்பிக்கப்படுவதனை அவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். எந்த ஒரு தேசத்துடனும் தொடர்புப்படாத உன்னத தத்துவ நிலையில் உள்ளது விஞ்ஞானம் என்பதையும் அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அறியப்பட்டன யாவும் விஞ்ஞானத்தால் அறிய வந்தனவே. புகழ் பூத்தனவாய் பரிணமித்த அனைத்துத் தேசங்களும் அந்நிலையை ஈட்டிக்கொண்டது விஞ்ஞானத்தின் மூலமே. மனிதர்களை விஞ்ஞானத்தோடு தொடர்புபடுத்திக் காண்பதே தகும். விஞ்ஞானத்தோடு மனிதர்களைத் தொடர்புபடுத்திக் காண்பது தகாது.
அரிஸ்டோட்டலுடன் சம்பந்தப்பட்ட விஞ்ஞானங்களை அரிஸ்டோட்டலை முஸ்லிம்களின் தூண்களில் ஒன்றாகவே கொண்டு பெரும் பரவசத்துடன் முஸ்லிம்கள் பயில்வது எத்துணை பெரிய விந்தை! உரையாடல் கலீலியோ, நீயூட்டன், கெப்லர் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக அமையின், அவர்களை நிராகரிப்பாளர்களாய்ப் பிரகடனஞ் செய்து முற்றாக ஒதுக்கித் தள்ளி விடுவர் நம்மவர். ஆதாரம்தான் விஞ்ஞானத்தின் அன்னை தந்தை; ஆதாரம் என்பது அரிஸ்டோட்லோ, கலீலியோவோ அல்ல. ஆதாரம் எங்குண்டோ உண்மை அங்குண்டு. இஸ்லாமிய மதத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற நம்பிக்கையினராக விஞ்ஞானத்திற்கும், அறிவுக்கும் தடைகளை இடுவோர், உண்மையில் இஸ்லாத்தின் விரோதிகளேயாவர். மதங்கள் அனைத்திலும் விஞ்ஞானத்துடனும் அறிவுமையுடனும் பிணைந்து அமைந்தது இஸ்லாமிய மதமே. விஞ்ஞானம், அறிவு என்பவற்றுக்கும், இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடித்தளத்துக்கும் இடையே எவ்வித ஒவ்வாமையும் கிடையாது.
இஸ்லாத்தின் அத்தாட்சியெனப் புகழ்ந்துரைக்கப்பட்ட கஸ்ஸாலி, தமது பாவமன்னிப்பு எனும் நூலில் கூறுவன கவனத்திற் கொள்ளத் தக்கன. கேத்திர கணித ஆதாரங்களுக்கு தத்துவ விளக்கங்களுக்கும் இயற்கையின் விதிகளுக்கும் ஒவ்வாதது இஸ்லாம் என வாதிடும் ஒருவர் இஸ்லாத்தின் ஓர் அறிவிலா மூட நண்பார் என்பார் அவர். வேத நிந்தகர்களாலும், இஸ்லாத்தின் விரோதிகளாலும் ஏற்படும் பாதகங்களைவிட, இத்தகு மூட நண்பனால் இஸ்லாத்துக்கு ஏற்படும் பாதகங்கள் பெரியது. இயற்கை விதிகளும், கேத்திர கணித ஆதாரங்களும், தத்துவ விளக்கங்களும் சுயமான ஆதாரங்கள் கொண்ட உண்மைகளாகும். எனவே, ‘“எனது மார்க்கம் ஈய ஆதாரம் கொண்ட உண்மைகளுடன் இணக்கம் காணாது ” எனக் கூறும் ஒருவர், தவிர்க்கவியலாத வகையில், தனது மார்க்கம் போலியானது என்றே தீர்ப்பு கூறுகின்றார்.
மனிதன் பெற்ற முதற்கல்வி மதக் கல்வியாகும். ஏனெனில், விஞ்ஞான அறிவினை ஈட்டி, ஆதாரங்களையும் விளக்கங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சமூகமே தத்துவார்த்த அறிவினைப் பெற்றிருக்க முடியும். எனவே, நமது மதத் தலைவர்கள் முதலில் தம்மைத் தாம் சீர்திருத்தித் தமது விஞ்ஞானத்தினதும் அறிவுத் துறையினதும் பயன்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யாத வரையில் முஸ்லிம்கள் ஒருபோதும் சீர்திருந்தப் போவதில்லை என நாம் உறுதியாகக் கூற முடியும்.
ஆழ்ந்து சிந்திக்கும் ஒருவர் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ளலாம். ‘நாம் அனுபவித்துள்ள சீர்கேடும் அழிவும் முதலில் பீடித்தது நமது மதவியல் அறிஞர்களையே; அதன் பின்னரே சமூகத்தின் ஏனைய பகுதிகளை அவை ஊடுருவி தம் ஆதிக்கத்தினைப் பரப்பின’ என்பதே அந்த உண்மை.
தமது வாக்குக்கு மாறாக, இக்கல்வி நிறுவனத்தின் முதல்வர் எனது உரையைச் சுருக்கிக் கொள்ளும்படி பணித்துள்ளதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
(1882 நவம்பர் 8ஆம் தேதி வியாழக்கிழமை கல்கத்தா அல்பர்ட் அரங்கில் ஸெய்யத் ஜமாலுத்தீன் அல் ஆப்கானி (1838-1897) ஆற்றிய உரை.)