2004 மார்ச் 22 அன்று காஸாவில் ஒரு மனிதர்கூட உறங்கி இருக்க மாட்டார். துக்கமும் உணர்ச்சியும் பெருமையும் ஒன்று சேர்ந்த ஒரு சூழல் அங்கு நிலவியது. அன்று மஸ்ஜித் முஜம்மாவில் சிதறிப்போனது ஷேக் அஹ்மது யாஸீன் உடல் மட்டுமல்ல, ஃபாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டங்களை ஒளிமயமாக்கிய நாயகனும்,  சக்கர நாற்காலியில் அமர்ந்து எதேச்சதிகாரச் சக்திக்கு எதிராக நெஞ்சுயர்த்தி நின்று அஞ்சாமல் போராட தைரியம் அளித்த மிகப்பெரும் ஆளுமையும்தான்.

இந்தளவிற்கு மக்களால் நேசிக்கப்பட்ட, செல்வாக்குப் படைத்த இவரைப் போன்ற தலைவர் அவர்களுக்கிடையில் இதற்கு முன்பு இருந்ததில்லை. அன்றிலிருந்து ஃபாலஸ்தீன தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளுக்கு விடுதலையைக் கற்றுத்தர இன்னொரு மாமனிதரின் வரலாறு அங்கு படைக்கப்பட்டது.

அநாதை, அகதி, நோய், சோர்வு, போராட்டம், சிறை, தலைமை இறுதியில் உயிர் தியாகம் என ஷேக் அஹ்மது யாஸீனின் வாழ்க்கை வீரம் செறிந்ததாகவே இருந்தது. ஒரு மனிதரின் வாழ்க்கையில் எதிர்கொள்ள இயலுமான எல்லை வரைக்கும் சோதனையும், அதற்கு எதிரான போராட்டத்தாலும் வண்ணமயமாக்கப்பட்ட வரலாறு அது.

வாழ்க்கையில் என்றாவது சோர்வடைகிறோம் என்று எண்ணும் வேளையில் அல்லது  சிறிய நோய் நம்மைப் பிடிக்கும்போது அதனை நம் இயக்கப் பணிகளிலிருந்து விலகுவதற்கான காரணமாக நாம் யோசித்தால், ஷேக் அஹ்மது யாஸீனின் புகைப்படத்தினை ஒருமுறை நாம் பார்க்க வேண்டும். பாதி செயலிழந்த உடலின் மேல் அழகான புன்முறுவலுடன் அலங்கரிக்கப்பட்ட  அம் முகத்தை பார்த்த உடன், சோம்பல் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு நம்மை வீரியமுடன் செயல்படத் தூண்டும். சோதனைகள் அடைமழையாக பெய்தபோதும் நிலைகுலையாத இறைநம்பிக்கையையும், இறைவனையே சார்ந்திருத்தலையும் அந்த முகம் நமக்கு கற்றுத்தரும்.

ஷேக் அஹமது யாஸீனின் வாழ்க்கை நமக்களித்த உத்வேகமும் போராட்ட உணர்வும் அவரின் ஷஹாதத் மூலம் பன்மடங்கு அதிகரித்தது. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு ஷேக் அஹ்மது யாஸீன் என்று பெயர் சூட்டும் தாய்மார்கள், அவர்களை ஷேக் அஹ்மது யாஸீன் என்று அழைப்பதற்காக மட்டுமே அவ்வாறு பெயர் சூட்டவில்லை. மாறாக விடுதலைப் பேசும் இன்னொரு ஷேக் அஹ்மது யாஸீனின் வருகையைக் கனவு கண்டதின் வெளிப்பாடு அது.

வெற்றி உறுதியாக்கப்பட்ட போராட்டத்திற்குதான் அந்த மக்கள் புறப்பட்டார்கள். வரலாறு கடந்தாலும் அந்தப் போராட்ட வழியில் உத்வேகம் அளிக்கும் ஒரு பெயர் என்றும் அவர்களின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கும்.

அதுதான் ‘ஷஹீத் ஷேக் அஹ்மது யாஸீன்’.

  • சுஹைப் C T