இப்போதெல்லாம் ஒருவர் இறந்துவிட்டால் யுகத்தின் முடிவாக வர்ணிப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் இன்று உண்மையிலேயே யுகம் ஒன்று முடிவுக்கு வந்துவிட்டது. டி கே அப்துல்லாஹ் சாகிப் அவர்களுடன் ஐயத்திற்கிடமின்றி யுகம் ஒன்று பின்னிப் பிணைந்திருந்தது.

டிகே அப்துல்லாஹ் என்பது ஒரு மகத்தான ஆளுமைக்கான, நற்பண்புகளின் உறைவிடத்துக்கான, இதயங்களைக் கவர்கின்ற சொல்லுக்கும் செயலுக்குமான அழகிய பெயராக மட்டும் இருக்கவில்லை. அது ஒரு இயக்கத்தின் பெயராகவும் இருந்தது. அவரே ஒரு நிறுவனமாகவும் ஒளி வீசினார். அவருடைய சிந்தனைகள் யுகத்தைக் கட்டமைக்கின்ற எண்ணப்போக்குளை செதுக்கி உருவாக்குகின்ற பட்டறையாக மிளிர்ந்தன. உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற அவருடைய ஆளுமையோ எண்ணற்ற மனிதர்களை உருவாக்குகின்ற நர்சரியாக இருந்தது. சத்தியத்தை எடுத்துரைப்பதில் அவரிடம் என்றென்றும் கனன்று கொண்டிருந்த தணியாத தவிப்பும், அடங்காத ஆர்வமும், சோர்வையோ, தளர்வையோ, துவளலையோ ஒருபோதும் காணாத அவருடைய சலிக்காத உழைப்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மனித வாழ்வின் உண்மையான தகிப்பையும் அர்த்தத்தையும் அழகையும் அறிமுகப்படுத்தின என்றால் அது மிகையல்ல. இன்னொரு பக்கம் அவருடைய சிந்தனைகளும் புதுப்புது பரிமாணங்களில் சிந்தனைக்களங்களை வார்த்தெடுக்கின்ற அவருடைய முயற்சிகளும் சித்தாந்தக் களத்தை எல்லாப் பருவங்களிலும் செழிப்பாக வைத்தவாறு புத்துணர்வூட்டிக் கொண்டே இருப்பதில் முக்கியமான பங்காற்றின.

மௌலானாவின் மரணம் எனக்கு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு ஆகும். என்னுடைய வாழ்வின் எண்ணற்ற பரிமாணங்கள் அவருடைய பன்முக ஆளுமையின் தாக்கங்களைத் தொடர்ந்து பெற்று வந்துள்ளன. ஒரு நீண்டக் காலம் வரை வெவ்வேறு வழிவகைகள் மூலமாக நான் அவருடைய சீடராகத் தொடர்ந்து இருந்து வந்துள்ளேன் என்பது எனக்கு பெருமிதமளிக்கின்ற விஷயமாகும். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக. சுவனத்தில் உயர்ந்த சோலைகளில் சேர்த்துக் கொள்வானாக. ஆமீன்.

மர்ஹூம் டி கே அப்துல்லாஹ் சாகிப் 1972-இலிருந்து நான் பிறப்பதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பிருந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளார். என்னுடைய கணிப்பின் படி ஜமாஅத்தின் வேறு எந்தவொரு தோழரும் இந்த அளவுக்கு நீண்டகாலம் மத்திய ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்ததில்லை. அவர் அரபி, உர்தூ, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மகத்தான இலக்கிய ஆளுமையாக, ஆராய்ச்சியாளராக, எழுத்தாளராக, பன்னூலாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, விமர்சகராக, விரிவுரையாளராக இருந்தார். மேலும் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்ற, வசியப்படுத்துகின்ற பேச்சாற்றலால் சாமான்யகர்களைக் கட்டிப் போடுகின்ற பேச்சாளராக இருந்தார். மேலும் ஒரு நல்ல ஆசிரியராக, மக்களைப் பண்படுத்துகின்ற ஆசானாகவும் முத்திரை பதித்தார். மேலும் ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும், ஆலோசகராகவும், நேர்த்தியான முறையில் திட்டமிடுகிற வல்லுநராகவும் இருந்தார்.

அவருடைய அவைகளில் பரந்துபட்ட அவருடைய வாசிப்பின், நனிசிறந்த அறிவாற்றலின் நறுமணத்தையும் பழுத்த அனுபவத்தின் கண்ணியத்தையும் நுகரவும் உணரவும் முடியும். அதே சமயம் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் சரியான சந்தர்ப்பத்தில், கச்சிதமான டைமிங்குடன் அவர் உதிர்க்கின்ற முத்துகளும், அவை கிளப்புகின்ற திடீர் சிரிப்புகளும் ஒட்டுமொத்த அவையையே கலகலப்பாக்கிவிடும்.

மௌலானா டி கே அப்துல்லாஹ் அவர்களை நான் முதன்முதலில் 1992-இல் தான் எஸ்.ஐ.ஓ தஸ்கியா முகாம் ஒன்றில் சந்தித்தேன். அப்போது நான் பதினெட்டு வயது மாணவனாக இருந்தேன். அப்போதுதான் இயக்கத்தில் அடி எடுத்து வைத்திருந்தேன். பிற்பாடு நான் எஸ்.ஐ.ஓ-வின் மகாராஷ்டிர மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற போது அவருடன் ஒரு இரண்டு நாள் சிறப்பு அமர்வுகளை நடத்தினேன். மாணவர்களாகிய நாங்கள் அவரை மட்டுமே கேட்பதற்காக, அவருடன் மட்டுமே கலந்துரையாடுவதற்காக இரண்டு நாள்களை ஒதுக்கி இருந்தோம். ஜமாஅத்தின் சூழலில் பொதுவாக எடுத்துரைக்கப்படுகின்ற பேசு பொருளைக் காட்டிலும் மாறுபட்டதாகவும் அதிரக் கூடியதாகவும் சிலிர்த்தெழச் செய்வதாகவும் அவருடைய சிந்தனையும் பேச்சும் இருக்கும். புத்துணர்ச்சி அளிப்பவையாகவும் அவை இருக்கும். அவர் ஜமாஅத்தின் பலவீனங்கள் குறித்தும் எந்தவிமான தயக்கமுமின்றி விமர்சிப்பார். புதிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து முற்றிலும் மாறுபட்ட பரிமாணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவார். அவை முற்றிலும் புதியவையாய், மலைக்கச் செய்வதாய் இருக்கும். இளைஞர்களுடன் வெகு விரைவில் அவர் ஒன்றிப் போவார். இளைய தலைமுறையினரின் சிந்தனைப்போக்குகளைத் துல்லியமாகக் கணித்துவிடுவார். மார்க்கப் புலமையுடன் புதிய பாதைகளைக் குடைந்து வழியமைக்கின்ற அவருடைய இந்தப் பண்பின் தகிப்பை நேரடியாக உணர்ந்த தருணங்கள் ஏராளம். ஏராளம்.

அதன் பிறகு எண்ணற்ற முறை சந்தித்திருக்கின்றேன். கலந்துரையாடி இருக்கின்றேன். 2007-இல் நான் மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருடன் தொடர்ந்து நீண்ட நேரம் பேசுவதற்கான, பழகுவதற்கான, உரையாடுவதற்கான சாத்தியங்கள் உருவாயின. பேசி நாளாகி விட்டால் அவரே தொடர்பு கொள்வார். சில சமயம் நானும் அவரிடம் சென்று விடுவேன். இயக்க, ஜமாஅத் சார்ந்த விவகாரங்களிலிருந்து சமகால பற்றியெரிகிற பிரச்னைகள்,சித்தாந்தங்கள் வரை, தேச, சர்வதேச அரசியல், பொருளாதார நடப்புகளிலிருந்து ஃபிக்ஹு, சூஃபிஸ போக்குகள், இலக்கிய, கவிதை தளங்கள் வரை ஏராளமான தலைப்புகளில் அவர் சரளமாகப் பேசுவார். செய்திகளையும் கருத்துகளையும் விமர்சனப் பார்வையையும் அருவியாக் கொட்டுவார். உரையாடுகின்ற தொனியும் பேசுகின்ற பாணியும் எந்த அளவுக்கு இதயங்களைக் கொள்ளை கொள்ளுகின்ற விதத்தில் இருக்கும் எனில் நாம் நம்முடைய சம வயதையொத்தவருடன் பேசிக் கொண்டிருக்கவில்லை; அதற்கு மாறாக இயக்கத்தின் முன்னோடியான மூத்த தலைவருடன் உரையாடிக் கொண்டிருக்கின்றோம் என்கிற நினைப்பே வராது. இந்த மாதம் கூட அவர் வெவ்வேறு தரப்பினர் வழியாக வெகுவிரைவில் என்னைச் சந்திக்க இருப்பதாக செய்தி சொல்லி அனுப்பினார். நான் அடுத்த மாதம் – அதாவது நவம்பரில் – அவரைச் சந்திக்கச் செல்வது எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் வாய்ப்புக் கேடாக அது நடப்பதற்கான சாத்தியமே இல்லாமல் போயிற்று. அவர் தம்முடைய வாழ்நாளின் தவணையை முழுமைப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

டி கே அப்துல்லாஹ் சாகிப் மலபார் மாநிலத்தின் பாரம்பர்யமான, புகழ் பெற்ற ஆலிம்களின் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் அந்த வட்டாரத்திலேயே மிகவும் மரியாதைக்குரிய மார்க்க அறிஞராக இருந்தார். கேரளத்தின் பல்வேறு மார்க்க மதரஸாக்களில் அவர் படித்தார். தம்முடைய தந்தையின் வாரிசாக உருவாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தர்ஜுமானுல் குர்ஆன் பத்திரிகையையும் மௌலானா மௌதூதி அவர்களின் ஆக்கங்களையும் அவர் வாசித்தார். சில நாள்களுக்குள்ளாக ஜமாஅத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்டார். ஜமாஅத்தின் பத்திரிகையான பிரபோதனம் இதழின் ஆசிரியராக, தொடர்ந்து ஆய்வு இதழான போதனம் இதழாசிரியராகப் பொறுப்பேற்றார். மாநிலத் தலைவராச் செயலாற்றினார். மத்திய பிரதிநிதிகள் சபை, மத்திய ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராகத் தேர்வானார். மேலும் பல்வேறு தளங்களில் ஜமாஅத்துக்குச் சேவையாற்றினார்.

டி கே அப்துல்லாஹ் சாகிப் அல்லாமா இக்பாலின் ஆக்கங்களையும் கவிதைகளையும் ஆழ்ந்து வாசித்திருந்தார். நூற்றுக்கணக்கான கவிதைகளை மனனம் செய்திருந்தார். அவற்றை சரியான நேரத்தில் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தவும் செய்தார். இதே போன்று மௌலானா மௌதூதி அவர்களின் ஆக்கங்கள் அனைத்தையும் அவர் வாசித்து முடித்திருந்தார். இன்னும் சொல்லப் போனால் மௌலானா அவர்களால் எழுதப்பட்ட, அதிகமாகப் பேசப்படாத அபூர்வமான கட்டுரைகளையும் சிற்றேடுகளையும் கூட அவர் விட்டு வைக்கவில்லை. அவருடைய வாசிப்பு எந்த அளவுக்கு ஆழமானதாக இருந்ததெனில் அவற்றின் பல பகுதிகளை அவர் மனத்தில் பசுமையாக நினைவில் வைத்திருந்தார். இந்தப் பண்பையும் இயக்கத் தோழர்களில் வெகு அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.

குர்ஆன் மஜீத், நபிமொழி விளக்கவுரைகள், கிளாசிகல் இஸ்லாமிய இலக்கியங்கள், அரபி கவிதை நூல்கள் போன்றவற்றை அவர் அசாதாரணமான முறையில் கரைத்துக் குடித்திருந்தார். உரையாடுகின்ற போது தம்முடைய கருத்துக்கு வலு சேர்க்கின்ற விதத்தில் பொருத்தமான அரபி கவிதைகளை எடுத்துரைக்கின்ற ஆற்றலும் அவருக்கு இருந்தது. இவற்றுடன் நவீன சித்தாந்தங்கள், சிந்தனைப் போக்குகள் போன்றவற்றிலும் அவர் ஆழ்ந்து கவனித்து வந்தார். மேற்கத்திய அறிஞர்களின் லேட்டஸ்ட் புத்தகங்களை வாசிப்பதும் அவற்றைக் குறித்து விவாதிப்பதும் அவருடைய வழக்கமாகவே இருந்தது. இருபதாண்டுகளுக்கு முன்பு உலகமயமாக்கல் மிகப் பெரும் சவாலாக எழுந்த போது இது குறித்து மணிக்கணக்கில் பேசியிருக்கின்றார்.

பேச்சின் ஊடே ஏதேனுமோர் புதிய புத்தகத்தைப் பற்றி அறிய நேரிடுகின்ற போது அதனை எப்படியாவது தருவித்து வாசித்து விட பரபரப்பார். நான் ஹைதராபாதிலிருந்து அவருக்கு இப்படிப்பட்ட நூல்களைத் தருவித்து அனுப்பியிருக்கின்றேன். அதன் பிறகு அவருடன் இது போன்று பின் நவீனத்துவம், புலுரலிஸம் போன்ற தலைப்புகளிலும் ஆழமான, நீளமான உரையாடல்கள் நடந்திருக்கின்றன. சமீப காலங்களில் அடையாள அரசியல் பற்றி ஆழமான விவாதங்களில்தான் அவர் அதிகமாக ஆர்வம் காட்டி வந்தார்.

பரந்துபட்ட அறிவு, அரபியிலும் உர்தூவிலும் கவிப் புலமை, அதனுடன் மலையாள இலக்கியத்தில் வல்லமை ஆகிய அனைத்தும் கலந்த அழகான கவிதையாய் அவருடைய உரைகளும் பேச்சும் ஜொலிக்கும். அவற்றுடன் இயல்பான நகைச்சுவை உணர்வு குதூகலமாய் கலந்து விட, கூடுதலாக மலையாளத்துக்கும் தமிழுக்கும் மட்டுமே இருக்கக்கூடிய அடுக்கு மொழி பாணி அணி சேர்ந்துகொள்ள, அவர் நாவிலிருந்து வற்றாத ஜீவ நதியாய் வந்து விழுகின்ற வார்த்தைச் சரங்கள் கேட்பவர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டுவிடும். நேரம் போவதே தெரியாமல் மக்கள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சில சமயம் மணிக்கணக்கிலும் உரை நீண்டுகொண்டே போகும்.

மக்கள் திரள் முன்பாக அவர் ஆற்றிய எத்தனையோ நீளமான உரைகளை நானும் கேட்டிருக்கின்றேன். மொழி தெரியாத போதிலும் ஆற்றொழுக்கான நடையில் ஏற்ற இறக்கங்களுடன் அவர் ஆற்றுகின்ற தொனியே மொழியற்ற எங்களைப் போன்றவர்களையும் ரசித்துக் கேட்க வைத்துவிடும். ‘இந்த இங்கிலிஷ் டயலாக் – கலந்துரையாடலுக்கான மொழி. அதில் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்கான சாத்தியமே இல்லை. உர்தூ மொழியோ கஜல் – கவிதைகளின் மொழி. சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்கு ஏற்ற மொழி மலையாளம்தான்’ என்றே அவர் சொல்வார். அவருடைய உரைகளைக் கேட்ட பிறகு அவருடைய இந்தக் கூற்று உண்மைதான் என்கிற உணர்வுதான் மேலோங்கியது.

அல்லாமா இக்பால் இறைவனிடம் மீண்டுவிட்ட போது கவிஞர் ஒருவர் சொன்னார்:

ஸாஸ் மஷ்ரிக் மே சமூதி நக்மா ஏ மக்ரிப் கி லே
தூ நே பஹ்ர் தீ நயே பியாலோ மே சிஹ்பாயே கஹ்ன்

கிழக்கத்திய ராகத்தில் மேற்கத்திய பாடலை அடைத்து விட்டாய்
புதிய கிண்ணங்களில் நீ பழைய சிவப்பு மதுவை நிரப்பிவிட்டாய்
(அதாவது மேற்கத்திய சிந்தனைகளின் நல்ல அம்சங்களை கிழக்கத்திய மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்)

டி. கே. அப்துல்லாஹ் சாகிபுக்கும் இது பொருந்தும். டி. கே. அப்துல்லாஹ் சாகிபும் கேரளத்துக்கும் உர்தூ பேசுகின்ற மாநிலங்களுக்கும் இடையில் இந்த வேலையைத்தான் செய்தார். மௌலானா அவர்களின் மகத்தான பங்களிப்பே கேரளத்தின் தவிப்பை, தகிப்பை, உஷ்ணத்தை, துடிப்பை, செயலூக்கத்தின் உயிர்த்துடிப்பை உர்தூ பேசுகின்ற மாநிலங்களில் பரிமாற்றுவதற்காக பெரிதும் பாடுபட்டார். மேலும் கேரளத்தின் துடிப்பும் தீரமும் மிக்க இளவல்களுக்கு இஸ்லாமிய இயக்கத்தின் மூலாதாரமான சிந்தனைகளை எளிமையாகக் கரைத்து புகட்டி, அவர்களின் துடிப்பையும் தவிப்பையும் செயலூக்கத்தின் உயிர்த்துடிப்பையும் பொருத்தமான, சமநிலையான கருத்தோட்டத்தோடு பிணைத்து வைத்தார். வாழ்நாள் முழுவதும் அவர் இந்த இரண்டு நோக்கங்களுக்காகவோ அயராமல் பாடுபட்டு வந்தார். உர்தூ பேசுகின்ற மாநிலங்களில் காணப்பட்ட சிந்தனைரீதியான, செயல்ரீதியான முடக்கத்தைப் பார்த்துத் தவித்துப் போவார். மிகவும் கவலைப்படுவார். அதே சமயம் மலையாளத்து வட்டாரங்களில் சித்தாந்த, கோட்பாடு சார்ந்த உறுதிப்பாடு குறித்து எந்நேரமும் கவலைப்படுவார். அவர் தில்லி வருகின்ற போதெல்லாம் மாற்றத்துக்கான, இஜ்திஹாத் செய்வதற்கான குரலாக ஓங்கி முழங்குவார். இன்னும் சொல்லப்போனால் அவற்றுக்கான அடையாளச் சின்னமாகவே மாறிவிடுவார். மேலும் கோழிக்கோடு திரும்பிவிட்டாலோ அங்கு இயக்கத்தின் அடிப்படையான கோட்பாடுகளின் வலுவான பாதுகாப்பு அரணாக உயர்ந்து நிற்பார். ‘தில்லிக்காரர்கள் என்னை ரிஃபார்மிஸ்ட் (சீர்திருத்தவாதியாக) பார்க்கின்றார்கள். என்னுடைய உள்ளுர் காரர்களோ என்னை ஃபண்டமென்டலிஸ்ட்டாக (அடிப்படைவாதியாக) பார்க்கின்றார்கள்’ என்றே அவர் சிரித்துக்கொண்டே சொல்வார்.

மௌலானா மௌதூதி(ரஹ்) அவர்கள் தம்முடைய காலத்தில் ஹாகிமிய்யத்தே இலாஹ் – இறைவனின் ஆட்சியதிகாரத்தை தம்முடைய முயற்சிகள், பணிகள் அனைத்துக்கும் அச்சாணியாக ஆக்கி வைத்திருந்ததைப் போல நாமும் தற்போதைய காலகட்டத்தில் அல்லாஹ்வின் மாலிகியத் – அல்லாஹ்தான் உரிமையாளனாக இருக்கின்றான் என்கிற கருத்தோட்டத்தை நம்முடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் அச்சாணியாக, மையப் புள்ளியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் டி. கே. அப்துல்லாஹ் சாகிபின் நிலைப்பாடாக இருந்தது. மௌலானா மௌதூதி அவர்களின் காலத்தில் மேற்கத்திய செக்குலர் ஸ்டேட் – அரசாங்கம்தான் அசலான தாஃகூத்தாக இருந்தது. இன்றையக் காலத்திலோ முதலாளித்துவ ஏகாதிபத்தியம்தான் அசலான தாஃகூத்தியாக சக்தியாக இருக்கின்றது. அதுதான் இயற்கை வளங்கள் அனைத்தையும் வளைத்துப் போட்டு தனதாக்கிக் கொண்டு சாமான்யர்களை அடிமைகளாய் ஆக்கிக் கொண்டிருக்கின்றது என்பேதுதான் அவருடைய கருத்தாக இருந்தது. அவர் இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு பரிமாணங்களிலும் தளங்களிலும் மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டங்களிலும் அழுத்தமாகப் பதிவு செய்து வந்தார். இந்தியா போன்ற நாட்டில் முஸ்லிம் உம்மத்தின் பாதுகாப்பு தான் ஜமாஅத்தின் முதன்மை முன்னுரிமைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொல்லி வந்தார்.

மௌலானா அவர்களின் சில நிலைப்பாடுகள் எங்களுக்கும் ஏற்புடையதாய் இருந்தது. என்றாலும் அநேக விவகாரங்களில் நாங்கள் முரண்பட்டோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவருக்கு நேருக்கு நேராக நம்முடைய மாறுபட்ட கருத்துகளை எடுத்துரைப்பதில் எங்களைப் போன்ற அனுபவம் இல்லாத, புதியவர்களுக்கும் எந்தத் தயக்கமும் இருந்ததில்லை. கொள்கை, செயல்திட்டத்தை வரையறுப்பதற்கான கமிட்டியில் நானும் பங்கேற்கத் தொடங்கிய போது கமிட்டி கூடுவதற்கு முன்னால் அவரை சந்தித்து அவருடன் நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றம் நடத்துவதை நான் வழக்கமாகவே வைத்திருந்தேன். பல முறை அவருடைய அழைப்பை ஏற்று கேரளத்தில் அவருடைய வீட்டுக்கே சென்றிருக்கின்றேன். அருமையான, அமர்க்களமான விருந்தோம்பலுடன் நாள் முழுக்க அவருடன் விவாதித்திருக்கின்றேன். புதிய நான்காண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்கின்ற போது கவனத்தில் கொள்ள வேண்டியவை தொடர்பான தம்முடைய கருத்துகளை அவர் அழகாக எடுத்துரைப்பார். கொள்கை, செயல்திட்டம், ஜமாஅத் வகுக்க வேண்டிய ஸ்ட்ராடஜி – வியூகங்கள், அமைப்புச் சட்டத்தில் செய்ய வேண்டிய திருத்தங்கள் போன்றவற்றில் அவரைப் போன்று ஆர்வம் செலுத்துகின்ற மூத்த ஆளுமைகளை நான் குறைவாகத்தான் பார்த்திருக்கின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மத்திய ஆலோசனைக் குழு கூட்டத்தில் விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அதில் சில முக்கியமான, அடிப்படையான மாற்றங்களை பரிந்துரைத்திருந்தார். அந்தக் கட்டுரை தொடர்பாக விவாதிப்பதற்காகவே அவருடைய அறிவுறுத்தலுக்கிணங்க மத்திய ஆலோசனைக் குழுவின் தனி அமர்வு ஒன்றும் நடத்தப்பட்டது. அவர் முன் வைத்த விஷயங்கள் அனைத்தும் நமக்கு உடன்பாடானவை அல்ல. என்றாலும் அந்தச் சிறப்பு அமர்வில் வயதும் மூப்பும் கூடியிருந்த அந்தச் சமயத்திலும் அவருடைய சிந்தனையிலும் பார்வையிலும் வெளிப்பட்ட புத்துணர்ச்சி காலாகாலம் வரை நம் எல்லோருக்கும் ஊக்கமளித்துக்கொண்டே இருக்கும்.

முத்ததோ கர்தீ ஹே கர்திஷ் – ஜுஸ்தஜு மே காயிநாத்
தப் கஹீ மில்தா ஹே அய்ஸா மஹ்ரம் ராஸே ஹயாத்

பேரண்டமே ஒரு தேடலில் பல்லாண்டுகளாக சுழல்கின்றது
பிறகுதான் வாழ்வின் இரகசியத்தை அறிந்துகொண்ட இது போன்ற ஆளுமை கிடைக்கின்றது.

சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி.
அகில இந்தியத் தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்