கடந்த 19ம் தேதி லக்னோவின் பரிவர்தன் சவுக்கில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நான் போராடியபோது, வெறும் இந்தச் சட்டத்துக்கு எதிராக மட்டும் நான் போராடவில்லை. அது வெளிப்படையான, உடனடி எதிர்ப்பு.

பரிவர்தன் சவுக்கில் கூடியிருந்த என்னைப் போன்ற முஸ்லிம்களின் மனத்தில் இன்னொரு பேசப்படாத, ரொம்பவும் உணர்வுபூர்வமான போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அது கடந்த ஆறாண்டு கால நரேந்திர மோடி அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத செயல்திட்டத்துக்கு எதிரான போராட்டம். முஹம்மது அக்லாக், பெஹ்லு கான், தப்ரேஸ் அன்சாரி, ஜுனைத் கான் மற்றும் பெயர்கள் மறக்கடிக்கப்பட்ட இன்னும் பலரின் கும்பல் படுகொலைகளுக்கு எதிரான போராட்டம். முத்தலாக் மசோதா நிறைவேற்றத்துக்கு எதிரான போராட்டம்.  பாபர் மஸ்ஜித்-ராம ஜன்மபூமி நிலவுரிமை வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான போராட்டம். குடியுரிமைச் சட்டத் திருத்தம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம். இறுதியாக, எங்களை வீதிக்கு உந்தித் தள்ளியது டெல்லி காவல்துறையின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் மீதான அடக்குமுறை, அதற்கும் எதிரான போராட்டம் இது. கடந்த 2014ல் இருந்து அரசும் ஊடகமும் தொடர்ச்சியாக மேற்கொண்ட முஸ்லிம் விரோத செயல்திட்டங்கள் மீதான முஸ்லிம்களது உள்ளக்குமுறலின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் இந்தப் போராட்டம்.

“பொறுத்தது போதும்” என்ற மனநிலைக்கு வருவதற்கு முஸ்லிம்கள் ஏன் நெடுங்காலம் எடுத்துக் கொண்டார்கள்?

மோடி பிரதமரான முதல் ஐந்தாண்டில் முஸ்லிம் விரோதச் செயல்திட்டம் மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டதன் மூலம் ஒரு கூட்டு எதிர்ப்பு எழுவது தவிர்க்கப்பட்டது . கும்பலாகச் சேர்ந்து முஸ்லிம்களை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் பல அரங்கேறின. எனினும், அவை பல்வேறு மாநிலங்களில் பல்வேறு தருணங்களில் நடந்தன. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் எதிரான கூட்டு நடவடிக்கை எனச் சொல்லத்தக்க வகையில் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. முஸ்லிம்கள் மீதான அரசின் தாக்குதல் மறைமுகமாக இருந்தது. பசுக் “காவலர்கள்” எனும் உதிரிக் குழுக்கள், வாட்ஸ்அப் கட்டுக்கதைகள், “ஏன் முஸ்லிம்கள் பாரத் மாதா கீ ஜெய் சொல்வதில்லை?” அல்லது “அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஏன் ஜின்னாவின் படம் இருக்கிறது?” அல்லது “லவ் ஜிஹாத் என்றால் என்ன?” போன்ற தலைப்புகளில் கூச்சல்மிகுந்த தொலைகாட்சி விவாதங்களை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் அரசு தாக்குதல் நடத்தியது.

முஸ்லிம்களை அச்சுறுத்தும் நோக்கிலான அரசின் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைந்தன என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், பாஜக.வின் முதல் ஆட்சிக் காலத்தில் சொற்பமான முஸ்லிம்கள் மட்டுமே அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.

என்னைப் போன்றோர் பல்சமயக் கூட்டங்களில் கலந்து கரைந்துபோய், பலனற்ற விதத்தில் “Not in My Name” என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தோம். ஒற்றைத் திரளாகத் திரண்டு வெளிப்படையாகப் போராட முடியாத முஸ்லிம்களின் இயலாமை என்பது “மௌனமான சரணடைவாக” எடுத்துக் கொள்ளப்பட்டது.

எங்களுக்குள் நாங்கள் சொல்லிக் கொண்டது: “தைரியமாக இருப்பதைவிட புத்திசாலித்தனமாக இருப்பதே சிறந்தது. அடக்குமுறையைத் தீவிரமாக எதிர்ப்பது அறிவுடைமை அல்ல; மாறாக, நம்முடையை வேலையை நாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டு செல்வதுடன், ஒவ்வொருவரும் பொருளாதாரரீதியில் தம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்.”

2019ம் ஆண்டு மே 23ம் தேதி இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்ததும், அரசாங்கம் தனது முஸ்லிம் எதிர்ப்புக் கதையாடலை சட்டமாக ஆக்கிடும் முயற்சிகளைத் தொடங்கியது. தம் மனைவியரை உடனடி விவாகரத்துச் செய்யும் முஸ்லிம் ஆண்களை சிறையில் அடைப்பதாக மிரட்டும் முத்தலாக் மசோதாவை ஜூலை மாதம் நிறைவேற்றியது. ஆகஸ்டில் 370வது பிரிவை ரத்துசெய்து, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கஷ்மீரை காலவரையின்றி முடக்கிப்போட்டது. டிசம்பரில், அதாவது உச்சநீதிமன்றம் அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை அறிவித்ததற்கு அடுத்த மாதமே, குடியுரிமைத் திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இது NRCயுடன் சேர்ந்து முஸ்லிம்களின் குடியுரிமையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

அவர்களுடைய செயற்திட்டங்கள் எல்லாம் சட்டங்களாக்கப்படும்போது, எதிர்த்துப் போராடக் கூடாது என்ற “அறிவுடைமை” உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. நீங்கள் மூலையில் முடக்கப்படும்போது, அதற்குமேல் நெருக்க முடியாது என்ற நிலை வரும்போது நிச்சயம் நீங்கள் மீண்டெழுவீர்கள், அல்லவா? அதுபோல, தொடர்ச்சியாக ஆத்திரமூட்டப்பட்டபோதிலும் ஆறாண்டுகள் அமைதிகாத்த முஸ்லிம்கள் இப்போது பெருமளவில் திரண்டு CAA-NRCக்கு எதிராக பதாகை ஏந்திப் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் உபியிலும், கர்நாடகத்திலும் போலீசார் போராட்டக்காரர்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட வழியமைத்துக் கொடுத்த பிறகே போராட்டங்கள் “வன்முறையாக” மாறின. இதுபோல் ஒடுக்கப்படுவோம் என்ற அச்சம்தான் கடந்த மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் போராடாததற்கு முக்கியக் காரணம். எனினும், காத்திரமாகப் போராட வேண்டுமெனில் அச்சத்தை மீறி மேலெழ வேண்டியிருக்கிறது என்பதுடன், துரதிர்ஷ்டவசமாக அதற்கான விலையையும் கொடுக்க வேண்டியிருக்கிறது.

நிறைய முஸ்லிம் அல்லாதவர்களும் இந்தக் காத்திரமான போராட்டத்தில் கலந்துகொண்டு இந்துத்துவத்திலிருந்து “ஆஸாதி” வேண்டி முழக்கமெழுப்புகிறார்கள். எனினும், முஸ்லிம் போராட்டக்காரர்கள் “அல்லாஹு அக்பர்” (இறைவன் மிகப் பெரியவன்), “லா இலாஹா இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) போன்ற தனித்துவமான இஸ்லாமிய முழக்கங்களை உதிர்க்கும்போது சிலர் தம் அசௌகரியத்தை வெளிப்படுத்துகின்றனர். பின்வரும் சசி தரூரின் ட்வீட் இதற்கொரு உதாரணம்: “நீங்கள் முஸ்லிம் வகுப்புவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் இந்துத்துவ வகுப்புவாதத்தை முறியடிக்க முடியாது. அடையாள அரசியல் இந்தியாவை சிதைத்துவிடும்.”

முஸ்லிம்கள் இலக்காக்கப்படுவது அவர்களுடைய மதத்தின் அடிப்படையில்தான் என்பதால் தம் சமயம் சார்ந்த முழக்கங்களை அவர்களுடைய மத அடையாளத்தை உறுதியேற்கும் நோக்குடன் எழுப்புகின்றனர். அரசு என் நம்பிக்கையின் காரணமாக என்னை ஒடுக்க நினைத்தால் பகிரங்கமாக நான் அதை உறுதியேற்பேன்.

1930களில் நாஸி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சென்ற யூத அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா ஆரன்ட் இப்படி எழுதினார், “ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே தற்காத்துக்கொள்ள வேண்டும்; ஒரு ஜெர்மானியராகவோ, உலகக் குடிமகனாகவோ, மனித உரிமைப் போராளியாகவோ அல்ல.”

ஜனநாயகம் உங்களுடைய நிலையிலிருந்தே போராடுவதற்கு உங்களை அனுமதிக்கிறது. பாதிப்புக்குள்ளாகாத பெரும்பான்மையினர் வேண்டுமானால் வெறும் ஓர் இந்தியராக மட்டும் போராடலாம். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு ஓர் இந்தியராகவும் சிறுபான்மையினராகவும் போராடுவதற்கு உரிமை இருக்கிறது.

டிசம்பர் 16ம் தேதி லக்னோவில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் நான் “அல்லாஹு அக்பர்” கூறவிடாமல் தடுக்கப்பட்டேன். “இது இந்தியா குறித்த விவகாரம்; மதத்தினுடையது அல்ல” என்று சொன்னார்கள். ஒரு முஸ்லிமாய் போராடும் உரிமை எனக்கு மறுக்கப்பட்டதால் அங்கிருந்து நான் கிளம்பிவிட்டேன். மதம் சார்ந்த கோஷங்கள் அரசின் கொள்கைகளில் நுழையக் கூடும் என்றோ “இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கு” தீங்கு விளைவிக்கும் என்றோ சிலர் வாதிடுகின்றனர். ஏன் முஸ்லிம்கள் எப்போதும் “இந்தியா எனும் கருத்தாக்கத்தை” பாதுகாக்குமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள்? அது ஆர்பாட்டத்தில் என்றாலும் சரி, தேர்தலிலும் சரி (ஃபாசிஸ்டுகளை விரட்ட வாக்களியுங்கள் என்பார்கள்). முஸ்லிம்களின் போராட்டங்களை மதச்சார்பற்றதாக்குமாறு கோராமல், முஸ்லிம் அல்லாதவர்களை “நான் முஸ்லிம்” என பதாகை ஏந்தச் சொல்லுங்கள். 2017ல் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதித்தபோது வெள்ளையர்கள் செய்தது போல. பெரும்பான்மைவாதத்தில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் பொறுப்பு பெரும்பான்மையினர் மீதுதான் இருக்கிறதே தவிர சிறுபான்மையினர் மீதல்ல.

பாராட்டுக்குரிய வகையில் சில சாமானிய இந்துக்கள் அந்தப் பொறுப்பைக் கையிலெடுத்துள்ளார்கள். எர்ணாகுளத்தைச் சேர்ந்த இந்துலேகா பார்தன் எனும் சட்டக் கல்லூரி மாணவியும், குறிப்பிடத்தக்க சமூக ஊடக ஆளுமையான பிரபா ராஜ் எனும் சென்னையைச் சேர்ந்த பெண்ணும் முஸ்லிம்களைப் போல ஹிஜாப் அணிந்து CAAவுக்கு எதிரான பேரணிகளில் பங்கெடுத்தனர். “போராட்டக்காரர்களை அவர்களின் உடைகளைக் கொண்டு அடையாளம் காணுங்கள்” என மோடி சொன்னதற்கு எதிரான செயல்பாடாக இது வெளிப்பட்டது. முஸ்லிம் அடையாளக் குறியீடாக இருக்கும் புர்காவும் ஹிஜாபும் CAA எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகிறது. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள் பலரும் தங்கள் மத அடையாளத்தை நிலைநாட்டும் பொருட்டு ஆர்ப்பாட்டத்துக்கு அவற்றை அணிந்து வருகிறார்கள். “உடைகளைக் கொண்டு அடையாளம் காணப்பட” வேண்டி நானும் அதை அணிந்தேன். அன்றிலிருந்து பொதுவெளிகளில் நான் ஹிஜாப் அணிந்தே இருக்கிறேன். அரசு நான் முஸ்லிமாக இருப்பதால் என்னைக் குறிவைக்கிறது. அதனுடைய சௌகரியத்துக்காகவாவது நான் “ரொம்ப முஸ்லிமாக” இருப்பேன்.

தமிழில்: நாகூர் ரிஸ்வான்